வைஃபை ஆன் செய்த உடனேயே, மதுரையில் சாரல் மழை மட்டுமல்ல.. அழகிரி வீட்டில் அண்ணன்- தம்பி இடையேயான சந்திப்பில் பாசமழையும்தான் என டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
மதுரையில் திமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் ஸ்டாலின் புறப்படும் போது, மதுரையில் இருந்து மு.க.அழகிரி போனடித்துப் பேசினார்; மதுரை ரோடு ஷோ முடிந்ததும் இரவு டின்னருக்கு வீட்டுக்கு வர வேண்டும் என அழகிரி கேட்டுக் கொண்டார்; இதற்கு சரி பார்க்கலாம் என ஸ்டாலின் கூறியிருந்தார் என நாம் நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் எழுதி இருந்தோம்.
இதேபோல மதுரையில் நேற்று இரவு ரோடு ஷோ முடிந்ததும் சிறிது நேரம் ஹோட்டலில் போய் ஓய்வெடுத்தார் ஸ்டாலின். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள மு.க.அழகிரியின் வீட்டுக்கு சென்றார்.

மதுரையில் அழகிரியின் வீட்டுக்கு ஸ்டாலின் செல்வதற்கு சிலர் தடைகளையும் ஏற்படுத்தலாம் என நினைத்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமலேயே அழகிரி வீட்டுக்குப் போனார் ஸ்டாலின். அங்கு அழகிரி ஆதரவாளர்களும் திமுகவினரும் திரண்டு ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு தந்தனர். 11 ஆண்டுகளுக்குப் பின், அழகிரி வீட்டுக்கு ஸ்டாலின் வருகை தந்ததால் உற்சாகம் கரைபுரண்டோடியது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அழகிரி குடும்பம் தவிர அழகிரி ஆதரவாளர்கள் யாரும் முதலில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

இந்த சந்திப்பின் தொடக்கத்திலேயே, மு.க. அழகிரி மகன் துரைதயாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் விசாரித்திருக்கிறார். ஏனெனில் கடந்த 6 மாதங்களாக அமெரிக்காவில் துரை தயாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம்தான் அழகிரி, அமெரிக்காவில் இருந்து திரும்பினார். இதனால் துரைதயாநிதியின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்தார் ஸ்டாலின்.
இதற்கு ‘துரைக்கு பேச்சு பயிற்சிதான் தொடர்ந்து தருகிறாங்க.. விரைவில் நல்லா பேச்சு வந்திடும்னு நம்பிக்கை இருக்கிறது என அழகிரி பதில் தந்துள்ளார்.
பின்னர் ஸ்டாலினுக்கு இடியாப்பம், இட்லி பரிமாறப்பட்டது. அப்போது ஸ்டாலினிடம் அரசியல் ரீதியாக அழகிரி பேசினாராம்.
இந்த பேச்சின் போது, அழகிரியின் ஆதரவாளர்கள் மன்னன், கோபி மற்றும் உதயகுமார் அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்டாலினிடம், ‘நான் இனி அரசியலுக்கே வரலை.. நீதான் ரொம்ப நல்லா செய்துகிட்டு இருக்க.. திரும்பவும் சொல்றேன் நான் இனி அரசியலுக்குள் வரலை.. அதே நேரத்தில உனக்கு உறுதுணையாக இருப்பேன்.. நிச்சயம் உனக்கு உறுதுணையாக நிற்பேன்.. ‘ என அழுத்தம் திருத்தமாக அழகிரி சொல்லி இருக்கிறார்.
பின்னர், நான் அப்ப ஏதாவது செய்திருப்பேன்.. அதை எல்லாம் விட்டுவிடலாம்.. கட்சியில் நல்லவங்க 3 பேருக்கும் கெட்டவங்க 3 பேருக்கும் கூட நான் சிபாரிசு செஞ்சிருப்பேன்.. அது எல்லாம் போகட்டும்.. என்னை நம்பி வந்தவங்க நிறைய பேரு இருக்காங்க.. அவங்க வேற கட்சிக்கும் போகலை.. நம்ம கட்சியை விட்டா அவங்களுக்கு வேற எதுவும் தெரியாது என சற்று உருக்கமாகவே பேசினாராம் அழகிரி.
‘இதனால, இந்த பொதுக்குழுவிலேயே என்னை நம்பி வந்தவங்க மீதான நடவடிக்கைகளை ரத்து செய்யுறதா அறிவிச்சா நல்லா இருக்கும்’ என்ற வேண்டுகோளை வைத்தாராம் அழகிரி.
இதற்கு உடனே பதிலளித்த ஸ்டாலின், ‘சரி.. செய்துவிடலாம்’ என உறுதியான குரலில் சொன்னாராம். தம்பி ஸ்டாலினிடம் இருந்து சட்டென வந்த இந்த பதிலால் நெகிழ்ந்து போனாராம் அண்ணன் அழகிரி.
மதுரையில் நடைபெற்ற ஸ்டாலின்- அழகிரி சந்திப்பு திமுகவினருக்கு குறிப்பாக அழகிரி ஆதரவாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது; அதே நேரத்தில் அழகிரியால் அன்று பாதிக்கப்பட்ட சில ‘தலைகளுக்கு’ ‘தலைவலி’யையே தந்துவிட்டதாம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
