டாஸ்மாக் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரை எதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரிக்க முடிவு எடுத்தது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. akash bhaskaran case high court question
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி, 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியது.
டாஸ்மாக் நிர்வாகம் மட்டுமல்ல அது சார்ந்து தொழில்செய்பவர்கள், ஒப்பந்ததாரர்கள் என பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளுக்கு இடையே கடந்த மே 16ஆம் தேதி தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு அவரது வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சீலை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த மனு இன்று (ஜூன் 13) நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயண அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “டாஸ்மாக் முறைகேட்டுக்கும் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனினும் அவரது இரண்டு செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
விக்ரம் ரவீந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கிரி மற்றும் அபுதுகுமார் ராஜரத்தினம் ஆகியோர் ஆஜராகி, “விக்ரம் ரவீந்திரன் டாஸ்மாக் ஊழியரோ, டாஸ்மாக் நிறுவனத்தில் வேறு எந்த பணியிலோ இல்லாத நிலையில் சம்பந்தமே இல்லாமல் அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது” என்று வாதங்களை முன் வைத்தார்.
இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “எதன் அடிப்படையில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது? சீல் வைப்பதற்கு அமலாக்கத்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றலாம். ஆனால் எப்படி சீல் வைக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜரானார்.
அவர், “சோதனை நடத்த சென்றபோது அவர்களது வீடு மற்றும் அலுவலகங்கள் பூட்டியிருந்ததால் சீல் வைக்கப்பட்டது. அமலாக்கத் துறையை தொடர்பு கொள்ளுமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இவர்கள் ஒரு மாத காலமாக தலைமுறைவாக இருந்துவிட்டு தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்” என்று பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சோதனைக்கு சென்றபோது குறிப்பிட்ட நபர் இல்லை என்றால் காவல்துறை உதவியுடன் கதவை உடைத்து சோதனை நடத்தி இருக்கலாமே?
எந்த அடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரனையும் விக்ரம் ரவீந்திரனையும் விசாரிக்க முடிவு செய்தீர்கள் என்பது தொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். akash bhaskaran case high court question
