‘வாழை’ படம் பார்த்த ரஜினி எமோஷனல்… மாரி செல்வராஜ் பற்றி சொன்ன அந்த விஷயம்!

Published On:

| By Selvam

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சிறுவர்கள் பொன்வேல், ராகுல் மற்றும் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்திருந்த வாழை திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தான் சிறு வயதில் சந்தித்த துயரங்களையும், 1999-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் வாழைத்தார் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியான சோக சம்பவத்தையும் இப்படத்தில் மாரி செல்வராஜ் காட்சிப்படுத்தியிருந்தார்.

படத்தை பார்த்த முன்னணி இயக்குனர்கள் பலரும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். சான்பிரான்சிஸ்கோவில் வாழை படம் பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மாரி செல்வராஜை பாராட்டியிருந்தார்.

இந்தநிலையில், மாரி செல்வராஜ் தலைசிறந்த இயக்குனர் என்பதை வாழை படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில், “மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படம் பார்த்தேன். தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு அற்புதமான, தரமான படம் வந்துருக்கு.

மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.

மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “அன்று பழைய தகரபெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன் . உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

21 கேள்விகள்! ட்விஸ்ட் வைத்த போலீஸ் – தள்ளாடும் தவெக மாநாடு… குழப்பத்தில் விஜய்?

மோசடி வழக்கு: ED சம்மனுக்கு எதிர்ப்பு… பாரிவேந்தர் மனு தள்ளுபடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share