9
நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து பச்சைத் தேயிலையை வாங்கும் ஆலைகளுக்கான விற்பனை விலையைத் தேயிலை வாரியம் நிர்ணயம் செய்துள்ளது.
இதுகுறித்து தேயிலை மேம்பாட்டு வாரியத்தின் உதவி இயக்குநரான பி.பகலவன் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், ”வரும் பிப்ரவரி 28 வரை உற்பத்தியாளர்களிடம் வாங்கும் தேயிலை அனைத்துக்குமான விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.14 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேயிலை ஆலைகள் அனைத்தும் இப்புதிய விலையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
தேயிலை வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து ஆலைகளுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலைக்குக் குறையாமல் தேயிலையை வாங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விற்பனை விலையானது முந்தைய ஐந்து மாதங்களில் இருந்த விலையை விட அதிகபட்ச அளவாகும். ஜனவரி மாதத்தில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.13 ஆக இருந்தது. 2017 பிப்ரவரியில் இதன் விலை ரூ.17 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.









