வைஃபை ஆன் செய்ததும், மதுரையின் வானிலை மட்டுமல்ல மாநகரமே ‘வேற..வேற மாதிரி’ உருமாறிவிட்டது.. வெயில் தணிந்து லேசான மழைமேகங்கள் சூழ, மதுரையில் சித்திரை திருவிழா போல திமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள், ஸ்டாலின் ரோடு ஷோவுக்காக மதுரை மாநகர் முழுவதும் சாரை சாரையாக குவிந்த திமுகவினர், பொதுமக்கள் என ஒரே ஆர்ப்பரிப்பும் ஆராவரமும்தான் என குதூகலமாக மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். DMK General Council Meet
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தென்தமிழகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை மதுரையில் நடைபெற உள்ளது.
திமுகவின் வரலாற்றில் பொதுவாக சென்னையில்தான் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறும். எப்போதாவது பிற நகரங்களில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும். மதுரையில் 1977-ம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது 48 ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையில் பொதுக்குழு கூட்டம்- அதுவும் ஸ்டாலின் திமுக தலைவரான பின்னர் மதுரையில் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் தென் தமிழக திமுகவினர் பெரும் உற்சாகத்தில் வலம் வருகின்றனர்.

மதுரை மாநகர திமுகவில் உள்ள மதுரை மேற்கு தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் மூர்த்தி அண்மையில்தான் நியமிக்கப்பட்டார். மதுரை புறநகர் பகுதிகளான மதுரை கிழக்கு, மேலூர், சோழவந்தான் தொகுதிகளுடன் சேர்த்து மதுரை மாநகரில் உள்ள மேற்கு தொகுதியும் மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதியின் பொறுப்பாளராக கோ. தளபதி இருந்தார். அவரிடம் இருந்து மதுரை மேற்கு தொகுதி பொறுப்பு, மூர்த்தியிடம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து பொதுக்குழு ஏற்பாடுகள் மூலம் ‘மாஸ் காட்டி’ கொண்டிருக்கிறார் அமைச்சர்.
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை அப்படியே மதுரைக்கு இடம் பெயர்த்தது போன்ற வடிவமைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது.
மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லும் போதெல்லாம் அழகிரி வீட்டுக்கு செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு உருவாகும். இந்த முறையும் அதே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த முறை மதுரை வந்த போது அழகிரி வீட்டுக்குச் செல்வதாக இருந்த புரோகிராம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்போது, சில பல காரணங்கள் சொல்லப்பட்டன.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் அழகிரி வீட்டில் மதுரை மன்னன் தலைமையில் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

அப்போது, அழகிரியிடம், ‘அண்ணே இதுவரை நம்ம ஆதரவாளர்கள் வேற எந்த கட்சிக்கும் போகலை.. காத்துகிட்டே இருக்கிறோம். ஒருத்தரும் மதிப்பதும் இல்லை. இந்த முறையாவது ஸ்டாலினிடம் பேசி கட்சியில் ஆதரவாளர்களை சேர்க்க சொல்லுங்க’ என அழுத்தம் கொடுத்தனர்.
ஆனால் அழகிரியோ, ‘நாம என்னப்பா செய்யுறது.. அவங்க எதுவுமே சொல்லமாட்டேங்கிறாங்களே’ என ஆதங்கப்பட்டுள்ளார்.
அப்போதும் விடாத ஆதரவாளர்கள், ‘ஸ்டாலின் வருவதற்கு முன்னரே போன் போட்டு பேசி வீட்டுக்கு வரச் சொல்லுங்க அண்ணே.. நாமளே பேசி அழைத்தால்தான் நம்மால் இந்த விஷயங்களையும் பேச முடியும்’ என மீண்டும் அழுத்தம் தந்துள்ளனர்.
இதனை தட்ட முடியாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரை புறப்படும் முன்னதாக அழகிரி போனடித்து பேசினார். அப்போது, ‘ரோடு ஷோ முடிந்ததும் நைட் டின்னருக்கு வீட்டுக்கு வரனும்’ என ஸ்டாலினை அழைத்திருக்கிறார் அழகிரி.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘ எத்தனை மணிக்கு ரோடு ஷோ முடியும் என தெரியலையே.. அங்க வந்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன்’ என பிடி கொடுக்காமல் பேசியிருக்கிறார்.
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம். மதுரையில் ரோடு ஷோ, மதுரையில் திமுக பொதுக்குழு என அடுத்தடுத்த நிகழ்வுகள்தான் இனி இரண்டு நாட்களுக்கு பேசு பொருளாக இருக்கும்… ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இருக்கும்.. இந்த சூழலில் அழகிரி வீட்டுக்குப் போய் டின்னர் சாப்பிட்டால் அதுதான் பேசுபொருளாகிவிடும்.. ரோடு ஷோ பற்றிய தாக்கமோ, பொதுக்குழு குறித்த முக்கியத்துவமோ இல்லாமல் போகும் என்பதால் அழகிரி வீட்டுக்கு ஸ்டாலின் செல்லாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறதாம்.
ஸ்டாலினுடன் பேசியதை ஆதரவாளர்களிடம் பகிர்ந்த கையோடு, ஸ்பெஷல் சமையல் கலைஞர்கள் சிலரையும் ரெடியாக இருக்க சொல்லிவிட்டாராம் அழகிரி.
எப்படியும் அழகிரி வீட்டுக்கு ஸ்டாலின் வருவார்.. நம்ம பிரச்சனைகளை பேசி மீண்டும் கட்சியில் சேர்த்துவிடுவாங்க என்ற நம்பிக்கையில் அழகிரி வீட்டில் காத்திருக்கின்றனர் ஆதரவாளர்கள்.

பொதுவாக முதல்வர் ஸ்டாலின் பயணங்களின் போது பொதுமக்களை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் முதல் முறையாக ரோடு ஷோ நிகழ்ச்சியை மதுரையில் நடத்துகிறார் ஸ்டாலின் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மதுரையில் சுமார் 16 கிமீ தொலைவுக்கு இந்த ரோடு ஷோவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யபட்டுள்ளன. இந்த ரோடு ஷோவில் கூட்டம் அலைமோத வேண்டும் என்பதற்காகவே பெருந்திரளான பொதுமக்களும் திரட்டப்பட்டுள்ளனர். இந்த ரோடு ஷோ முடிவில் மதுரை முன்னாள் மேயர் முத்து சிலையை திறந்து வைக்கிறார் ஸ்டாலின்.
சரி.. தேர்தல் நெருங்கிவிட்டதே.. மதுரை திமுக பொதுக்குழுவில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படுமா?
மதுரை பொதுக்குழு தொடர்பாக மூத்த தலைவர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, 48 ஆண்டுகளுக்குப் பின்னர் மதுரையில் திமுக பொதுக்குழுவை கூட்டியுள்ளோம். அதுவும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தலை கணக்கில் வைத்து அதிரடியான அறிவிப்புகள் இந்த பொதுக்குழுவில் வெளியாகக் கூடும் என்றனர்.

மேலும், திமுகவில் ஏற்கனவே பல்வேறு அணிகள் இருக்கின்றன. காலத்துக்கு ஏற்ப புதிய புதிய அணிகளும் உருவாக்கப்பட வேண்டியது உள்ளது. இந்த வகையில் திமுகவில் புதிய அணிகள் தொடர்பான அறிவிப்பு பொதுக்குழுவில் வெளியாகலாம். ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என தனி அணி உருவாக்கப்படலாம். தற்போதுதான் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது; இதே பாணியில் திமுக கட்சியிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒரு அணி உருவாகிறதாம்.
மேலும் திராவிடர் இயக்க சிந்தனையாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ன பல்வேறு துறைசார்ந்த கல்வியாளர்களை உள்ளடக்கிய கல்வியாளர்கள் அணி ஒன்றையும் இந்த பொதுக்குழுவில் அறிவிக்க முடிவு செய்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின் என்கின்றனர்.
அதேபோல, திமுகவின் தலைமை நிர்வாகத்திலும் தேர்தலை முன்வைத்து மாற்றங்களுக்கு சாத்தியமிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.
திமுக தலைமையில் அண்மையில் ஒரு ஆலோசனை நடந்ததது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக எப்போதும் கவுண்டர்களுக்கு முக்கியத்துவம் தருவதே இல்லை என அதிமுக பிரசாரம் செய்து வருகிறது; சட்டமன்ற தேர்தலிலும் இப்படி ஒரு பிரச்சாரத்தை அதிமுக செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டதாம்.
அப்போது, திமுகவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் என்ற படிநிலை இருக்கிறது. இதில் கவுண்டர்கள் ஒருவர் கூட இல்லையே எனவும் சுட்டிக்காட்டப்பட்டதாம்.
அத்துடன், பொருளாளர் டிஆர் பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா என முக்குலத்தோர் 3 பேருக்கு வாய்ப்பு தந்துள்ளோம். அதனால் கவுண்டர் ஒருவருக்கும் வாய்ப்பு தரும் வகையில் தலைமை நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டதாம்.
இதனால் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை 5-ல் இருந்து 7 ஆக உயர்த்தி, கவுண்டர் மற்றும் இஸ்லாமியருக்கு வாய்ப்பு தருவது என திட்டமிடப்பட்டுள்ளதாம். இது தொடர்பான அறிவிப்பும் மதுரை பொதுக்குழுவில் வெளியிடப்படக் கூடுமாம்.
திமுக பொதுக்குழு மெனு பற்றி விசாரித்தால், வழக்கம் போல உயர்தரமான அசைவ உணவு வகைகளுக்கு பஞ்சமில்லையாம். மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா. சோழவந்தான் வெற்றிலை பீடாவும் ஏற்பாடு செய்ய்யப்பட்டுள்ளதாம் என டைப் செய்தபடியே Sent பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.