ஆதிபுருஷ் திரைப்படத்தை டார்ச்சர் என குறிப்பிட்டு, நடிகர் பிரபாஸையும் கடுமையாக விமர்சித்த தணிக்கை படக்குழு உறுப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபாஸ் ராமராக நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு கடந்த 6ம் தேதி மாலை திருப்பதியில் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
முத்த சர்ச்சை!
இதற்கிடையே மேல் திருப்பதிக்கு சென்று பெருமாளை வழிபட்டு திரும்பி வரும்போது கதாநாயகி க்ருத்தி சனோனுக்கு கோவில் வெளியில் வைத்து படத்தின் இயக்குநர் ஓம் ராவத் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சீதையாக நடிக்க விரதம் எல்லாம் இருந்தார் என க்ருத்தி சனோன் சொன்னதெல்லாம் சுத்தப் பொய் என்றும், திருப்பதி கோயிலில் கூட எப்படி கண்ணியம் காக்க வேண்டும் என்பது அவருக்கும், ஆதிபுருஷ் பட இயக்குநருக்கும் தெரியவில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

ராமர் ஃபீலிங்கே வரவில்லை!
மேலும் படத்தின் டீசரை விட டிரெய்லரில் சிஜி காட்சிகள் சிறப்பாக மெருகூட்டப்பட்டிருந்தாலும், படமாகவும் பிரபாஸ் ராமராக பேசும் வசனங்களிலும் எந்தவொரு ஈர்ப்பும் இல்லை என்றே ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
பிரபாஸின் லுக் அப்படியே சந்திரமுகி, ஆப்தமித்ரா உள்ளிட்ட படங்களில் சாமியாராக நடித்த நடிகர் அவினாஷ் மாதிரியே இருக்கு என்றும் ராமர் ஃபீலிங்கே வரவில்லை என்றும் கலாய்த்து வருகின்றனர்.

பிரபாஸ் நடிப்பு பள்ளி செல்லட்டும்!
இந்நிலையில், இப்படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்காக தணிக்கை குழுவிற்கு சமீபத்தில் திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த தணிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினரும், லண்டனை சேர்ந்த திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து படம் பற்றி அவரது கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில், ஒரே வார்த்தையில் ’ஆதிபுருஷ் – டார்ச்சர்’ என பதிவு செய்துள்ளார்.
படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு மோசமாக இருக்கிறது என்றும், பிரபாஸ் நடிப்பு பள்ளி சென்று நடிப்பை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உமைருக்கு ரசிகர்கள் கண்டனம்!
பொதுவாக இந்தியாவில் தணிக்கை குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் தாங்கள் பார்த்த படங்களை பற்றி பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட மாட்டார்கள்.
ஆனால் வெளிநாடுகளில் படத்தினை திரையிட தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும்.
அத்தகைய தணிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள லண்டனை சார்ந்த உமைர் சந்து ஆதிபுருஷ் படம் மட்டுமல்ல இதற்கு முன்பாக ஏராளமான தமிழ் படங்களை பற்றியும் கருத்து தெரிவித்து உள்ளார்.
எனினும் ஆதிபுருஷ் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து படத்தின் வியாபாரத்தையும், வசூலையும் பாதிக்ககூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு திரைத்துறை சார்ந்தவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும் பிரபாஸ் ரசிகர்கள் உமைர் சந்துவை விடுவதாக இல்லை.
ஆதிபுருஷ் குறித்தும், தங்கள் அபிமான நடிகர் குறித்து கருத்து தெரிவித்ததற்காக அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“ஒன்றும் செய்யாததற்கு ஒப்புதல் வாக்குமூலம்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதில்!
