மோசடி வழக்கு: ED சம்மனுக்கு எதிர்ப்பு… பாரிவேந்தர் மனு தள்ளுபடி!

Published On:

| By Selvam

அமலாக்கத்துறை சம்மனுக்கு தடைகோரி ஐஜேகே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 2) தள்ளுபடி செய்துள்ளது.

எஸ்.ஆர்.எம் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி மாணவர்களிடம் இருந்து ரூ.89 கோடி மோசடி செய்ததாக, வேந்தர் மூவிஸ் மதன், எஸ்ஆர்எம் நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு கடந்த 2016-ல் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். மாணவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை பாரிவேந்தர் திரும்ப அளித்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில், மோசடி செய்த தொகையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பாரிவேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதால், சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று பாரிவேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில், “எஸ்ஆர்எம் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் பாரிவேந்தர் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு ஒத்துழைக்க அவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, விசாரணை அமைப்பு அதன் கடமையை செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை கோரிய பாரிவேந்தர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

புதிய கல்விக் கொள்கையின் பி.ஆர்.ஓ ஆளுநர் ரவி: செல்வப்பெருந்தகை கண்டனம்!

பழனியில் நடைபெற்றது இந்து விரோத மாநாடு… ஹெச்.ராஜா காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share