ரூ.26,072 மருந்து இனி ரூ.5,491.. புற்றுநோய்க்கான 543 மருந்து பிராண்டுகளின் புதிய விலைப்பட்டியல் வெளியீடு!

Published On:

| By Mathi

Cancer - Drugs

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 543 பிராண்டு மருந்துகளின் விலையை மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) குறைத்துள்ளது. இதற்கான புதிய விலைப்பட்டியல் இன்று (அக். 28) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நவம்பர் 9-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் பொருளாதாரச் சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், புற்றுநோய் மருந்துகளின் விலையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த அக். 17-ந் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, 137 வகையான புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்துக்கு வரம்பு விதித்து, அவற்றின் விலையைக் குறைக்க தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது. இந்த விலைக் குறைப்பு நவம்பர் 9-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது மருந்துகளின் திருத்தப்பட்ட விலை விவரங்களை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் சமர்ப்பித்து வருகின்றன.

அதன் அடிப்படையில் தற்போது 543 பிராண்டு மருந்துகளின் பழைய விலை மற்றும் புதிய விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

எந்த மருந்தின் விலை எவ்வளவு குறைவு?

இதில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சில மருந்துகளின் விலை பல ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அனார்சோல் (Anarzole) என்ற மருந்தின் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையின் விலை ரூ.695.76-ல் இருந்து ரூ.73 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.6,337-க்கு விற்பனை செய்யப்பட்ட அசாசைடின் (Azacytin) ஊசி மருந்தின் விலை ரூ.1,495.04 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

பெவாசிசாப் (Bevacizab) ஊசி மருந்தின் விலை ரூ.21,767.70-ல் இருந்து ரூ.5,930.13 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ரூ.22,031.25 ஆக இருந்த டெப்ரூமாப் (Debrumab) ஊசி மருந்தின் புதிய விலை ரூ.5,941 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.26,072.16-க்கு விற்பனை செய்யப்பட்ட ஃபுல்பிரெகா (Fulbreca) ஊசி மருந்தின் விலை ரூ.5,491 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஒரு மருந்தின் விலை மட்டும் ரூ.20,581.16 குறைந்துள்ளது.

ரூ.14,235 ஆக இருந்த ஃப்ளூடானாக்ஸ் (Fludanox) ஊசி மருந்தின் விலை ரூ.2,432 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், டசனாட் 20 (Dasanat 20) என்ற மருந்தின் 60 மாத்திரைகள் கொண்ட அட்டையின் விலை ரூ.2,812.50-ல் இருந்து ரூ.1,085.93 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனுடா (Enuta) என்ற மருந்தின் 28 கேப்சூல்கள் கொண்ட அட்டையின் விலை ரூ.6,578.20-ல் இருந்து ரூ.2,232 ஆகவும், எர்லிப் (Erlib) என்ற மருந்தின் 30 மாத்திரைகள் கொண்ட பாட்டிலின் விலை ரூ.4,637.45-ல் இருந்து ரூ.2,008 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

137 மருந்துகள்.. 543 பிராண்டுகள் எப்படி?

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஒரே மருந்தை பல்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு பிராண்டு பெயர்களில் தயாரித்து விற்பனை செய்கின்றன.

அந்த வகையில், கடந்த அக். 17-ந் தேதி 137 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கான விலை சீரமைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்களின் 543 பிராண்டுகளுக்கான புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையில் 20-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்புச் சிகிச்சை மருந்துகளும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் டெனோசுமாப் (Denosumab), பெருங்குடல், கருப்பை மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் பெவாசிசுமாப் (Bevacizumab) ஆகிய மருந்துகளும் இதில் அடங்கும்.

மேலும், புற்றுநோய் சிகிச்சையின்போது வெள்ளை ரத்த அணுக்கள் குறைவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பெக்ஃபில்கிராஸ்டிம் (Pegfilgrastim) மருந்தும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

நவம்பர் 9 முதல் புதிய விலை

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த அக். 27-ந் தேதி வரை சமர்ப்பித்த விலை விவரங்களின் அடிப்படையில் இந்த 543 பிராண்டுகளுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்களும் தங்களது மருந்துகளின் புதிய விலை விவரங்களைச் சமர்ப்பிக்கும்போது இந்தப் பட்டியல் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 9-ந் தேதி முதல் இந்த மருந்துகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை அமலுக்கு வருகிறது.

புற்றுநோய் சிகிச்சை பெறும் நோயாளிகள் தாங்கள் பயன்படுத்தும் மருந்தின் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பதை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் https://nppa.gov.in/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share