திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று பேசிய முதலமைச்சர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
இந்தநிலையில் முதல்வரும் தவெக தலைவருமான விஜய்க்கு பதிலடி கொடுத்து திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 2) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஆ.ராசா, “தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் நடைபெற்று 234 தொகுதிகளில், 108 இடங்களில் வெற்றி பெற்று 107 என்ற எண்ணிக்கையோடு தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பினை ஏற்றது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது அவர்களுக்கு வாக்குகளை பெறுகிற அளவிற்கு எதிர்கட்சிகளும் அவர்களுக்கு ஒத்துழைத்து அவர் முதலமைச்சராக பணியை தொடர்ந்து வருகிறார்.
பிரதமரிடம் 10 நிமிடம் மட்டும் பேசிய விஜய்
திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தலைவர், அமையப்பட்டிருக்கின்ற புதிய ஆட்சிக்கு வாழ்த்துக்களை சொன்னதோடு, ஆறு மாத காலத்திற்கு உங்களுடைய ஆட்சியினுடைய திறனை கடுமையாக விமர்சிக்க மாட்டோம் என்று கூறியிருந்து இந்த அரசாங்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார்.
அதற்கு பிறகு முதலமைச்சர் டெல்லிக்கு சென்றார், பிரதமரை பார்த்தார். ஏனைய மூன்று முதலமைச்சர்களும் – அசாம், மேற்கு வங்காளம், கேரளாவுடைய முதலமைச்சர்கள் – ஏறத்தாழ 40 லிருந்து 50 நிமிடங்கள் சந்தித்தார்கள். என்ன காரணத்தினாலோ தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பிரதமரால் நேரம் ஒதுக்கப்பட்டு, உடனடியாக வேறு யாரையும் சந்திக்காமல் திரும்பி இருக்கிறார், நிர்மலா சீதாராமன் தவிர.
அதற்கு பிறகு முதன் முதலாக தமிழ்நாட்டினுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக தொகுதி மக்களுக்கு நன்றி சொல்வதற்கு திருச்சிக்கு சென்றவர் 18 நிமிடங்கள் பேசியிருக்கிறார்.
என்ன தொனி இது?
அரசியல் சட்டத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு பதவியில், ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கின்ற ஒருவர் அரசியல் சட்டம் என்ன ஒழுக்கத்தை கடைபிடிக்கிறதோ – ‘அரசியலமைப்பு அறநெறி (Constitutional Morality’….) இன்னும் நான் தெளிவாக சொல்வதாக என்றால், அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசுகிற போது, “அரசியல் சட்டம் இருக்கிற எல்லா நாடுகளுக்கும் அரசியல் ஒழுக்கம் என ஒன்று தேவையில்லை, அவசியம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கு அரசியலமைப்பு அறநெறி தேவைப்படுகிறது. அது முதலமைச்சர்களுக்கும், அமைச்சர்களுக்கும், பிரதமர்களுக்கும் பொருந்தும்” என்று உரையாற்றி இருக்கிறார்.
அந்த அரசியலமைப்பு அறநெறி, பொறுப்புக்கூறல் எதுவுமே இல்லாமல் தான் வகிக்கிற பதவிக்கு பொருத்தமானவராக இல்லாமல், தன்னுடைய தகுதியை குறைத்து கொண்டு பிதற்றி இருக்கிறார், வீராவசனம் பேசி இருக்கிறார். நான் தமிழ்நாட்டு மக்களை – அவருக்கு வாக்களித்த மக்களை, வாக்களிக்காத மக்களை – எனக்கும் சேர்த்து அவர்தான் முதலமைச்சர் என்கின்ற அந்த உணர்வோடு மிகுந்த மரியாதையோடு நான் கேட்டுக்கொள்வதெல்லாம், சட்டமன்றத்தில் பதிலுரை ஆற்றிய விஜய்யின் தொனி , அவருடைய குரலினுடைய வலிமை, அந்த அழுத்தம், அந்த சத்தம் அதையும்; திருச்சியில் அவர் உரையாற்றுகிற போது எள்ளலும் துள்ளலுமாக கர்ஜித்ததாக சொல்லிக்கொண்டு, கத்திக்கொண்டு பேசினாரே அந்த பேச்சையும், இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள்.
ஏன் சட்டமன்றத்திற்குள்ளே தளர்வு, சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை? ஆனால் திருச்சியில் ஏன் இந்த வீர வசனம்? அந்த வசனத்தை எழுதிக் கொடுத்தது யார் என்கின்ற பொருத்தப்பாட்டை, ஒப்பீட்டை நீங்கள் எண்ணி பார்த்தால், இதற்கு பின்னாலே இருக்கின்ற அரசியல் தந்திரம், அரசியல் அசிங்கம், புலம்பல் எல்லாம் தெரியும்.
அல்லு சில்லு வீட்டுக்கு போக சங்கடமா இல்லையா?
ஒவ்வொரு வரிக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை குறை சொல்வது, ‘ஸ்டாலின் சார்’ என்பது… “திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி, மத்தவங்க எல்லாம் அல்லு சில்லு, அந்த அல்லு சில்லு” யாரு? அதிமுக-வின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
முதலமைச்சர் அவர்களே, உங்களுக்கு ரொம்ப சங்கடமா இல்லையா? நான் வேற வார்த்தை பயன்படுத்த விரும்ப வில்லை. அந்த அல்லு சில்லு வீட்டுக்கு நீங்களே போயி சால்வை போட்டு அவங்களோட ஓட்ட வாங்குனீங்களே, அந்த அல்லு சில்லுகிட்ட போய் கெஞ்சி கூத்தாடுனது தில்லுமுல்லா, அரசியல் அநாகரிகமா? அதை தமிழ்நாட்டு மக்கள் தெரிஞ்சுக்க வேண்டாமா? நீங்க என்ன வேணாலும் பேசுவீங்களா?
நான் இப்போதும் சொல்கிறேன், இந்த ஆட்சி அமைய பெற்றதற்கு பிறகு ஒரு முதலமைச்சருக்கு தர வேண்டிய மரியாதையை எங்களுடைய தலைவரும் நாங்களும் தர தயார். ஆனால் எங்களுடைய நிலைப்பாடு, உணர்ச்சிவசப்பட்டவர்கள் இந்த ஆட்சியை உருவாக்குவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்ற காரணத்தினால், அதே வழியில் முதலமைச்சரும் செல்லக்கூடாது என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இது முதல்வருக்கு அழகா?
அதே மாதிரி ஒவ்வொன்றுக்கும் அரசியல் புரிதல் இல்ல, கவர்ச்சி அரசியல்னு சொல்றாங்க?னு சொல்கிறார். ஏன் சினிமா நடிகருக்கு கவர்ச்சி அரசியல் இருக்க கூடாதா? “அந்த கவர்ச்சி அரசியல்ல இருந்து வெளிய வாங்க”ன்னு தமிழ்நாட்டு மக்களை கேட்டுக்கறதுக்கு எங்களுக்கு, மத்த கட்சிகளுக்குல்லாம் உரிமை இல்லையா? அது என்ன “கவர்ச்சி அரசியல் புரிதல்” வார்த்தைய பயன்படுத்தினா எனக்கு நல்லா வந்துரும் வார்த்தை? என்று சொல்கிறீர்கள். என்ன வார்த்தை வந்துரும்? இது முதலமைச்சருக்கு அழகாயிருக்கா? நீங்கள் ஒரு அரசியலமைப்புப் பதவியில் இருக்கிறீர்கள். ’ப்ரோ விஜய்’ என்று நாங்களும் கேப்போம்.
ஸ்டாலின் யார் தெரியுமா?
ஒரு முதலமைச்சர் போறீங்க, நன்றி சொல்றீங்க. திமுக-வை விமர்சிக்க வேணாம்னு சொல்லல, விமர்சிங்க. அதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் எடுத்துக்கங்க. மீதி 10 நிமிடங்கள் “பிரதமரை, சந்தித்தேன், என்ன செய்ய போகிறேன், பிரதமரிடம் மனு அளித்திருக்கிறேன்” ஏதாவது சொல்லிருக்கீங்களா? நான் கேக்குறேன், யாரை பார்த்து நீங்க குறை சொல்றீங்க?
தமிழ் தாய் வாழ்த்துக்கு நீங்க போய் கடிதம் கொடுக்கறீங்க. நீங்க சொன்ன ஸ்டாலின் சார் யார் தெரியுமா? அரசியல் சட்டத்தால் திருத்தப்பட்ட EWS, அதை தமிழ்நாட்டுக்குள்ள அனுமதிக்க மாட்டேன்னு சொன்னவர்தான் ஸ்டாலின் சார்.
நீங்க தமிழ் தாய் வாழ்த்துக்கு நீங்க போட்டுருக்கது என்ன தெரியுமா? வெறும் GO, government GO சார். அரசியல் சட்டத்தை மீறினால் ஆட்சியவே கலைக்கலாம், நாங்க மீறி இருக்கோம் – தாழ்த்தப்பட்டவருக்காக, பிற்படுத்தப்பட்டவர்களுக்காக.
நீங்க ஒரு தமிழ் தாய் வாழ்த்துக்கு போய் கெஞ்சிறீங்களே, கூத்தாடுறீங்களே, உங்க வீரம் என்ன? இந்த வீரத்தை நாங்க அம்பலப்படுத்த கூடாதா? ஒன்னு தெரிஞ்சுக்கோங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, நாங்க வந்து உங்களுடைய governance-தான் ஆறு மாசம் கழிச்சு விமர்சிப்போம்னு சொன்னோம். உங்களுடைய இயலாமையை, day-to-day administration-ல இருக்கிற குறைபாடுகளை நாங்க விமர்சிக்க மாட்டோம்னு நீங்களும் சொல்ல முடியாது, நாங்களும் கேட்க முடியாது.
“இவ்வளவு கொலை நடக்குது, கொள்ளை நடக்குது, இவ்வளவு பாலியல் தொந்தரவு நடக்குது”ன்னு சொன்னா, நீங்க உடனே வந்து… நீங்க சொன்னீங்களே “நான் வந்த உடனே எல்லாம் சரியாயிடும்”னு சொன்னீங்களே? சரி, பணம் இல்ல, நிதி நிலைமை சீர் செய்வதற்கு ஆறு மாசம் ஆகலாம் அல்லது இரண்டு வருஷம் ஆகலாம், சட்டம் ஒழுங்குக்கு என்ன பிரச்சனை? போலீஸ் உங்கள்ட்ட தான இருக்கு, துப்பாக்கி உங்க கையில தான இருக்கு, transferring authority நீங்கதானே? அதுக்கு என்ன கால அவகாசம் வேணும்னு கேக்குறேன்? உளவு துறையை சரியா வச்சுக்க வேண்டியதுதான நீங்க?
சிங்கப்பெண் படைக்கு பட்ஜெட் என்ன?
தமிழ்நாட்டுக்கு கையெழுத்து போட்டதுல ‘சிங்கப் பெண்’னு ஒரு திட்டம், கையெழுத்து போட்டீங்க. நான் கேட்கறேன், சிங்கப் பெண்ணுக்கு budgetary support என்ன? கலைஞர் முதல் கையெழுத்து போட்டார், எங்களுடைய தலைவர் ஸ்டாலின் முதல் கையெழுத்து போட்டார் முதலமைச்சராக வரும்போது. அதுக்கெல்லாம் budgetary support என்னன்னு நிதித்துறை செயலாளரோடு பேசி, அலாட் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம்தான் கையெழுத்து போடுவோம். சிங்கப் பெண்ணுக்கு budget allocation என்ன? நீங்க என்ன சொல்ல வர்றீங்க, பேரை மட்டும் மாத்திட்டா போதுமா? ஒரு ஐ.ஜி-ய போட்டீங்க, புதுசா recruit பண்ணீங்களா? அதுக்கு புதுசா department வாங்கி கொடுத்தீங்களா? இல்ல எந்தெந்த மாவட்டத்துல சிங்கப்பெண் திட்டத்திற்கு போலீஸ் allot ஆகி இருக்காங்க? எத்தனை வாகனங்கள் நீங்க வாங்கி இருக்கீங்க? அதை ஏன் இன்னும் துவைக்கி வைக்கல?
அதாவது இயலாமை, திறமையின்மை என்று நான் உங்களை சொல்வதில் என்ன தவறு? ஆனால் நீங்க பேசுறதை மட்டும் பார்த்தீங்கன்னா கைத்தட்டலுக்காக, உணர்ச்சியை தூண்டுவதற்காக எல்லாம் பண்றீங்களே.
திமுக என்ன சக்தி தெரியுமா?
நாங்க என்ன சக்தி தெரியுமா? மும்மொழி கொள்கையை நாங்க உள்ள விடல. என்னென்ன திட்டங்களை நிறுத்தி வச்சிருக்கோம்! Delimitation-ஐ நாங்கதான் நிறுத்துனோம், National Education Policy-ய நாங்கதான் நிறுத்துனோம். “PM-Sri-க்கு 2500 கோடி இழந்தாலும் பரவாயில்லை, 10000 கோடி நட்டப்பட்டாலும் பரவாயில்லை, மாநில உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன். மோடி அவர்களே, நான் அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்” அப்படின்னு சொன்னவரு தூர சக்தியாம், ஓர சக்தியாம், கோர சக்தியாம், பார சக்தியாம், தூர்ந்து போன சக்தியாம்.
Bro Vijay, Bro… எங்கே ப்ரோ போச்சு உங்களுடைய சக்தி? PM-க்கு முன்னாடி… முடியாதுன்னு சொல்லிட்டு வாங்க ப்ரோ…. ஏன் ப்ரோ, Honorable Chief Bro, why Bro? ஏன் பேசாம வந்தீங்க? ஏன் ப்ரோ பிரஸ்ஸை பார்க்கிறதுக்கு உங்க தைரியம் இல்லை ப்ரோ? ஏன் ப்ரோ எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்டுக்கு இவ்வளவு வீரம் உங்களுக்கு? எவ்வளவு பிரச்சனை இருக்கு!
பாசிசம் என்ன ஆச்சு ப்ரோ?
பாசிசத்தையும் எதிர்க்கிறோம், பாயாசத்தையும் எதிர்க்கிறோம்” என்றீங்க. ரைட், பாயாசத்தை முடிச்சிட்டீங்க, பாசிசம் என்ன ஆச்சு ப்ரோ?
திருவள்ளுவருக்கு காவி கலர் போட்டுருக்காரு கவர்னர். உங்க அமைச்சர்கிட்ட கேட்டா, என்ன சொல்றாங்க? “அதை பத்தி இப்ப பேச வேணாம்.” எப்ப பேசுவீங்க? திருவள்ளுவர் எங்களுடைய இனத்தினுடைய, மொழியினுடைய, கலாச்சாரத்தினுடைய அடையாளம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என எம்பளம் போட்டுக்கிட்டா பத்தாது. “திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச வந்தா நான் இப்ப பேச மாட்டேன்” என்று சொன்னால், எங்களுடைய மொழியை, இனத்தை தாழ்த்துகிற ஒருவரை கேள்வி கேட்பதற்கு துப்பு இல்லாத ஒரு சக்தி, எங்களை பார்த்து தீய சக்தி, தூர சக்தின்னு சொல்லுவீங்களா? நீங்க என்ன சக்தி, நார சக்தியா? நாங்க கேட்க மாட்டோமா?
மக்களே ஜாக்கிரதை
அப்புறம் நாங்க சாதி, மதம், பணத்தை எல்லாம் உடைச்சிட்டீங்க… நீங்க சாதி பார்த்து கேண்டிடேட்டை போடலையா? நீங்க மதமே பார்க்கலையா?
கையில ஒரு மதம், நெத்தியில ஒரு மதம், பதவி ஏத்துக்கும் போது ‘ஜோசப் விஜய் என்னும் நான்’ அது ஒரு மதம். என்ன ப்ரோ? முழுவதும் முரண்பாடு.
அதைவிட பெரிய கொடுமை “திருச்சி கிழக்கு தொகுதி வந்து என்னுடைய செல்லப் பிள்ளை என்கிறார்… ஐயோ ஜனங்களே ஜாக்கிரதையா இருங்க”. நான் இப்ப என்ன கேக்குறேன், இதெல்லாமா ஒரு சீஃப் மினிஸ்டர் பிரச்சனை? ஒரு சீஃப் மினிஸ்டருக்கு முன்னாடி என்னென்ன பிரச்சனை இருக்கு? தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய உரிமைகளை நீங்க தந்தீங்களா?
நீங்க ஒரு ஆளே இல்லனு சொல்றாரு
இன்னைக்கு டி.கே. சிவகுமார் – பக்கத்து மாநிலத்துடைய முதலமைச்சர் பேசியிருக்காரு…. “திமுக-வும் ஸ்டாலினும் இருக்கிற வரைக்கும் தான் எங்களுக்கு பிரச்சனை, மேகதாதுக்கு இனிமேல் எங்களுக்கு பிரச்சனை இல்லை” என்கிறார். அதுக்கு தான் எதிர்வினை ஆற்றி இருக்கீங்களா முதலமைச்சர் அவர்களே? உங்களை சொல்றாரு நீங்க ஒரு ஆளே இல்லைன்றாரு அவரு, எங்களுக்கு பிரச்சனையே இல்லைன்றாரு. டி.கே. சிவகுமாருக்கு உங்க பதில் என்ன?
அப்புறம் பச்சை துண்டை போட்டுக்கிட்டு சொன்னீங்களே, “நான் விவசாயி மகனாக பிறக்காமல் இருப்பதற்கு வருத்தப்பட்டேன்”. நான் விவசாய வீட்டுப் பிள்ளை, எட்டாவது பிள்ளை, நான் கடைசி பிள்ளை, எனக்கு வந்து ஏர் ஓட்ட தெரியும், தண்ணி பாய்ச்ச தெரியும், உழவு தெரியும், வண்டி மாடு ஓட்டிருக்கேன், எல்லாம் பண்ணிருக்கேன்.
நீங்க, “ஐயயோ எனக்கு விவசாய பிள்ளையா பிறக்காம போயிட்டேனே” அப்படின்னீங்க. இன்னைக்கு பாத்தீங்களா டிவியில, விவசாயிகள் போராடுறாங்க, பிணமாக நடிச்சுக்கிட்டு போராடுறாங்க. “இந்த ஆட்சியில் நாங்க பிணமாகிக் கொண்டிருக்கிறோம்”னு… இன்னொன்னு கேட்கிறேன், எங்களை ஆறு மாசம் கேள்வி கேட்காதீங்கன்னு சொன்னீங்களே, நீங்க ஆறு மாசம், ஆறு வருஷம் கூட கேள்வி கேட்கல.
இதுதான் தேர்தல் அறிக்கையின் நாணயமா?
உங்களுடைய தேர்தல் அறிக்கையில உங்க நடத்தை நாணயம் இருக்கா?ரிசர்வ் வங்கியின் 2025ஆம் ஆண்டு வழிகாட்டுதல்கள் இல்லாம நீங்க விவசாய கடனை முழுசா தள்ளுபடி செய்ய முடியாது. நீங்க 2026-ல தானே தேர்தல் அறிக்கை தயாரிக்கிறீங்க? அந்த அறிக்கை தயாரிக்கும் போது இப்படி ஒரு சட்டம் இருப்பது என்பதை தெரியாமல் கூட ஒரு அரசியல் கட்சி, நீங்க வந்து தேர்தல் அறிக்கை கொடுத்தா உங்களுக்கு என்ன பேர் வைக்கலாம்? ரொம்ப கல்வியாளர்கள்னு பேர் வச்சிரலாமா? மெத்த படித்தவர்கள்னு பேர் வச்சிரலாமா? பேரறிவாளர்கள்னு பேர் வச்சிரலாமா? ஞானிகள்னு பேர் வச்சிரலாமா… நீங்களே ஒரு வார்த்தையை சொல்லுங்களேன்?
அப்ப நீங்களே ஒரு வாக்குறுதி கொடுத்துட்டு அதை முடிக்க முடியாம இப்ப புது புது சப்பக்கட்டுகள் எல்லாம் வைக்கிறீங்க, 200 யூனிட் கரண்ட்டுக்கு. அப்புறம் கச்சத்தீவு… கச்சத்தீவு வந்து நீண்ட நாள் எங்களுடைய தமிழருடைய பிரச்சனை, மீனவருடைய பிரச்சனை. அதை கேட்டுருக்கேன்னு சொல்லுங்க, கேட்போம்னு சொல்லுங்க, போராடுவோம்னு சொல்லுங்க, ஒத்துக்குறோம். அதுல அரசியல் சட்ட சிக்கலே இருக்கு. தமிழ்நாடு அரசாங்கத்தினுடைய, சட்டமன்றத்தினுடைய அனுமதி இல்லாமலேயே அன்றைக்கு கச்சத்தீவை மத்திய அரசாங்கம் தாரைவார்த்தது. அதை திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி, கலைஞர் தலைமையில் சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு கண்டித்திருக்கிறது, எல்லாம் ஆவணங்களா இருக்கு. உடனே நீங்க செஞ்சு கொடுக்கணும்னு அவசியம் இல்லை, ஆனா குறைந்தபட்ச ஒரு பொறுப்புக்கூறல் வேணாமா? உங்கள் அமைச்சர்களுக்கு. என்ன அமைச்சர்கள் அவர்கள்.
திமுக மீது பழி போடுவது ஏன்?
கச்சத்தீவை பத்தி பேசினா “no comments”. திருவள்ளுவர் சிலையை பத்தி, ஏன் காவி சாயம் அடிக்கிறார் கவர்னர்னு கேட்டாக்க “அதை இப்ப பேச வேணாம்”. பக்ரீத்துக்கு ஒரு ஜட்ஜ்மென்ட் வந்திருக்கு. எங்கள் கட்சியின் சார்புல சரவணன், திமுக துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் எல்லாம் அதை கண்டிச்சிருக்காங்க. நீங்க வந்து என்ன பேசி இருக்கீங்க? “மாநில உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன்” என்று போனீங்களே, பிரதமரிடம் என்ன கேட்டு வந்தீங்க? “மதச்சார்பின்மையை விட்டு கொடுக்க மாட்டேன்…” இந்த ஜட்ஜ்மென்ட்ல உங்களுடைய பதில் என்ன? உங்க கமெண்ட்ஸ் என்ன? அப்பீல் போக போறீங்களா, என்ன பண்ண போறீங்க? எதுவுமே இல்லையே!
இன்று மின்சார பற்றாக்குறை… இதற்கு திமுக ஆட்சி மேல பழி போடுறீங்களே, ஏன்? கோடை காலத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் back record இருக்கு. ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாதத்தில் தமிழ்நாட்டில் எவ்வளவு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் என்பது ஜெயலலிதா காலத்தில இருந்து, எங்களுடைய காலத்தில இருந்து, எடப்பாடி காலத்தில இருந்து back record, track record இருக்கு.
வழக்கமா ஒரு அரசாங்கம் என்ன பண்ணும்னா, எந்த பருவ காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் அப்படிங்கிறதை நினைச்சு, முன்கூட்டி அறிந்து அதற்கான கூடுதல் மின்சாரத்தை பெற வேண்டும். கூடுதல் விலையாக இருந்தால் கூட அதையும் சேர்த்து அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று, “வேற வழி இல்லை, நாங்க வாங்குறோம்”னு சொல்லணும். அதை செய்யறதற்கு கூட துப்பு இல்லை உங்களுக்கு. கரண்ட் இப்ப போயிடுச்சுன்னா காரணம் வந்து ‘ஸ்டாலின்’ என்றீங்க, ‘திமுக’ என்றீங்க. Bro Chief Minister, Honorable Vijay Bro, really we are afraid, bro. எங்கே போயிட்டு இருக்குன்னு தெரியல ப்ரோ, தூக்கம் வரமாட்டேங்குது ப்ரோ. ஒண்ணுமே சரியில்லையே ப்ரோ. தொலைநோக்கு திட்டமும் ஒன்னும் கிடையாது, day-to-day administration-ம் ஒன்னும் கிடையாது. என்ன பண்றதுன்னு தெரியல ப்ரோ. ஏதாவது ஒரு நல்ல முடிவு எடுங்க ப்ரோ, இல்லன்னா நல்லா இருக்காது ப்ரோ.
எங்களுடைய தலைவர், எங்களுடைய திமுக, திராவிட முன்னேற்ற கழகம் உங்களுடைய நியாயமான எல்லா செயல்களுக்கும் உடன்நிற்க தயாராக இருக்கிறது. ஆனால் இப்படியெல்லாம் ஒரு முதிர்ச்சி இல்லாத, முன்னனுபவம் இல்லாமல் போவதில் தவறில்லை, ஆனால் முதிர்ச்சி இல்லாத, பக்குவம் இல்லாத, எதை பற்றியும் சிந்திக்காத ஒரு தாந்தோணித்தனமானஅரசாங்கத்தை தந்து கொண்டிருக்கிற முதலமைச்சர் அவர்களே, உங்களை தமிழ்நாட்டு மக்களின் சார்பில் – வாக்களித்த மக்களின் சார்பில், வாக்களிக்காத மக்களின் சார்பில்… அப்புறம் சொல்றீங்க “ஒரே தலைவர், ஒரே நம்பிக்கை நான்தான்” என்கிறீங்க. உங்களுக்கு ஓட்டு போட்டது, நாடாளுமன்ற தேர்தல் முறையில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்,
ஆனா “தமிழ்நாட்டு மக்களுக்கு நான்தான் தலைவன்”னு சொல்ல எந்த அதிகாரமும் இல்லை, எந்த அனுமதியும் இல்லை. ஏன்னா 65% பேர் உங்களை வேண்டாம்னு ஓட்டு போட்டிருக்காங்க. I don’t mean that they are not complementary, நீங்க அரசியல் சட்டப்படி சரின்னு சொல்லல, அரசியல் சட்டப்படி அதுதான் சரி electoral policy. ஆனால் மனதிலே வைத்து கொள்ளுங்கள், உங்களை வேண்டாம் என்று நிராகரித்தவர்கள் 65% பேர் இருக்கிறார்கள்.
அந்த 65%த்தில் இன்னும் ஒரு 10, 15 சதவீதமாவது உங்கள் பக்கம் பெறுவதற்கு முயற்சி எடுங்கள். எங்களை, எங்கள் தலைவரை எப்போது பார்த்தாலும் குறை சொல்லி, அதிலே எல்லலும் துள்ளலுமாக பேசி, நக்கல் நையாண்டி பேசி உங்களுடைய முதலமைச்சர் என்ற நாற்காலிக்குள்ள தகுதியை குறைத்து கொள்ளாதீர்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
நேற்று இவ்வளவு விஷயம் பேசிருக்காங்க… உங்களோட தோழர்களாக இருந்த கட்சிகள், இருக்கறவங்க. இந்த விஷயத்துக்கு சரியா எதிர்வினை ஆற்றுகிறார்கள் என நீங்க நினைக்கிறீங்களா?
அதுதான் மொத்தமா சொன்னேன், Constitution Morality-ன்னு ஒன்னு இருக்கு. அதாவது ஒரு அரசாங்கம் இருக்கணும்ங்கறதுக்காக இன்னொரு alliance-ல ஜெயிச்சவங்க வெளியில இருந்து ஆதரவு கொடுக்கிறதை ஒத்துக்கறேன். சிபிஐ, சிபிஎம்-ஐ ஒத்துக்கறேன். மத்தவங்களை நான் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே விமர்சனங்கள் சோசியல் மீடியால எல்லாம் பார்த்திருப்பீங்க. இப்ப நான் சொல்ல வர்றது, இன்னொரு அணியில் இருந்து வெற்றி பெற்ற பிறகு அவர்களுடைய தயவோடு ஆட்சி அமைத்ததற்கு பிறகும் நீங்கள் ஏதோ 185 சீட்டை பிடிச்சிட்ட மாதிரி கை காலெல்லாம் ஆட்டிட்டு பேசுறீங்களே, கை அப்படி போகுது, இப்படி போகுது… நான் என்ன கேட்கிறேன், சட்டமன்றத்தில் எங்கே போச்சு உங்க கை? பேப்பரை வச்சிட்டு பேசி என்ன அர்த்தம்?
எதிர்கட்சி தலைவர் உதயநிதி கேட்ட கேள்விக்கு உங்களால ஏன் பதில் சொல்ல, எதிர்கொள்ள முடியல? உங்க உடல்மொழி எங்கே போச்சு? My sincere advice to the press, நான் தயவு பண்ணி கேட்கிறேன், ஏதோ அவரை வெறுத்து கேட்கல. ரெண்டு body language-ஐயும், ரெண்டு tone and tenor-ஐயும் நீங்கள் வந்து ஒப்புமை செய்யுங்க. அதற்கு பிறகு இவருடைய ஆளுமை என்ன, இவர் என்ன செய்ய போகிறார், என்ன கொடுக்க போறார் அப்படிங்கிறதை நீங்கதான் தீர்மானிக்கணும், மக்கள்தான் தீர்மானிக்கணும்.
மே 4ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, பாஜக/ஆர்எஸ்எஸ் தரப்பின் முயற்சியின்படி திமுக மற்றும் அதிமுகவுடன் தொடர்புகள் மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கியது என்று மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறாரே?
அவர் எங்கே இருந்து பார்த்தாரு சார்? நான் வாதத்துக்காக சொல்றேன். திமுக-விலயோ, அதிமுக-விலயோ இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள்… “இது என்ன வந்து ஒரு புதுசா இருக்கே… தமிழ்நாட்டுக்கு நல்லதா, ஏன் நம்ம திராவிட சித்தாந்தம் ஒன்னுதானே… அப்படின்னு முயற்சி பண்ணி பேசி இருக்கலாம். ஜனநாயகத்தில் பேசக்கூடாதுன்னு ஒன்னும் கிடையாது. எங்க கட்சியினுடைய தலைவர் எடுத்த திடமான முடிவு என்ன சார்?
நான் என்ன கேட்கிறேங்க? நீங்க வந்து மற்றும் சிலர் ‘அல்லு சில்லு’, அவங்களோட போய் டீ குடிச்சு, காபி குடிச்சு, போட்டோ எடுத்துட்டு, வெட்கம் இல்லாம சால்வை போட்டுட்டு, அவன் சால்வையை நீங்க போடுறதை வாங்கிட்டு வந்து “நாங்க பண்ணோம், நாங்க பண்ணோம், நாங்க பண்ணோம்”னா என்ன பண்ணிட்டு இருந்தாங்கன்னு கேக்குறேன். சார், what is the stand of DMK? What is the leader. official-ஆ என்ன வருதுன்னு பாக்கணும். அதுக்குள்ள டிஸ்கஷன் 1000 நடந்திருக்கலாம். நாங்க சைடுல பள்ளிக்கூடம் கூட்டுனோமான்னு கேட்டா, பாரதி வீட்டுல என்ன நடந்துச்சு, ராஜா வீட்டுல ரெண்டு பேருக்கு நடந்துச்சு, இ, என்ன நடந்தா நடந்துட்டு போகுது ஜனநாயகத்துல? நடக்கும் சார், தப்பில்லை. Allegation, counter allegation is common in democracy.
பல சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு திமுகதான் காரணம்… ஆனால் எங்க மேல என்ன பழி சுமத்தினாலும் நாங்க மக்களோட இருப்போம்னு பேசியிருக்காரு…
இது நீங்க பிரஸ் தானே? அவர் சொல்லிட்டாருல்ல, என்கிட்ட வந்து கேக்குறீங்கள்ல… “இப்ப நடக்கிற கொலைக்கு, கொள்ளைக்கு, பாலியல் வன்முறைக்கு எப்படிங்க பழைய அரசு காரணமாகும்?”னு அவர்கிட்ட கேட்டீங்களா யாராவது? ப்ளீஸ், கேட்டீங்களா? என்னங்க, கவர்மெண்ட் மாறிடுச்சு, ஆபீசர்ஸ் மாறிட்டாங்க, machinery மாறிடுச்சு. You have to give a clear signal: “நான் பழைய ஆட்சி மாதிரிலாம் இருக்க மாட்டேன், ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன், சட்டம் எல்லாம் சரியா இருக்கும்”னு சொல்லிட்டீங்க, மெசேஜ் சென்ட் பண்ணிட்டீங்க. அதுக்கு பிறகு கொலைகள் நடக்குது, அதுக்கு எப்படி மு.க. ஸ்டாலினும், பழைய அமைச்சரவையும், பழைய கவர்மெண்ட்டும் காரணமாய் இருக்கும்
பிரஸ் மீட் பண்றதுக்கு, அவருக்கு நேரம் தேவைப்படுமா அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா?
என்ன, 24 மணி நேரத்தை 25-ன்னு மாத்திடலாமா நாளைல இருந்து? ஒரு நாளைக்கு 24 மணி நேரம். இவருக்காக 25-ன்னு மாத்திடட்டுமா? 35 நாள், இன்னொரு 10 நாள் எக்ஸ்டெண்ட் பண்ணிடலாமா? எதுக்கு நேரம் இல்லைன்னு கேக்குறேன்? பிரஸ்ஸை பார்க்கிறது வந்து part of the constitution. அதுக்குத்தான் உங்களுக்கு சொல்லட்டுமா,
நீங்க வந்து executive-க்கு வரம்பு வச்சிட்டீங்க, judiciary-க்கு வரம்பு வச்சிட்டீங்க, legislation-க்கு வரம்பு வச்சிருக்கீங்க. அந்த வரம்புகளை மீறும்போது என்ன பண்ணனும்னு சுப்ரீம் கோர்ட்ல சொல்லிருக்காங்க. “ஏன் பிரஸுக்கு வரம்பு வைக்கல?”ன்னு கே.டி. ஷா-ன்னு ஒருவர் கேட்டிருக்காரு அரசியல் நிர்ணய சபையில. அப்ப அவர் (அம்பேத்கர்) சொல்றாரு, “இந்த மூன்று துறையிலும் தங்களுடைய டியூட்டியில இருந்து தவறிட்டாங்கன்னா, அதை இடித்துரைத்து மக்களை காப்பாற்றுவதற்கு, ஜனநாயகத்தை பேணுவதற்கு கடைசி அசைலம், Last Asylum…” இது அம்பேத்கர் கோட். “எல்லாத்துக்கும் கடைசி புகலிடம் நீங்கதான் (பிரஸ்)” என்கிறார். அதனாலதான் அவர்களுக்கு வரம்புகள் வைக்கவில்லை, அவங்க சட்டதிட்டத்தை உருவாக்கவில்லை பிரஸுக்குன்னாரு. நீங்க அப்படி இருக்கீங்களா? ஏன் இவ்வளவு கேள்வி என்னை கேக்குறீங்க, முதலமைச்சரை கேட்க மாட்டீங்க? Bro Vijay Bro, இதுவும் நியாயம் இல்லை ப்ரோ, கேளுங்க ப்ரோ.
இப்ப காங்கிரஸ் உள்ள எந்த கட்சியினர் வெளியேறுனாலும் அவங்களை பத்தி கடுமையான விமர்சனங்கள் இல்லை, ஆனா நாங்க வெளியேறும்போது மட்டும் திமுக வந்து கடுமையா விமர்சிக்குதேனு திருமாவளவன் சொல்லியிருக்காரு?
அது எங்களுக்கு இருந்த அவ்வளவு பிணைப்பு, பாசம். யாருகிட்ட கூட வச்சிருந்தோமோ, அந்த பாசம் வந்து முரண்படும்போது கோவம் வரும். காங்கிரஸ் மேல நாங்க அவ்வளோ பாசம் வைக்கல, ஐடியலாஜிக்கலா. சிபிஐ, சிபிஎம் வெளியில இருந்தாங்க, அதனால எங்களுக்கு வருத்தம் இருக்கும். அதுல என்ன இருக்கு ? என் சொந்த தம்பி, எங்க அண்ணன் எனக்கு வந்து நான் எதிர்பார்த்த டிரஸ் வாங்கித் தரலைன்னு சொல்லும்போது கோவம் வரும். நாளைக்கு திரும்பவும் சேர்ந்துக்குவோம் ideology-ல. அன்னைக்கு கோவம் இருந்தது, வருத்தமாய் நானும் பேசிருப்பேன், அவங்களும் பேசிருப்பாங்க, அதுல என்ன இருக்கு? Nothing. இது ஒரு சகோதர முரண்பாடு, அவ்வளவுதான்.









