புதுச்சேரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சிஎம் சார்.. எங்கள் அண்ணன் சொல்வது போல தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள் என்றார்.
கரூர் பெருந்துயர சம்பவத்திற்கு பின்னர் புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று ( டிசம்பர் 9) தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்று தனது பேச்சை தொடங்கி கூட்டத்தினரை பார்த்து எப்படி இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
72 நாட்கள் கழித்து அண்ணன் புதுச்சேரியில் இறங்கி உள்ளார். அது எதற்காகவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். கரூர் சம்பவத்திற்கு பிறகு இங்கிருக்கும் காவல்துறையினருக்கு மிகுந்த கர ஒலியோடு நாம் நன்றி சொல்ல வேண்டும். இதைப் பார்த்து சிஎம் சார்.. தமிழ்நாடு தான் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சரி என்று சொல்கிறீர்களே? கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய மாநிலம் புதுச்சேரி என்று சொல்கிறீர்களே.. இந்தியாவிற்கே இந்த காவல்துறை ஒரு முன்னுதாரணமாக இருந்து கொண்டிருக்கிறது. காவல்துறைக்கு மட்டுமல்ல.. இங்கு இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மக்களுக்கும், முதலமைச்சருக்கும் நன்றியை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படி ஒரு மக்கள் பாதுகாப்பை தமிழ்நாட்டில் இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பயணத்தில் கொடுத்ததே இல்லை. அதனால் சிஎம் சார்.. உங்கள் அரசியலை எல்லாம் தூக்கிப்போட்டு விட்டு தைரியமாக எங்கள் அண்ணன் சொல்வது போல தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள்.
காவல்துறையை வைத்துக்கொண்டு அரசை வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வதை முடக்குவதையெல்லாம் முதலில் நிறுத்தி விடுங்கள். எங்கள் அண்ணன் சொல்வது போல் காற்றையோ, வெள்ளத்தையோ நிறுத்த முடியுமா? அதுபோலதான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரப் பயணம் இன்றிலிருந்து பிரச்சாரம் தொடங்கி விட்டது. ஏன் புதுச்சேரி என்று ஒரு கேள்வி வருகிறது. இங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதேபோல்தான் எம்ஜிஆரையும் கேட்டனர். நீங்கள் தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஆக வேண்டியதுதானே? ஏன் புதுச்சேரி வந்தீர்கள் என்று.
புதுச்சேரி மக்கள் ஒரு நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல போக்குவரத்து வசதி, நல்ல மருத்துவம் போன்றவற்றிற்காக இதுவரை ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.
மதுரை மாநாடு போன்று கூடிய விரைவில் புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை தவெக நடத்தும். புதுச்சேரி வரலாற்றை புதிதாக எழுதப்போகிறோம்.” என தெரிவித்தார்.
