முதல்வர் விஜய் மீதான வருமான வரி விவகார வழக்கு  வாபஸ் : ஏன்?

By Kavi

|

Published on 2 Jun 2026, 4:46 PM

முதல்வர் விஜய் மீதான வருமான வரி விவகார வழக்கு  வாபஸ் பெறப்பட்டுள்ளது.

2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை முதல்வர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள், விஜய் வீட்டில் 2015ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

இதில் அவர் நடித்த  புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்து, வருமானத்தை மறைத்ததற்காக 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது வருமான வரித்துறை. 

ADVERTISEMENT

இந்தநிலையில் தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அதில், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.  ஆனால் இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்தது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் விஜய்க்கு எதிராக கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில்,  “ரெய்டின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விஜய்யின் வாக்குமூலம், வரி மதிப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் அபராத உத்தரவு ஆகியவற்றை ஆய்வு செய்து, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 276C உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குத் தொடர வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

ஏமாற்றுதல், போலி ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வரக்கூடிய குற்றங்களுக்காக முதல் தகவல் அறிக்கை   பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா என்பதை ஆராய்வதற்காக, இந்த ஆவணங்களை அமலாக்கத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார். 

ஆனால் இந்த மனுவை விசாரணைக்காக பதிவுத்துறை எண்ணிடவில்லை. இது விசாரணைக்கு உகந்ததா என முடிவெடுக்க தலைமை நீதிபதி அமர்வில் பட்டியலிட்டது. 

அதன்படி இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி  தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு,  ‘ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால், அதை விசாரணைக்கு உகந்ததா என்பதை குறித்து முடிவு செய்வதற்காக, எண்ணிடும் பணியை முடிக்காமல் இருக்கக் கூடாது.இந்த மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு உகந்ததா என்ற தலைப்பில், விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது.

இந்தசூழலில் இன்று, வழக்கை தொடர விரும்பவில்லை என கூறி மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றுள்ளார்.

தேர்தல் முடிந்த பிறகு மனுதாரர் இந்த வழக்கில் தன் ஆர்வத்தை இழந்துவிட்டார் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்விடம் தெரிவிக்கப்பட்டதாக பார் & பென்ச் ஊடகம் கூறியுள்ளது.

இதையடுத்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel