கிண்டி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் குமார் கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் ஐடிஐ படித்து வந்தார். தனது தாய் சரஸ்வதியுடன் வசித்துவந்த மாணவர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மர்ம நபர்களால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். சுவாதி கொலைக்குப் பிறகு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
மாணவர் கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரஞ்சித்தை மூன்று பேர் துரத்தித் துரத்தி வெட்டியதும். ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 2) மாணவர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். வடபழனி கார்த்திகேயன், சாலிகிராமம் நவீன்குமார், போரூர் சிவகணேஷ் மூவரும் மாணவனைக் கொலை செய்தது விசாரணையில் தெரிவந்துள்ளது.
முன்விரோதம் காரணமாகக் கொலை செய்தனரா அல்லது வழிபறிக்காகக் கொலை செய்தனரா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.









