“இந்தியா கூட்டணியில் உள்ள எங்கள் மதிப்பிற்குரிய சகாக்கள், திமுகவுடனான தங்களின் ஏமாற்றங்கள் அல்லது கருத்து வேறுபாடுகளில் காங்கிரஸ் கட்சியை இழுக்க வேண்டாம்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜூன் 22) செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகளுடன் எங்களை ஒப்பிடக் கூடாது. காங்கிரஸ் கட்சி (திமுகவிற்கு) நன்றிகூடச் சொல்லாமல், தவெக கூட்டணிக்குச் சென்றுவிட்டது” என்று விமர்சித்திருந்தார்.
வைகோவின் இந்த விமர்சனத்திற்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “மூத்த தலைவர் வைகோ அவர்களுக்கும், அவர் பொதுவாழ்க்கைக்கு ஆற்றிய நீண்டகால பங்களிப்பிற்கும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனினும், உரிய மரியாதையுடன் நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவெனில், நன்றியுணர்வு என்பது பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளைப் பொறுத்தது.
கடந்த 4ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, பாஜக/ஆர்எஸ்எஸ் தரப்பின் முயற்சியால் திமுக மற்றும் அதிமுகவுடன் தொடர்புகளும், அரசியல் பேச்சுவார்த்தைகளும் தொடங்கின. குறிப்பாக, பாஜகவின் தூண்டுதலின் பேரில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடனும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு, மறைமுகப் பேச்சுவார்த்தைகள் (Dealings) நடந்தன.
இந்தச் சூழல் இயல்பாகவே காங்கிரஸ் தலைமைக்குக் கவலையை ஏற்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில், அந்தப் பின்னணிகளைப் பற்றிப் பேசாமல் காங்கிரஸ் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதோ அல்லது நடைமுறைக்கு ஏற்றதோ அல்ல.
எனவே, இந்தியா கூட்டணியில் உள்ள எங்கள் மதிப்பிற்குரிய சகாக்கள், திமுகவுடனான தங்களின் ஏமாற்றங்கள் அல்லது கருத்து வேறுபாடுகளில் காங்கிரஸ் கட்சியை இழுக்க வேண்டாம் என்று மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சி தனது கொள்கைகள், தொண்டர்கள், பரஸ்பர மரியாதை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் தனது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து பயணிக்கும்.”
இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.









