2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். Amit Shah says BJP alliance will win
சிஎன்என் நியூஸ் 18 ஆங்கில ஊடகத்திற்கு அமித்ஷா அளித்துள்ள பேட்டியில், “தமிழகத்தில் திமுக அரசு தங்களது ஊழலை மறைப்பதற்காக தொகுதி மறுவரையறை பிரச்சனையை கிளப்புகிறார்கள். தென்னிந்திய மக்களுக்கு பாஜக அநீதி இழைக்காது. ப்ரோ ரேட்டா அடிப்படையில் தொகுதிகள் தக்கவைக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி நடக்கிறது. ஏனென்றால், தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
நான் இந்தி பேசுவதாக எதிர்தரப்பினர் என்னை விமர்சிக்கிறார்கள். நான் ஒரு குஜராத்தி. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
காங்கிரஸ் அரசு அனைத்து மொழி மாணவர்கள் மீதும் இந்தியையும் ஆங்கிலத்தையும் திணித்தது. ஆனால், அரசு தேர்வுகளை பிராந்திய மொழியில் பாஜக நடத்துகிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை பிராந்திய மொழியில் படிக்க வழிவகை செய்துள்ளோம்.
மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாக தான் பார்க்கிறது. இந்தியை மட்டும் ஊக்குவிக்கவில்லை. திமுகவில் உள்ள ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது” என்றார்.
தொடர்ந்து, வக்ஃப் சட்ட மசோதா குறித்து பேசிய அமித்ஷா, “கடந்த வாரம் வக்ஃப் சட்டம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடந்தபோது, ராகுல் காந்தி அமைதியாக இருந்தார். வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி அவைக்கே வரவில்லை. மேலும், அவர் வாக்களிக்கவில்லை. காங்கிரஸுக்கு வக்ஃப் சட்டம் பிரச்சனை என்றால் வாயை திறக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இரண்டு நாள் பயணமாக இன்று (ஏப்ரல் 10) இரவு சென்னை வரும் அமித்ஷா, கூட்டணி விவகாரம் தொடர்பாகவும் பாஜக அடுத்த மாநில தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் கட்சியின் சீனியர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஏற்கனவே, டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்திய நிலையில், சென்னையிலும் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Amit Shah says BJP alliance will win