அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நடிகை கௌதமி இன்று (ஜூன் 14) அறிவித்துள்ளார். நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் அதிமுகவில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகை கெளதமி, கடந்த பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவில் உட்கட்சி பூசல் தலை தூக்கி உள்ளது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகுவதாக கௌதமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதி உள்ள கடிதத்தில், “இன்று முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள்,பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
