கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரி அதிமுக வேட்பாளர் தர்ணா

Published On:

| By Pandeeswari Gurusamy

Coimbatore

கோவை தெற்கு தொகுதியில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகக் கூறி, தமிழகத்தின் 234 தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதியில் மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் மற்றும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகின்றனர். தவெக சார்பில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற வதந்தி பரவி வந்தது. அதிமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஆகியோர், தேர்தலை ரத்து செய்யக் கோரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனுக்கள் அளித்திருந்தனர். இதன் பின்னணியில், தேர்தலை ரத்து செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் வதந்தி பரவியது.

ADVERTISEMENT

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் நேற்று விளக்கம் அளித்தார். அதில், சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை வதந்தியாக பரப்பி வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பணப்பட்டுவாடா தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறி, கோவை தெற்கு தொகுதிக்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக வேட்பாளர் இன்று (ஏப்ரல் 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திமுக தரப்பினர் பணப்பட்டுவாடா செய்யும் போது, கட்சியினரே அவர்களை பிடித்து வைத்து தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் கொடுத்தாலும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

காவல்துறையினர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், மாவட்ட ஆட்சியர் நேரில் வர வேண்டும் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share