தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக், சிபிஎம், சிபிஐ, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது. விஜய் மே 10ம் தேதி முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.
பதவியேற்ற பின்னர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை நேரில் சந்தித்தார். ஐயூஎம்எல் கட்சி அலுவலகத்திற்கும் நேரில் சென்றார். விசிக தலைவர் தொல். திருமாவளவனைச் சந்தித்தார். அதே சமயம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்காத விஜய், அப்போது அதிமுகவில் தனி அணியாகச் செயல்பட்ட சிவி. சண்முகம், வேலுமணி தரப்பைச் சந்தித்தார். முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “முன்னாள் முதல்வர் ஒரு பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் முதல்வர் விஜய் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருக்கலாம். அப்படிச் சந்தித்துப் பேசியிருந்தால் தேவையற்ற பிரச்சனைகள் எழுந்திருக்காது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 2) அமைச்சர் நிர்மல் குமார் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முதல்வர் விஜய் எடப்பாடியைச் சந்தித்திருக்கலாம் என பெ. சண்முகம் கருத்து தெரிவித்திருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு,“திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களைச் சந்திக்கவும் அப்போது நேரம் கேட்கப்பட்டது. ஆனால் சில தலைவர்கள், அவரது தனிப்பட்ட சூழ்நிலையைக் கருதி இப்போதைக்கு வேண்டாம், நாங்களே தோல்வியுற்று இருக்கிறோம், இந்த நேரத்தில் சந்தித்தால் நன்றாக இருக்காது என்று தெரிவித்தனர். எங்கள் தலைவர் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை. அனைத்து தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார்.
எடப்பாடி அவர்களைச் சந்திக்கவும் எங்கள் தலைவர் சார்பாக நேரம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் அரசியல் சூழல் காரணமாக உறுதியளிக்கவில்லை. அதனால் அது நடக்கவில்லை” என்றார்.
“இதை நாங்கள் வெளியில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தோம். இன்று எங்களுடன் கூட்டணியில் இருக்கும் தோழர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். அதனால் நாங்கள் இப்போது இதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
சிவி. சண்முகத்தைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு, முதல்வர் விஜய் மு.க. ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அனைத்து தரப்பு தலைவர்களையும் சந்தித்தார். எடப்பாடி தரப்பில் சூழல் காரணமாக சந்திக்க வேண்டாம் என்று நினைத்ததால் மட்டுமே சந்திப்பு நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.
