அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு கூடுதலாக எத்தனை சீட்?

Published On:

| By Pandeeswari Gurusamy

ADMK

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு 7 இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இன்று (மார்ச் 23) அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ADVERTISEMENT
யாருக்கு எத்தனை தொகுதிகள்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில், இந்த முறை கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பாஜக கடந்த முறை 20 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் 7 இடங்கள் கூடுதலாகப் பெற்று 27 தொகுதிகளில் களம் காண்கிறது.

கடந்த முறை 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, இந்த முறை 5 இடங்கள் குறைவாக பெற்று 18 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

ADVERTISEMENT

கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதன் விளைவாக, கடந்த முறையை விடக் குறைவான தொகுதிகளிலேயே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். 2021 தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் 191 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 178 தொகுதிகளில் மட்டுமே இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் அதிமுக தலைமையிலான கூட்டணி தேர்தலைச் சந்திக்க முழுமையாகத் தயாராகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share