என் மகன் தீவிரவாதியா? நிகிதாவை கைது செய்யணும் – அஜித்குமார் தாய் ஆவேசம்

Published On:

| By Pandeeswari Gurusamy

அப்பாவியான என் மகனை மிளகாய்ப் பொடி தூவி, தண்ணீர் கொடுக்காமல் இவ்வளவு கொடூரமாக அடித்திருக்கிறார்கள். இதெல்லாம் சட்டத்தில் இருக்கிறதா? இப்படி எல்லாம் கொடுமைப்படுத்த என் மகன் தீவிரவாதியா என காவல்துறையினர் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமாரின் தாய் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். கோயிலுக்கு வந்த பேராசிரியர் நிகிதாவின் நகைகள் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ADVERTISEMENT

விசாரணையின்போது காவல்துறையினரின் கடும் தாக்குதலுக்கு ஆளான அஜித்குமார் உயிரிழந்தார். இது குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஸ்ரீமதி முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன் உள்ளிட்ட ஐந்து காவல்துறையினரின் ஜாமின் மனு மீது விசாரணை நடைபெற்றது.

ADVERTISEMENT

விசாரணையின்போது சிபிஐ தரப்பில், நகை திருட்டு புகாருக்கு முகாந்திரமே இல்லை என்றும், அது பொய்ப் புகார் என்றும், அஜித்குமாரின் மரணம் காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது என்றும், இதில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் தொடர்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், “ஒன்றுமே இல்லாத விஷயத்திற்காக ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்” என்று நீதிபதி ஸ்ரீமதி வேதனை தெரிவித்தார். மேலும், “புகார் அளித்தவரே காரணம்தானே? யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை விசாரணையிலேயே இருக்கட்டும். காவல்துறையினருக்கு நீதிமன்றம் பாடம் புகட்டும்” என நீதிபதி தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமாரின் தாயார் மாலதி,“என் மகன் திருடன் இல்லை. நீதிபதிகள் உத்தரவிட்டது மகிழ்ச்சியாக இருந்தாலும், என் மகன் இறந்ததைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சம்பவம் காலை 11 மணிக்கு நடந்த நிலையில், மாலை 4:30 மணிக்குத்தான் எனக்குத் தகவல் கொடுத்தனர்.என்ன காரணத்திற்காக என் மகனை அடித்தார்கள்? நிகிதா பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார். யார் சொல்லி அந்தப் பொய்ப் புகாரை அளித்தார்?

பெரிய இடத்தில் இருந்து வந்த உத்தரவுப்படி செய்ததாக அந்த ஐந்து காவலர்கள் தெரிவிக்கின்றனர். அந்த ‘பெரிய இடம்’ யார் என்பது எனக்குத் தெரிய வேண்டும்.

வியர்வை வந்தது எல்லாம் காரணமா? பொய்ப் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும். ஒன்றுமே தெரியாத அப்பாவியான என் மகனை மிளகாய்ப் பொடி தூவி, தண்ணீர் கொடுக்காமல் இவ்வளவு கொடூரமாக அடித்திருக்கிறார்கள். இதெல்லாம் சட்டத்தில் இருக்கிறதா? இப்படி எல்லாம் கொடுமைப்படுத்த என் மகன் தீவிரவாதியா? மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள். சிறுநீரைக் கூட வலுக்கட்டாயமாக வரவழைத்திருக்கிறார்கள். என் மகன் கூனிக் குறுகி இறந்திருப்பான்” என்று கவலையுடன் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share