அதிமுக மாவட்டச் செயலாளர்கள் திடீர் மாற்றம் : பின்னணி என்ன?

Published On:

| By Kavi

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் இரண்டு பேரை விடுவித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். AIADMK district secretaries changed

வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளராக இருந்த வெங்கடேஷ் விடுவிக்கப்பட்டு முன்னாள் எம்.எல்.ஏவும் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான புரசை வி.எஸ். பாபு புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜான் தங்கம் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாவட்ட செயலாளராக ஜெயசுதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தீடீரென இரண்டு மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்திருப்பது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
புரசை வி.எஸ். பாபு

இதுகுறித்து அதிமுக தலைமை வட்டாரத்தில் விசாரித்த போது, “2008 காலக்கட்டத்தில் புரசை வி.எஸ். பாபு திமுகவில் மாவட்ட செயலாளராக இருந்த போது, அதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த சேகர்பாபுவை எதிர்த்து அரசியல் செய்தவர். 2011 ஜனவரியில் தற்போதைய அமைச்சர் சேகர்பாபு திமுகவில் இணைந்த நிலையில், புரசை வி.எஸ். பாபு அதிமுகவுக்கு தாவினார். அதிமுகவில் ஈடுபாட்டோடு கட்சி பணிகளை செய்து வந்தார்.

அதேசமயம் வெங்கடேஷ் செயல்பாடு கட்சியில் சுணக்கமாக இருந்தது. ‘அதிமுக வளர்ந்த கட்சி, அது சரிவை நோக்கி போகும் போது சங்கடமாக இருக்கிறது. சென்னையில் அதிமுகவின் நிலை மோசமாக இருக்கிறது. சென்னையில் நீங்கள் தோல்வியடைவதால், ‘பத்து தோல்வி பழனிசாமி’ என்று விமர்சிக்கிறார்கள். அது இப்போதுதான் குறைந்திருக்கிறது. அதனால் கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என்று வெங்கடேஷிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அதற்கு வெங்கடேஷும் நீங்கள் எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்கிறேன் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நேற்று நடந்து முடிந்து எடப்பாடி பழனிசாமி வெளியே கிளம்பியபோது, வெங்கடேஷை மாற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் கோஷம் போட்டனர்.

இந்தசூழலில் வெங்கடேஷை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சேகர்பாபுக்கு டஃப் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் புரசை வி.எஸ். பாபுவை நியமித்துள்ளார்” என்றனர்.

ஜான் தங்கம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான் தங்கம் மாற்றியது குறித்து கேட்டதற்கு, “கட்சி நிர்வாகிகளுடன் நெருக்கமாக இல்லாமல், இடைவெளியுடனே இருந்து வந்தார் ஜான் தங்கம். பூத் கமிட்டி வேலைகளை முடிக்காமல் சுணக்கமாக செயல்பட்டார். கிட்டத்தட்ட 50 சதவிகித வேலையை கூட முழுமையாக முடிக்காமல் இருந்தார். இதுகுறித்து ஜான் தங்கத்திடம் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதோடு அவர் மீது நிறைய புகார்கள் எடப்பாடிக்கு வந்து கொண்டே இருந்தது. மண்டல பொறுப்பாளர்களும் புகார் கூறியிருக்கின்றனர். இதனால் 2026 தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பான ஆளை நியமிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு அச்சக முன்னாள் தலைவரும், திருவட்டாறு ஒன்றிய செயலாளராக இருந்தவருமான ஜெயசுதர்ஷனை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதில் ஜெயசுதர்சன் இந்து நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர். ஜான் தங்கம் கிறிஸ்துவ நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்” என்று கூறினார்கள். AIADMK district secretaries changed

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share