அதிமுக (AIADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்பதாக அறிவிக்காமல் இருக்கும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிவி சண்முகம் (CV Shanmugam), சி. விஜயபாஸ்கர் (C Vijayabaskar) இருவரும் இன்று மே 29-ந் தேதி திடீரென தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணம் மேற்கொண்டனர்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, எஸ்பி வேலுமணி அணி என இரண்டாக பிளவு ஏற்பட்டது. தற்போது இந்த பிளவு சரி செய்யப்பட்டு இரு அணிகளும் இணைந்துள்ளன.
ஆனால் எஸ்பி வேலுமணி அணியில் இருந்த சிவி சண்முகம், சி. விஜயபாஸ்கர், அருண்மொழித் தேவன் ஆகிய 3 பேரும் மட்டும் இந்த இணைப்பு தொடர்பாக மவுனமாக இருக்கின்றனர். இம்மூவரது நிலைப்பாடு குறித்து இன்று காலை நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் விரிவாக பதிவு செய்திருந்தோம்.
இவர்களில் சிவி சண்முகம், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்; சி.விஜயபாஸ்கர், தவெகவில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்; அருண்மொழித்தேவன் மீண்டும் எடப்பாடி பக்கம் செல்ல வாய்ப்பு அதிகம் எனவும் அதில் பதிவு செய்திருந்தோம்.
இந்த பின்னணியில் இன்று திடீரென சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் இருவரும் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணம் மேற்கொண்டனர்.
விராலிமலை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றிட் தெரிவித்து சி.விஜயபாஸ்கர் பேசுகையில், “ “உங்க முகத்தைப் பார்க்கிறதுதான் சந்தோஷம். இந்த கைத்தட்டலில்தான் எனக்கு உற்சாகம். இதுதான் உற்சாகம். இந்த மண்ணைத் தொட்டு வணங்கி, மக்களைத் தொட்டு வணங்கி, 62,073 வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற வைத்து, ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இந்த விராலிமலை தொகுதியினுடைய வாக்காளப் பெருமக்கள் அத்தனை பேருக்கும் கோடான கோடி நன்றிகளை, என்னுடைய பாசமான, அன்பான, பணிவான நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீங்க நினைக்கிறது.. எதிர்பார்க்கிறது..
தெம்பா இருங்க, தைரியமா இருங்க, நான் அடிக்கடி சொல்லுவேன். 100% நீங்கள் எதிர்பார்க்கின்ற, நீங்கள் எது நடக்க வேண்டும் என்று நினைக்கின்ற, எது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்ற அந்த கோரிக்கைகளை, இந்த விஜய் பாஸ்கருடைய குரல் சட்டமன்றத்திலே விராலிமலை தொகுதிக்காக ஓங்கி ஒலிக்கும்.
விராலிமலை முருகனுக்கு தங்க ரதம்
விராலிமலை முருகனுக்கு வெள்ளி ரதத்தைக் கொடுத்தோம் அம்மா ஆட்சியில. தங்க ரதம் கொடுப்போம்னு சொல்லியிருக்கிறோம், நிறைவேற்றிக் காட்டுவேன். நிறைவேற்றிக் காட்டுவோம் தொகுதிக்கு. காவிரி-வைகை-குண்டாறு திட்டம், கடந்த ஆட்சியில் பலமுறை ஓங்கி குரல் கொடுத்தேன். மீண்டும் இந்த ஆட்சியில் நான் ஓங்கி குரல் கொடுப்பேன்.
உங்களுக்காக இந்த விஜய பாஸ்கருடைய குரல், இந்த விராலிமலை சட்டமன்றத் தொகுதியினுடைய குரல், இந்த மக்களுடைய எண்ணம் சட்டமன்றத்திலே ஓங்கி ஒலிக்கும் என்பதை நான் அன்போடும் பணிவோடும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீங்க நினைப்பது போலவே நடப்பேன்..
உங்களுக்குத் தெரியும் இந்தப் பிள்ளையைப் பற்றி. இந்தப் பிள்ளை எப்படி ஓடும், எப்படி சுறுசுறுப்பா இருக்கும், எவ்வளவு வேகமாக உழைக்கும் அப்படின்றது உங்க எல்லாருக்குமே தெரியும். உங்க மனசு போல நான் நடந்துக்குவேன், அப்படித்தானே? நம்பிக்கை இருக்கா அம்மா? ஆய், நம்பிக்கை இருக்கா? எப்போதும் போல உங்க மனசு நினைக்கிறது போல விஜய் பாஸ்கர் நடந்துக்குவேன். கோயில் நாளைக்கு கூட திருவிழா, வடம் பிடிக்க வந்துருவேன்.தேருன்னா வருவேன், திருவிழான்னா வருவேன், ஊருன்னா வருவேன், ஜல்லிக்கட்டுன்னா வருவேன், கபடின்னா வருவேன், கிரிக்கெட்ன்னா வருவேன், எப்போதும் களத்தில் உங்களோடு நிற்பேன். அதான் விஜய் பாஸ்கர். ஆஸ்பத்திரினாலும் நிப்பேன், அவசரம்னாலும் நிப்பேன். நீங்க போன் பண்ணா 108 வேகமாக வருதோ இல்லையோ, விஜய் பாஸ்கர் வேகமாக வந்துருவேன். அதைவிட வேகமாக வந்துருவேன். வந்துருவேனா, வரமாட்டேனா சாமி? எப்போதும் வந்துருவேன். அதனால எப்போதும் உங்களோடு இருக்கக்கூடிய, உங்களுக்காகவே இருக்கக்கூடிய, இந்த மக்கள் தான் என்னுடைய பிரையாரிட்டி (Priority). விஜய் பாஸ்கருக்கு என்ன முன்னுரிமை? What is my priority? என்னுடைய முன்னுரிமை என்பது என்னுடைய தொகுதி மக்கள், அதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.
கூட்டணி கட்சிகளுக்கு நன்றி
எனக்குத் தொகுதி மக்கள் தான் எனக்கு முன்னுரிமை. நீங்கதான் எனக்கு முக்கியம். நீங்கதான் வாக்களிச்சிருக்கீங்க. நீங்கதான் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்திருக்கீங்க. வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகக் களத்திலே நின்று, சுழன்று பணியாற்றிய நம்முடைய கழக நிர்வாகிகள் எல்லாருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி, கோடான கோடி நன்றி. களத்திலே நின்று மைக்கைப் பிடித்து மக்களிடத்திலே பேசிய கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் எல்லாருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி.
அதனால விஜயபாஸ்கர், உங்க வீட்டுப் பிள்ளை, எப்போதும் போல, எப்போதும் போல இதே வேகத்தோடு, சுறுசுறுப்போடு, நான் ‘மசில் பவர்’ (Muscle power) என்று சொல்லுவேன், இந்த உடம்பில் வேகம் இருக்கின்ற வரை, இந்த உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கின்ற வரை, இந்த விராலிமலை சட்டமன்றத் தொகுதியிலே இந்த பொதுமக்களுடைய நலனுக்காக உங்களுக்காக உழைப்பேன். நீங்க ஒரே ஒரு விஷயம், உங்களுக்குக் குடும்பத்தில் ஒன்று நினைச்சுக்குவீங்க, அப்பா இருப்பார் அம்மா இருப்பார். குடும்பத்தில் அப்பா இருப்பார், அம்மா இருப்பார்… இல்ல, குடும்பத்தில் நம்ம பசங்க இருப்பாங்க, இல்ல நம்ம மருமகன் இருப்பார், இல்ல நமக்குச் சம்பாதித்துக் கொடுப்பதற்கு ஒருத்தர் இருப்பார், அந்த மாதிரி ஒரு கால் (Call) பண்ணுவோம்ல? அந்த காலை உங்க சட்டமன்ற உறுப்பினர் விஜய் பாஸ்கருக்கு எப்போதும் நீங்க பண்ணுங்க. எப்போதும் சொல்லி விடுங்க. எப்போதும் உங்களுக்காக… எப்போதும் உங்களுக்காக நான் களத்திலே நிற்பேன். எப்போதும் உங்களுக்காக நான் களத்திலே நிற்பேன். எப்போதும் இந்த விராலிமலை நிலத்திலே நிற்பேன். ஜல்லிக்கட்டில் நிப்பேன், தேர்ல நிப்பேன், திருவிழாவில் நிப்பேன், எல்லா நேரத்திலும் கல்யாணத்தில் நிப்பேன், காதுகுத்தில் நிப்பேன், எல்லாத்திலும் உங்களோடு நிப்பேன். கபடியில் நிப்பேன், கிரிக்கெட்டில் நிப்பேன்.
நீங்க அதிகமாக விரும்புகிற மாதிரி..
உங்களுக்குப் பிடித்தவராக, உங்களை ரொம்பப் பிடிக்கும், உங்களுக்குப் பிடித்தவனாக, உங்களுக்கு உழைப்பவனாக, உங்களுக்குப் பணியாற்றுபவனாக என்னை மீண்டும் நான்காவது முறையாக இந்த விராலிமலை சட்டமன்றத் தொகுதியிலே நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். எல்லாரும் உற்றுப் பார்க்கிறார்கள், ‘விஜய் பாஸ்கர் அப்படி என்ன செய்தார், இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்து இருக்காரே’ என்று. அது என் மனசுக்குத் தெரியும், உங்க மனசுக்குத் தெரியும். இதைவிட நீங்கள் இன்னும் என்னை அதிகமாக விரும்பும் அளவுக்கு விஜய் பாஸ்கர் உங்களிடத்திலே நடந்து கொள்வேன் என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொண்டு, உங்க எல்லாருக்கும் நன்றி. உழைத்ததற்கு நன்றி. வாக்குகளைப் பெற்றுக் கொடுத்ததற்கு நன்றி…என்றார்.
சிவி சண்முகம் பேச்சு
மயிலம் தொகுதியில் சி.வி. சண்முகம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், “ “பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெற வைத்த வாக்காளர் பெருமக்களுக்கு என்னுடைய பாதம் பணிந்த என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடமையை முழுமையாக செய்வேன்..
உங்களுக்காக என்னை நம்பி என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த உங்களுக்கு என்னுடைய கடமையை முழுமையாக நான் உங்களுக்கு செய்வேன். உங்களுக்காக என்றென்றும் நான் உழைப்பதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் தேர்தல்ல சொன்னதைப் போல உங்களுக்குத் தேவையானது எதுவாக இருந்தாலும் என்னிடம் தயங்காமல் யோசிக்காமல் சொல்லுங்கள். என்னால் என் முடிந்த என் சக்திக்கு முடிந்த அனைத்து உதவிகளையும் கண்டிப்பாக நான் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன்.
இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்த அனைத்து பெரியோர்களுக்கும் தாய்மார்களுக்கும் இளைஞர் பெருமக்களுக்கும் மற்றும் எனக்காகப் பாடுபட்ட அனைத்துக் கழகத்தினுடைய தோழர்களுக்கும் கூட்டணிக் கட்சியினுடைய அனைத்துக் கழகத் தோழர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உங்கள் பாதங்களைத் தொட்டு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
