டெல்லியில் மத்திய போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை (Nitin Gadkari) தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா (Aadhav Arjuna) இன்று ஜூன் 2-ந் தேதி சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முதல்வர் விஜய் வழிகாட்டுதலின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று சந்தித்து தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம்.
சாலைப் பாதுகாப்பு கொள்கைகளைத் தமிழ்நாட்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தி விபத்துகளைக் குறைப்பது, முக்கிய உயர்மட்ட மேம்பாலங்களின் சீரமைப்பு மற்றும் நவீன திட்டமிடல்கள், தமிழ்நாடு முழுவதும் நான்கு வழிச் சாலைகளை ஆறுவழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்வது, 2026-27 ஆம் ஆண்டுக்கான சாலை மற்றும் உள்கட்டமைப்புகளுக்கான ஒன்றிய நிதியினை விடுவிப்பது உட்பட பத்து முக்கியக் கோரிக்கைகளை வைத்தோம்.
தமிழ்நாட்டிற்குரிய சாலை மற்றும் உள்கட்டமைப்புகளுக்கான ஒன்றிய நிதியினை அதிகரித்துக் கொடுப்பது பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி.
கடந்த ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 71,313 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. அதில், 18,421 சாலை விபத்து மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை வெகுவாக குறைக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நேர்மையான அரசு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்ற வழியில் நமது மாநிலத்தின் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி முன்னேறும். தமிழ்நாட்டின் சாலைகள், கட்டமைப்புகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவை உலகத்தர அளவில் முன்னேற்றமடையும். இவ்வாறு ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
