காஸா போரின் போது இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கிய 51 நாடுகள்: அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா!

Published On:

| By எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை

(அல் ஜசீரா கடந்த 26.06.2026 அன்று வெளியிட்ட ’Not just the US: How 51 countries armed Israel during Gaza war’ என்ற  கட்டுரை புலனாய்வு இதழியலாளர் கீலான் மூகியால் (Caolán Magee) எழுதப்பட்டது.

ADVERTISEMENT

கீலான், ஆயுதத் தொழில், பெருநிறுவனத் தொழில்நுட்பம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி செய்திகளையும் சிறப்புக் கட்டுரைகளையும் எழுதுகிறார்.

அவர் இங்கிலாந்தின் லண்டன் மற்றும் லெபனானின் பெய்ரூட் ஆகிய இடங்களுக்கு இடையே வசித்து வருகிறார். இதற்கு முன்பு ’தி கார்டியன்’, ’சி.என்.என்’, ’தி டைம்ஸ்’, ’தி இன்டிபென்டன்ட்’ ஆகியவற்றுக்காகப் பணியாற்றியுள்ளார்.

ADVERTISEMENT

2026-ல், அசாத் அரசாங்கத்தின் கீழ் காணாமல் போனவர்கள் குறித்து சிரியாவிலிருந்து அவர் செய்த செய்திகளுக்காக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலின் கேபி ராடோ (Gaby Rado) விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அதற்கு முன்னர், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்த அவரது செய்திகளுக்காக 2025-ல் இதே விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். மேலும், பெய்ரூட்டிலிருந்து இஸ்ரேல்-லெபனான் போர், மொராக்கோ, போஸ்னியா-ஹெர்சகோவினா ஆகியவற்றிலிருந்து இடப்பெயர்வு, பாரிஸிலிருந்து பிரெஞ்சுத் தேர்தல்கள் ஆகியவற்றையும் அவர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அக்கட்டுரையின் தமிழாக்கத்தில் ஒரு பகுதி இங்கு தரப்பட்டுள்ளது. முழுக்கட்டுரையையும் வாசிக்க விரும்புபவர்களுக்கான இணைப்பு:( https://www.aljazeera.com/author/caolan-magee)

இடதுசாரிகள் ஏன் பேசவில்லை?

காஸா இனக் கொலைக்கு மோடி அரசாங்கமும் மனித உயிர்களைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மரண வியாபாரிகளாக செயல்படும் சில இந்தியத் தொழில் நிறுவனங்களும் உடந்தையாக இருப்பதைப் பற்றி நாடாளுமன்றத்தில் வீராவேசமாகப் பேசும் ராகுல் காந்தி ஒருபுறமிருக்க இடதுசாரிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும்  ஏன் பேசவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

2024 ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஒரு குளிர் மிகுந்த நாளில், காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரைக் கண்டிப்பதற்காக, தி ஹேக்கில் (The Hague) உள்ள சர்வதேச நீதிமன்றத்திற்கு (International Court of Justice-ICJ) வெளியே போராட்டக்காரர்கள் கூடினர்; அப்போது போர் தொடங்கி கிட்டத்தட்ட 100 நாட்கள் ஆகியிருந்தன.

3,000 கி.மீ. (1,864 மைல்கள்) தொலைவிற்கும் அதிகமான தூரத்தில், காஸாவில் உள்ள சில பாலஸ்தீனியர்கள் யூடியூபில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட அந்த நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலின் இடைவிடாத குண்டுவீச்சிலிருந்து தப்பிப் பிழைக்கப் போராடிக்கொண்டிருந்தனர்.

இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டித்தல் தொடர்பான உடன்படிக்கை (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide)  நடைமுறைக்கு வந்த கிட்டத்தட்ட எட்டு பத்தாண்டுகளில், ஒரு சில வழக்குகள் மட்டுமே இதுவரை நீதிமன்றத்தை எட்டியிருந்தன. அன்று, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு இனப்படுகொலையாக – அதாவது, ஓர் இனம், இனம் சார்ந்த, மதம் சார்ந்த அல்லது தேசியக் குழுவை முழுமையாகவோ, பகுதியாகவோ அழிப்பதாக  அமைகிறதா –  என்பதைப் பரிசீலிக்குமாறு உலகின் மிக உயர்ந்த நீதிமன்றத்திடம் தென்னாப்பிரிக்கா கோரியது.

நீதிமன்ற அறைக்குள், தென்னாப்பிரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அயர்லாந்து வழக்கறிஞர் பிளினா நி ராலி (Blinne Ni Ghralaigh) பேசத் தொடங்கினார்.

காஸாவில் இஸ்ரேலிய அதிகாரிகளின் “மனிதாபிமானமற்ற, இனப்படுகொலை சார்ந்த சொல்லாடல்களுக்கு” இணையாக இராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், “சர்வதேச சமூகம் பாலஸ்தினிய மக்களைத் தொடர்ந்து கைவிட்டு வருகிறது,” என்று நீதிபதிகளிடம் கூறினார்.

“உலகம் ஏதாவது செய்யக்கூடும் என்ற அவநம்பிக்கையான, இதுவரை வீணான, நம்பிக்கையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த அழிவை அது நிகழும் நேரத்தில் ஒளிபரப்பும் இனப்படுகொலை வரலாற்றில் இதுதான் முதலாவதாகும்,” என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து பேர் கொலை

தினமும் சராசரியாக 247 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், 48 தாய்மார்கள், அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பேர்; தினமும் 117-க்கும் மேற்பட்ட குழந்தைகள், அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்றும் நி ஹாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பேரழிவிலிருந்து உருவான, மருத்துவர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களிடையே பயன்படுத்தப்படும் புதிய சுருக்கப்பெயரான WCNSF – காயமடைந்த குழந்தை, உயிர் பிழைத்த குடும்பம் (Wounded Child, No Surviving Family) என்ற வகையில் அடங்கும் 7,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தினியர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.  ”இந்த உண்மைகளைவிட இனப்படுகொலை குறித்த  தெளிவான அல்லது வலுவான சான்றை முன்வைக்க முடியாது,” என்று நி ஹாஇ கூறினார்.

காஸாவில் இனப்படுகொலைக்கான நம்பத்தகுந்த அபாயம் இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் ஜனவரி 26, 2024 அன்று தீர்ப்பளித்து, தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. முக்கியமாக, இனப்படுகொலை தொடர்பான  உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 153 நாடுகளும், இனப்படுகொலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவற்றின் கடமைகளை அது நினைவூட்டியது. ஆனால் அடுத்த 22 மாதங்களில் கொலைகள் தொடர்ந்தன. அக்டோபர் 2025-ல் போர் நிறுத்தம் எட்டப்பட்டபோது, 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர்; மேலும் சுமார் 171,000 பேர் காயமடைந்திருந்தனர்.

ஆயுத ஏற்றுமதி

அந்தக் காலகட்டம் முழுவதிலும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

காஸாவில் இனப்படுகொலை ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச நீதிமன்றம் (ICJ) எச்சரித்த பின்னரும், குறைந்தது 51 நாடுகள், தன்னாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றிலிருந்து இராணுவம் தொடர்பான பொருள்கள் இஸ்ரேலுக்குள் தொடர்ந்து நுழைந்ததாக அல் ஜசீராவின் பல மாத கால புலன் விசாரணை கண்டறிந்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட  காலகட்டத்தில் இஸ்ரேலிய வரிவிதிப்பு அதிகார அமைப்பில் (Israel Tax Authority -ITA)  உள்ள இறக்குமதி பற்றிய  தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதை  முதன்மையாக அடிப்படையாகக் கொண்டும், சுங்க வரி பற்றிய பதிவுகள், தகவல் அறியும் உரிமைக் கோரிக்கைகள் ஆகியவற்றின் துணையுடனும், இந்தப் புலன் விசாரணை ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் உள்ள நாடுகளுடன் தொடர்புடைய இராணுவ விநியோகச் சங்கிலிகளைக் கண்டறிந்தது.

இங்கு  குறிப்பிடப்பட்ட அனைத்து நாடுகளும் இனப்படுகொலை உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. சில சமயங்களில், இராணுவம் தொடர்பான பொருள்கள், இஸ்ரேல் மீது முறையாக ஆயுதத் தடை விதித்திருந்த அல்லது அந்நாட்டிற்கான ஆயுத விநியோகத்தை பகுதியளவு நிறுத்தி வைத்திருந்த நாடுகளிலிருந்து வந்திருந்தன. உண்மையில், ITA தரவுகளின்படி, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு ஆயுத இறக்குமதிகள் அதிகரித்தன. இதில் வெடிமருந்துகள் (munitions) வகையைச் சேர்ந்த பொருள்கள் மிகப்பெரிய பங்கு வருகிறது.

இஸ்ரேலுக்குள்   பெருமளவு இறக்குமதி செய்யப்பட்ட இராணுவம் சார்ந்த பொருள்கள் ஐந்து முக்கிய மூல நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ருமேனியா, தைவான், செக் குடியரசு ஆகியவற்றிலிருந்து வந்தவையாகும். இவை அனைத்தும், காஸாப் போர்க்காலத்தில் தங்கள் ஏற்றுமதியை அதிகரித்துள்ளன. இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ள பல நாடுகள் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி குறித்த புள்ளிவிவரங்களைப் பகிராத போதிலும், அக்டோபர் 2023 முதல் அக்டோபர் 2025 வரையிலான காலகட்டத்தில், 2,603 ​​அனுப்பீடுகள் (consignments) இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளதாக ITA தரவுகள் காட்டுகின்றன. அந்த இறக்குமதிகளில் வெடிமருந்துகள், வெடிபொருள்கள், ஆயுத பாகங்கள், மற்றும் கவச வாகன உதிரிபாகங்கள் என்  வகைப்படுத்தப்பட்டவையும் அடங்கும்.

ITA தரவுகளின்படி, இந்த இறக்குமதிகளின் மொத்த மதிப்பு  இஸ்ரேலிய நாணயத்தில் 3.22 பில்லியன் ஷெக்கல்களாகும் (அமெரிக்க டாலரில் [$]885.6 மில்லியன்); இதில் 91 சதவீத மதிப்புடைய இறக்குமதிகள், சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) தீர்ப்பிற்குப் பின்னரே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒப்பீட்டுரீதியாகப் பார்க்கையில், அக்டோபர் 2023-க்கு முந்தைய 20 மாதங்களில், இஸ்ரேலுக்கான இராணுவம் சார்ந்த இறக்குமதிகளின் மொத்த மதிப்பு 1.41 பில்லியன் ஷெக்கல்களாக ($388.1 மில்லியன்) மட்டுமே இருந்தது. இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக, வெளிநாட்டு ஆயுத விநியோகங்களைச் சார்ந்திருப்பது அதிகரித்துள்ளது என்பதை இந்தத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

காஸாவில் அக்டோபர் 10, 2025 அன்று சமீபத்திய போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பிறகும் கூட, ஆயுதங்களின் வரத்து நிற்கவில்லை. ITA தரவுகளின்படி, 2025-ஆம் ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில், இஸ்ரேல், கூடுதலாக 342.9 மில்லியன் ஷெக்கல் (89.4 மில்லியன் டாலர்) மதிப்புள்ள  இராணுவம் சார்ந்த இறக்குமதிகளைப் பெற்றுள்ளது,

இனப்படுகொலையைத் தடுக்கும் கடமை

சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) தீர்ப்பிற்குப் பிறகும் இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ஆயுதங்களை வழங்கிய அரசாங்கங்கள், இனப்படுகொலையில் உடந்தையாக இருந்திருக்கக்கூடும் என்று சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் சர்வதேசச் சட்டப் பேராசிரியர் ஸ்டீபன் ஹம்ப்ரீஸ் (Stephen Humphreys), அல் ஜசீராவிடம் பேசுகையில், அந்தத் தீர்ப்பிற்கு முன்பே, “இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சர்வதேசக் குற்றங்களில் உடந்தையாக இருக்கக்கூடும் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருந்தன” என்று தெரிவித்தார். மேற்கு இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் சட்டப் பேராசிரியர் கெர்ஹார்ட் கெம்ப் (Gerhard Kemp) , காஸா இப்போதும் ஒரு தொடர் இனப்படுகொலை நடவடிக்கைக்கு உள்பட்ட பகுதியாகவே நீடிப்பதாகக் கூறினார்.

“மிகச் சமீபத்திய ‘போர்நிறுத்தம்’ இந்த நிலையை மாற்றவில்லை,” என்று அவர் கூறினார்; தொடர்ந்து நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள், குடிமக்களை படுகொலை செய்தல், ஒரு மக்கள் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழித்துவிடக்கூடிய வகையில்  அமைந்துள்ள  வாழ்க்கைச் சூழல்களைத் திணித்தல் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

இனப்படுகொலை தடுப்பு உடன்படிக்கையின் (Genocide Convention) கீழ், இனப்படுகொலையைத் தண்டிப்பது மட்டுமல்லாமல், அதைத் தடுப்பதும் நாடுகளின் கடமையாகும். ஒரு தீவிரமான அபாயம் இருப்பதை அறிவதே இக்கடமையைச் செயல்படுத்துவதற்கான தூண்டுதலாக அமைகிறதே தவிர, நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அல்ல என்று கெம்ப் கூறினார். “சில நாடுகள் இனப்படுகொலையைத் தடுக்கும் கடமையைப் பற்றி மிகவும் குறுகிய புரிதலையே கொண்டுள்ளன; காஸாவில் இனப்படுகொலை நடைபெறுகிறது என்று நீதிமன்றம் உறுதி செய்யும் வரை அவை காத்திருக்கின்றன,” என்று கெம்ப் கூறினார்.

“ஆனால், அத்தகைய உறுதிப்படுத்தலை வழங்க சர்வதேச நீதிமன்றத்திற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடும். சிறந்த அணுகுமுறை என்னவென்றால், கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் உள்நாட்டுச் சட்டக் கடமைகளையும் சர்வதேசச் சட்டக் கடமைகளையும், மற்றும் சட்ட உபாயங்களையும் பார்ந்து  அவற்றின்படி செயல்படுவதே ஆகும்.” ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தினப் பகுதிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அமைத்த சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் (Independent International Commission of Inquiry) கண்டுபிடிப்புகளை அவர் சுட்டிக்காட்டினார்; செப்டம்பர் 2025-இல்  அந்த அறிக்கையை  வெளியிட்ட அந்த ஆணையம், இஸ்ரேல் “காஸாவில் உள்ள பாலஸ்தினியர்களுக்கு எதிராக இனப்படுகொலையை இழைத்துள்ளது” என்ற  முடிவுக்கு வந்திருந்தது.

“இனப்படுகொலைச் செயலாக அமையக்கூடிய நடத்தைகளைத் தடுப்பதை உறுதிசெய்ய நாடுகள் நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டுள்ளன. இதில், இஸ்ரேல் இனப்படுகொலைச் செயல்களை இழைக்கப் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்தக்கூடும் என்று கருதப்படும் ஆயுதங்களை வழங்குவதும் அடங்கும்,” என்ற அந்த ஆணையத்தின் முடிவை கெம்ப் மேற்கோள் காட்டினார்.

அந்த அறிக்கை ஐ.நா. உறுப்பு நாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதல்ல என்பதை அவர் ஒப்புக்கொண்டார். “ஆனால், தற்போதுள்ள சட்டக் கடமைகளைப் பொருத்தவரை இது அதிகாரபூர்வமானது. குறிப்பாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக, ஆணையத்தின் கண்டுபிடிப்புகளையும் பரிந்துரைகளையும் நாடுகள் நடைமுறைப்படுத்துவது விவேகமானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்று அவர் கூறினார்.

இனப்படுகொலை உடன்படிக்கைக்கு அப்பால், ஆயுதங்கள் கடுமையான மீறல்களைச் செய்யப் பயன்படுத்தப்படலாம் என்ற தெளிவான அபாயம் இருக்கும் இடங்களில், ஆயுதங்களின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் அங்கீகாரம் அளிப்பதை (ஐ.நா.வின்) ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் (Arms Trade Treaty)  6வது பிரிவு தடை செய்கிறது என்று வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதற்கிடையில், நாடுகள் தங்களின் சொந்த உள்நாட்டு சட்டக் கடமைகளையும் எதிர் கொள்ள வேண்டும். “சர்வதேசக் குற்றங்களைச் செய்வதில் சாத்தியமான அல்லது நம்பத்தகுந்த வகையில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் உரிய கவனம் செலுத்தக் கோரும் இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் சட்டங்களும் இதில் அடங்கும்” என்று கெம்ப் கூறினார்.

இஸ்ரேலிய இறக்குமதி தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்

This image grab taken from AFPTV video footage shows Palestinians checking the destruction in the aftermath of an Israeli strike on the Jabalia refugee camp in the Gaza Strip, on November 1, 2023, amid ongoing battles between Israel and the Palestinian Hamas movement. Thousands of civilians, both Palestinians and Israelis, have died since October 7, 2023, after Palestinian Hamas militants based in the Gaza Strip entered southern Israel in an unprecedented attack triggering a war declared by Israel on Hamas with retaliatory bombings on Gaza. (Photo by AFP)

எட்டு இலக்க சுங்கக் குறியீடுகளின்படி ஒழுங்கமைக்கப்பட்ட, பொதுமக்கள் அணுகக்கூடிய இறக்குமதிகளின் தரவுத்தளத்தை ஐ.டி.ஏ (ITA) பராமரிக்கிறது. இந்தக் குறியீடுகள் உலக சுங்க அமைப்பின் (World Customs Organization) HS முறையின்படி கட்டமைக்கப்பட்டுள்ளன. (ஒவ்வொரு பொருளுக்கும் பொதுவாக 6 இலக்க எண் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, முதல் இரண்டு இலக்கங்கள் பொருளின் பொதுவான வகையையும், அடுத்த இரண்டு இலக்கங்கள் குறிப்பிட்ட தயாரிப்பு குழுவையும், கடைசி இரண்டு இலக்கங்கள் பொருளின் விரிவான தன்மையையும் குறிக்கும். இந்த குறியீட்டின் மூலம் எந்த மொழியையும் சார்ந்த அதிகாரிகளும், ஆவணங்களைப் பார்த்தே அது என்ன பொருள், எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை எளிதாக அடையாளம் காண முடியும் – மொழிபெயர்ப்பாளர்).

முதல் ஆறு இலக்கங்கள் சர்வதேச அளவில் தரப்படுத்தப்பட்ட தயாரிப்பு வகைகளைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் நாடுகள் இலக்கங்களைச் சேர்ப்பதன் மூலம் மேலும் விரிவான தேசிய புள்ளிவிவரங்களை வழங்க அனுமதிக்கப்படுகின்றன. இஸ்ரேலைப் பொறுத்தவரை, அது பெரும்பாலும் உலகளாவிய ஆறு இலக்கங்களுடன், தேசிய விவரங்களுக்கான இரண்டு கூடுதல் இலக்கங்களையும் சேர்த்து எட்டு இலக்கக் குறியீடுகளைப் பயன்படுத்துகிறது.

அல் ஜசீரா, 2022 மற்றும் 2025-க்கு இடையில் இஸ்ரேலிய இறக்குமதிகள் தொடர்பான 6.5 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட சுங்கப் பதிவுகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வு, ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் தொடர்பான ஏற்றுமதிகளை உள்ளடக்கிய HS பிரிவான “93” என்ற எண்ணில் தொடங்கும் சுங்கக் குறியீடுகளைக் கொண்ட இறக்குமதிகள் மீதும், அத்துடன் டாங்கிகள் மற்றும் பிற கவசப் போர் வாகனங்கள் மற்றும் அவற்றின் பாகங்களை உள்ளடக்கிய 87100000 என்ற குறியீடு மீதும் கவனம் செலுத்தியது.

இஸ்ரேலின் சுங்கக் குறியீட்டுப் புத்தகத்தின்படி, இந்தக் குறியீடுகளில் பின்வருவன அடங்கும்: “குண்டுகள், எறிகுண்டுகள், டார்பிடோக்கள், கண்ணிவெடிகள், ஏவுகணைகள் மற்றும் அதுபோன்ற போர்க் கருவிகள் மற்றும் பாகங்கள்” போன்ற வெடிபொருட்கள். இது “தோட்டா உறைகள்”, சில வகையான “வெடிமருந்துகள் மற்றும் எறிகணைகள்” மற்றும் “குண்டுகள் மற்றும் தோட்டா உறைகள்” (93069090) உள்ளிட்ட பாகங்களையும் குறிக்கிறது; “தோட்டாக்கள்” (93069010) எனக் குறிக்கப்பட்ட பொருட்கள்; இராணுவ ஆயுதங்களின் “பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்”, இதில் “ரிவால்வர்கள் மற்றும் பிஸ்டல்களுக்கான” கூறுகள் (93051000); “ஷாட்கன்கள் மற்றும் ரைஃபிள்கள்” (93052000) ஆகியவை அடங்கும்.

இராணுவ ஆயுதங்களின் பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் (93059100); “பிற” வகையான பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் (93059900); “ராக்கெட் ஏவுவான்கள், தீச்சுடர் வீசிகள், கையெறி குண்டு ஏவும் சாதனங்கள், டார்பிடோ குழாய்கள் மற்றும் அதுபோன்ற ஏவும் சாதனங்கள்” (93012000); “டாங்கிகள் மற்றும் பிற கவசப் போர் வாகனங்கள் (இயந்திரத்தால் இயங்குபவை), ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றும் அவற்றின் பாகங்கள்” (87100000)

தரவுகள் எதைக் காட்டுகின்றன, எதைக் காட்டுவதில்லை?

போர்க்காலத்தின்போது இஸ்ரேல் இறக்குமதி செய்த ஆயுதங்கள் தொடர்பான மிக விரிவான சித்திரத்தை இந்தத் தரவுத்தொகுப்பு வழங்கினாலும், மொத்த ஆயுதப் பரிமாற்றங்கள் குறித்த ஒரு பகுதித் தோற்றத்தையே இது பிரதிபலிக்கிறது. சுங்க ஆவணங்கள், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் துல்லியமான தன்மை குறித்தோ, அப்பொருட்களை இறுதியாகப் பெற்றுக்கொண்டவர் குறித்தோ, அவற்றைப் பயன்படுத்தும் இறுதிப் பயனாளி குறித்தோ எதையும் குறிப்பாகத் தெரிவிப்பதில்லை. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான “மூல நாடு” (origin country) குறித்த தகவலை இத்தரவுகள் பதிவு செய்கின்றன.

ஆனால் இந்தத் தகவலை அந்தப் பொருட்கள் அந்த நாட்டிலிருந்து நேரடியாக இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்று பொருள்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அவை மூன்றாம் நாடுகள் வழியாக அனுப்பப்பட்டிருக்கலாம். பல சர்வதேச ஆயுத விநியோகச் சங்கிலிகளில், இராணுவம் தொடர்பான பாகங்கள் அவற்றின் இறுதி இலக்கை அடைவதற்கு முன்பு, பரந்த ஆயுத அமைப்புகளில் இணைக்கப்படுகின்றன அல்லது உற்பத்தியாளர்களுக்கு இடையில்  இடமாற்றம் செய்யப்படுகின்றன.

பல அரசாங்கங்கள் ஏற்றுமதிக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு, இராணுவம் தொடர்பான பொருட்களின் இறுதிப் பயனாளியை மதிப்பிடுகின்றன. ஆனால் சர்வதேச விநியோகச் சங்கிலிகள் வழியாக மாற்றப்பட்ட பிறகு ஆயுதங்களின் பாகங்கள் இறுதியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தீர்மானிக்க, ஏற்றுமதிக்குப் பிந்தைய சரிபார்ப்பை வெளிநாடுகளில் முறையாக நடத்துவதில்லை என்று ஆயுத நிபுணர்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்தக் குறியீடுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் இஸ்ரேலிய இறக்குமதி அமைப்பின் கீழ் இராணுவம் தொடர்பானவையாக வகைப்படுத்தப்படுகின்றன. சில சமயங்களில், இராணுவ உபகரணங்கள் பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்று ஆயுத நிபுணர்கள் கூறுகின்றனர். (இஸ்ரேலிலுள்ள) பென் குரியன் விமான நிலையம், ஹைஃபா மற்றும் அஷ்டோட் துறைமுகங்கள், ஜோர்டான் நதி கடக்கும் இடம் ஆகியவை உட்பட, ஒவ்வொரு சரக்கு அனுப்பீட்டின் நுழைவுப் புள்ளியையும் இந்தத் தரவு பதிவு செய்கிறது.

அல் ஜசீராவின் பகுப்பாய்வில், இஸ்ரேலுக்கு இலவசமாக வழங்கப்படும் ஆயுதங்கள், இராணுவ விமானங்கள் அல்லது ஜெட் விமானங்களின் பாகங்கள், மற்றும் உத்திசார் தகவல் தொடர்பு அல்லது ரேடார் அமைப்புகள் ஆகியவை சேர்க்கப்படவில்லை. அல் ஜசீராவால் கலந்தாலோசிக்கப்பட்ட ஆயுத நிபுணர்கள், இந்தப் பிரிவுகள் பெரும்பாலும் பரந்த சுங்கத் தலைப்புகளின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன என்றும், சில சமயங்களில், வணிக விமானப் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் விமான பாகங்கள் போன்ற இராணுவ ஏற்றுமதிகளில் பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்களும் அடங்கிவிடக்கூடும் என்றும் கூறினர். இந்தக் காரணத்தால், அத்தகைய சரக்குகள் இராணுவத் தன்மை கொண்டவையா என்பதை உறுதியாகக் கண்டறிவது சாத்தியமற்றதாகிறது. எனவே, பொருட்களின் இராணுவத் தன்மையை போதுமான உறுதியுடன் நிறுவ முடியாத சுங்கக் குறியீடுகளை அல் ஜசீரா தன் புலனாய்வுக்கு உட்படுத்தவில்லை..

நடைமுறையில் HS குறியீடு 93 என்பதன் பொருள் என்ன?

இஸ்ரேலிய இறக்குமதி தரவுத்தொகுப்பு துல்லியமான மாதிரிகள் அல்லது இறுதிப் பயனாளிகளைக் குறிப்பிடாததால், “93” இல் தொடங்கும் HS குறியீடுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சரக்குகள், பெயரிடப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையில் நகரும் அடையாளம் காணக்கூடிய ஆயுதக் கூறுகளுடன் பொருந்துகின்றனவா என்பதைச் சோதிக்க, அல் ஜசீரா சுயாதீன ஆவணங்களைக் கோரியது.

அல் ஜசீரா, 93069000 என்ற வகைப்பாட்டுக் குறியீட்டின் கீழ், 2024-ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான 91 இந்திய சுங்க ஏற்றுமதி ஆவணங்களைப் பெற்றுள்ளது. HS குறியீடு 9306 என்பது “குண்டுகள், கையெறி குண்டுகள், டார்பிடோக்கள், கண்ணிவெடிகள், ஏவுகணைகள் மற்றும் அதுபோன்ற போர் ஆயுதங்கள், அவற்றின் பாகங்கள்” ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சுங்கப் புத்தகத்தின்படி, இந்தியத் துணைப்பிரிவு 93069000 “குண்டுகள், கையெறி குண்டுகள்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்கள், ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், ஐஎம்ஐ சிஸ்டம்ஸ் லிமிடெட் மற்றும் எம்சிடி மெட்டீரியல்ஸ் உள்ளிட்ட இஸ்ரேலிய ஆயுத உற்பத்தியாளர்களுக்கு இந்திய நிறுவனங்கள் ஆயுதப் பாகங்களை ஏற்றுமதி செய்வதைக் காட்டுகின்றன.

பல சரக்குகள் வழியாக, இந்தியாவின் கல்யாணி ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ் மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான கல்யாணி ரஃபேல் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (KRAS), “ஹெவி ஃபிராக்” பாகங்கள் என விவரிக்கப்பட்ட மொத்தம் 554,120 அலகுகளை ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்துள்ளது. பதிவுகளை ஆய்வு செய்த ஆயுத நிபுணர்கள், வெடிக்கும்போது உலோகத் துண்டுகளைச் சிதறடிக்கும் வெடிபொருட்களில், சிதறல் பாகங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று கூறினர்.

KRAS நிறுவனத்தில் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ள இந்தியப் பங்குதாரரான கல்யாணி ஸ்ட்ராடஜிக் சிஸ்டம்ஸ், “155மிமீ எறிபொருள் உறை” என்று பெயரிடப்பட்ட 50 அலகுகளை IMI சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்தது. 155மிமீ எறிபொருள் உறை என்பது, வெடிபொருட்களை நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய பீரங்கிக் குண்டின் பிரதான எஃகு உறை என்று ஆயுத நிபுணர்கள் கூறினர்.

எகனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் (இந்தியா) என்ற நிறுவனம் , “பூஸ்டர் பெல்லட் (வெடிபொருட்கள், பாதுகாப்பு)” என விவரிக்கப்பட்ட 99,400 அலகுகளை இஸ்ரேலில் உள்ள ரெஷெஃப் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்தது. இராணுவ வெடிபொருட்களில் உள்ள பெரிய வெடிபொருட்களை வெடிக்கத் தூண்டுவதற்கு பூஸ்டர் பெல்லட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறினர்.

மற்ற ஏற்றுமதிகளில், “வெடிபொருள் உலோகப் பாகங்கள்” என விவரிக்கப்பட்ட 320 அலகுகள், அசோகா மேனுஃபேக்சரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் MCT மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த ஆவணங்கள் இந்திய ஏற்றுமதிகளின் முழு அளவையும் உள்ளடக்கவில்லை, மேலும் அவை காஸவில் இறுதிப் பயன்பாட்டையும் நிறுவவில்லை. ஆனால், HS குறியீடு “9306”-இன் கீழ் இஸ்ரேல் பெற்ற இறக்குமதிகளின் வகையைப் பற்றிய ஒரு விரிவான,  துல்லியமான், நுணுக்கமான பார்வையை அவை வழங்குகின்றன.

இவை குறித்த கருத்து கேட்பதற்காக அல் ஜசீரா இந்திய அரசைத் தொடர்பு கொண்டது, ஆனால் இந்தச் செய்தி வெளியாகும் வரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

‘ஆயுதங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலி’

போரின் போது, ​​இஸ்ரேலுக்கு இராணுவம் தொடர்பான இறக்குமதிகளை வழங்கிய மிகப்பெரிய நாடாக அமெரிக்கா இருந்தது. இந்தப் புலனாய்வில் கண்டறியப்பட்ட, மொத்த அறிவிக்கப்பட்ட மதிப்பில் 42 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை அது கொண்டிருந்தது என ITA தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியா சுமார் 26 சதவீதப் பங்களிப்புடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. பதிவுசெய்யப்பட்ட மொத்த ஆயுத இறக்குமதி மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பங்களிப்பை இந்த இரண்டு நாடுகளும் கொண்டிருந்தன.

அடுத்த மூன்று பெரிய விநியோகஸ்தர்களாக ருமேனியா (8 சதவீதம்), தைவான் (4 சதவீதம்) மற்றும் செக் குடியரசு (3 சதவீதம்) ஆகியவை இருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் கூட்டாக, இஸ்ரேலின் ஆயுதங்கள் தொடர்பான இறக்குமதிகளின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட 19 சதவீதத்தைக் கொண்டிருந்தன.

மேலும், தைவான், சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கிட்டத்தட்ட 8 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டது. காலப்போக்கில் விநியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களையும் இந்தத் தரவுகள் காட்டுகின்றன.

ஜனவரி 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட மூன்று மிகப்பெரிய சரக்குப் பொதிகளில் இரண்டு, HS குறியீட்டின் கீழ் மொத்தம் 80.9 மில்லியன் ஷெக்கல்கள் ($22.3 மில்லியன்) மதிப்புடையவை.

வெடிபொருட்கள் அஜர்பைஜானிலிருந்து வந்தன. காஸா மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை போரின் போது, ​​இந்த இறக்குமதி மதிப்பு மொத்தம் 8.2 மில்லியன் ஷெக்கல்களாக ($2.3 மில்லியன்) குறைந்தது.

அதே HS குறியீட்டின் கீழ், நெதர்லாந்திலிருந்து பெறப்பட்ட 40.4 மில்லியன் ஷெக்கல் ($11.1 மில்லியன்) மதிப்புள்ள ஆயுதங்களும் வெடிபொருட்களும் ஆகஸ்ட் 2022-இல் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டன; இதற்கு மாறாக, போர் காலம் முழுவதும் நெதர்லாந்திலிருந்து இஸ்ரேலுக்குச் செய்யப்பட்ட மொத்த இராணுவ ஏற்றுமதியின் மதிப்பு 105,000 ஷெக்கல்கள் ($29,000) மட்டுமே ஆகும். “இஸ்ரேலுக்கு இராணுவப் பொருட்களை ஏற்றுமதி செய்வது, முற்றிலும் தற்காப்பு நோக்கங்களுக்காக மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது” என்று நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அல் ஜசீராவிடம் தெரிவித்தார்.

ஆனால் அல் ஜசீராவின் பகுப்பாய்வு ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறது: ITA தரவுகள் 2022-லிருந்து மட்டுமே கிடைப்பதால், அதற்கு முந்தைய 21 மாத காலத்துடன் ஒப்பிடுகையில், போரின் போது இஸ்ரேலுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இராணுவம் சார்ந்த பொருட்களின் அளவை வேறு பல நாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்பது தெரிய வருகின்றது.

இராணுவம் சார்ந்த பொருட்களை விநியோகிக்கும் முதல் ஐந்து நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ருமேனியா, தைவான் மற்றும் செக் குடியரசு ஆகியவையும் இதில் அடங்கும்.

ஜனவரி 2024-இல் சர்வதேச நீதிமன்றம் (ICJ) வழங்கிய தீர்ப்பை பகிரங்கமாக ஆதரித்த நாடுகளிலிருந்து வந்த சிறிய அளவிலான இராணுவப் பொருட்களும் இதில் அடங்கும்.

உதாரணமாக, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால நடவடிக்கைகள் திறம்படச் செயல்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகச் சீனா கூறியிருந்தது. இருப்பினும், போரின் போது சீனாவிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த இராணுவம் சார்ந்த சரக்குகளின் மொத்த மதிப்பு 71.1 மில்லியன் ஷெக்கல்களாகும் ($19.6 மில்லியன்); இதில் சுமார் 83 சதவீத மதிப்புள்ள சரக்குகள் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு அல் ஜசீரா சீன அரசாங்கத்தைத் தொடர்புகொண்டது, ஆனால் இச்செய்தி வெளியிடப்படும் நேரம் வரை அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் பொதுவாக “கட்டுப்படுத்தும் தன்மை” கொண்டவை என்று சிங்கப்பூர் குறிப்பிட்டது; மேலும், “உடனடி மனிதாபிமானப் போர் நிறுத்தம் அல்லது அமைதி ஒப்பந்தம்” கோரும் ஐ.நா தீர்மானங்களைத் தான் ஆதரித்ததாகவும் அது தெரிவித்தது. ஆனால் இஸ்ரேலியச் சுங்கத் தரவுகளின்படி, போரின் போது சிங்கப்பூரிலிருந்து 20.2 மில்லியன் ஷெக்கல் ($5.6 மில்லியன்) மதிப்புள்ள இராணுவம் சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன; இதில் 88 சதவீத இறக்குமதிகள் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளன.

சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் சர்வதேச நீதிமன்றம் வகிக்கும் பங்கிற்குத் தான் அளிக்கும் ஆதரவையும், “சர்வதேசச் சட்டத்தின் மீதான முழுமையான மரியாதையையும்” ஸ்விட்சர்லாந்து மீண்டும் வலியுறுத்தியது. ஆனால், போர்க்காலத்தில் இஸ்ரேல் இறக்குமதி செய்த 9 மில்லியன் ஷெக்கல் (2.5 மில்லியன் டாலர்) மதிப்பிலான இராணுவப் பொருட்கள், மத்திய ஐரோப்பிய நாடொன்றிலிருந்தே வந்தவை; இதில் 98 சதவீதப் பொருட்கள், நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளன. “குறிப்பிட்ட சில இராணுவப் பொருட்களுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கம் ஒரு அறிக்கையின் மூலம் அல் ஜசீராவிடம் உறுதிப்படுத்தியது.

ITA தரவுகளின்படி, உலக அரங்கில் பாலஸ்தினத்திற்கு ஆதரவாக மிகவும் வலுவாகக் குரல் கொடுத்த நாடுகளிலிருந்தும்கூட, போர்க்காலத்தில் இராணுவம் சார்ந்த பொருட்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ளன—அவற்றின் அளவுகள் மிகக் குறைவாக இருந்தபோதிலும்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் முடிவுக்கு வரும் என்று தான் நம்புவதாக துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) தெரிவித்தார். அந்நாட்டிலிருந்து வந்த இராணுவம் சார்ந்த பொருட்களின் மொத்த மதிப்பு 7.5 மில்லியன் ஷெக்கல் (2.1 மில்லியன் டாலர்) ஆகும்; இதில் 79 சதவீதப் பொருட்கள், சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) உத்தரவிற்குப் பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளன.

மே 2, 2024 முதல், “துருக்கியிலிருந்து இஸ்ரேலுக்கான அனைத்துப் பொருள் வகைகளிலும் ஏற்றுமதி, இறக்குமதி, சுதந்திர வர்த்தக மண்டல வர்த்தகம் மற்றும் இடைவழி வர்த்தகம் ஆகியவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன” என்றும், அந்நாளுக்குப் பிறகு “இஸ்ரேலுடனான வர்த்தகம் முற்றிலும் பூஜ்ஜிய நிலையில் உள்ளது” என்றும் துருக்கி அரசாங்கம் ஓர் அறிக்கையின் வாயிலாக அல் ஜசீராவிடம் தெரிவித்தது. மேலும், அக்டோபர் 7, 2023-க்குப் பிறகு, “இஸ்ரேலுக்கு எந்தவிதமான ஆயுத ஏற்றுமதி அனுமதிகளும் துருக்கிய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை” என்றும் அது குறிப்பிட்டது.

ஆயுத வர்த்தகத்தை நிறுத்திவிட்டதாகத் துருக்கி  அறிவித்ததைத் தொடர்ந்து, மே 2024-க்குப் பிறகு இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகம் வழியாகப் பொருட்கள் வருவது நின்றுவிட்டதை அல் ஜசீரா ஆய்வு செய்த இஸ்ரேலியச் சுங்கத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும், ITA தரவுகளின்படி, அந்நாளுக்குப் பின்னரும் துருக்கியிலிருந்து வந்ததாகப் பதிவு செய்யப்பட்ட இராணுவம் சார்ந்த பொருட்கள், பென் குரியன் விமான நிலையம் மற்றும் ஹைஃபா துறைமுகம் வழியாக இஸ்ரேலுக்குள் தொடர்ந்து நுழைந்துள்ளன.

இதேபோல், சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) நடவடிக்கைகள் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தக்கூடியவை என்று பிரேசில் வலியுறுத்தியதுடன், அவற்றை முழுமையாகவும் உடனடியாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால், போரின் போது அந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இராணுவம் தொடர்பான பொருட்களின் மொத்த மதிப்பு 8.7 மில்லியன் ஷெக்கல்கள் ($2.4 மில்லியன்) ஆகும். இதில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஜனவரி 2024-க்குப் பிறகே அனுப்பப்பட்டது.

பிரேசிலின் வெளியுறவு அமைச்சகம், பிப்ரவரி 9, 2023 முதல் இஸ்ரேலுக்கான பாதுகாப்பு தொடர்பான புதிய ஏற்றுமதிக் கோரிக்கைகள் எதற்கும் தங்கள் நாடு ஒப்புதல் அளிக்கவில்லை என்று அல் ஜசீராவிடம் தெரிவித்தது. இருப்பினும், சில துப்பாக்கி பாகங்கள், துணைக்கருவிகள், சிறிய ரக தோட்டாக்கள், பாதுகாப்பு தொடர்பான உற்பத்தி உள்ளீடுகள், இராணுவப் பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்ட சில வகைகளுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் முன் அனுமதி தேவையில்லை என்றும் அது கூறியது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வாளர் பேட்ரிக் வில்கன், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளின் அளவு அத்தகைய சர்வதேச ஆதரவை இன்றியமையாததாக ஆக்கியது என்றார். “காஸா பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய பெரும் குண்டுவீச்சின் தீவிரத்தை, இஸ்ரேலால் மட்டும் தனியாகத் தக்கவைத்திருக்க முடியாது,” என்று அவர் கூறினார். “இஸ்ரேல், ஆயுதங்கள், வெடிமருந்துகள், துணைச் சேவைகள் (support  serices) ஆகியவற்றுக்கு உலகளாவிய விநியோகச் சங்கிலியைச் சார்ந்துள்ளது. இது முதன்மையாக அமெரிக்காவால் வழங்கப்பட்டாலும், பிற நாடுகள் பல அதற்குத் துணை புரிந்தன.”

போர் தொடர்ந்ததால், இஸ்ரேலுக்கான ஆயுதங்கள் தொடர்பான இறக்குமதிகள் அதிகரித்தன. தரவுகள் அதை உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது. இனப்படுகொலை நிறைந்த அந்த இரண்டு ஆண்டுப் போர் முழுவதிலும், முதல் நான்கு மாதங்களான அக்டோபர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில்தான் மிகக் குறைந்த அளவிலான இறக்குமதிகள் காணப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டும், மருத்துவமனைகள் தாக்கப்பட்டும் போர் நீடித்தபோது, இறக்குமதியின் அளவு மாற்றம் பெற்றது.

மார்ச் 2024-ல், 121.7 மில்லியன் ஷெக்கல்கள் ($33.5 மில்லியன்) மதிப்பிலான இராணுவ இறக்குமதிகள், டிசம்பர் 2023-ல் இருந்த அளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக இருந்தன. ITA தரவுகளின்படி, இந்தக் காலகட்டத்தில் தென் கொரியாவின் மிகப்பெரிய சரக்கு அந்த மாதத்தில் இஸ்ரேலுக்குள் நுழைந்தது; இதில் 14.0 மில்லியன் ஷெக்கல்கள் ($3.8 மில்லியன்) மதிப்பிலான டாங்கிகளும் கவச வாகன பாகங்களும் இருந்தன.

மே 2024-ல், இஸ்ரேலியப் படைகள் தெற்கு காஸா நகரமான ரஃபாவுக்குள் முன்னேறியபோது, பாலஸ்தினிய மக்களுக்கு “மிகப்பெரிய ஆபத்து” இருப்பதாகக் காரணம் காட்டி, அங்கு தனது தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் (ICJ) இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. ஆனால் இஸ்ரேலின் ஆயுதக் கிடங்கு தொடர்ந்து நிரம்பி வந்தது. சரக்குகள் மீண்டும் அதிகரித்து, அக்டோபர் 2023-க்குப் பிறகு ஒரு புதிய சாதனையாக, சுமார் 141.7 மில்லியன் ஷெக்கல்கள் ($39 மில்லியன்) மதிப்பை எட்டின.

போரின் போது பல்கேரியாவிலிருந்து கப்பலில் அனுப்பப்பட்ட மிகப்பெரிய சரக்கு, 20.1 மில்லியன் ஷெக்கல்கள் (5.5 மில்லியன் டாலர்) மதிப்புள்ள வெடிபொருட்களாகும். அவை  அந்த மாதத்தில் வந்து சேர்ந்தன.  இஸ்ரேலுக்கான  இராணுவம் தொடர்பாக செக் குடியரசு செய்த ஒட்டுமொத்தமான ஏற்றுமதிகளில் மிகப்பெரிய அளவு அந்த மாதத்தில்தான் இருந்தது., அதன் மதிப்பு 10.5 மில்லியன் ஷெக்கல்கள் (2.9 மில்லியன் டாலர்) ஆகும்.

ஆயுத ஏற்றுமதியின் இடைநிறுத்தங்கள்,  பொருளாதாரத் தடைகள்

போர் தொடர்ந்து நடந்து வந்த  நிலையில், உலகின் மிகப்பெரிய நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்கள், சண்டையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும், இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்துமாறு தங்கள் அரசாங்கங்களை வலியுறுத்தியும் வீதிகளில் இறங்கினர். பல நாடுகள் ஆயுதத் தடைகளை அறிவித்தன – அதாவது, ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு ஆயுதங்களையோ இராணுவ உபகரணங்களையோ விற்பனை செய்வதற்கோ அல்லது மாற்றுவதற்கோ அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள். பிற நாடுகள், ஆயுத விற்பனையில் மிகவும் வரையறுக்கப்பட்ட இடைநிறுத்தங்களைத் தேர்ந்தெடுத்தன; இவை பொதுவாக சில உரிமங்கள் அல்லது உபகரண வகைகளுக்குப் பயன்படுத்தப்படும் தற்காலிக அல்லது பகுதி நிறுத்தங்கள் ஆகும்.

சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியரும், உலகளாவிய ஆயுத வர்த்தக நிபுணருமான அன்னா ஸ்டாவ்ரியானாகிஸ், (Anna Stavrianakis )அரசாங்கங்கள் தங்கள் ஏற்றுமதிக் கொள்கைகளை மறுமதிப்பீடு செய்யத் தூண்டுவதில் பொதுமக்களின் அழுத்தம் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தது என்று கூறினார். “பல சந்தர்ப்பங்களில், பொதுமக்களின் எதிர்ப்பு, தொழிலாளர் ஒருங்கிணைப்பு,  பரந்த  சமூக மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் மிகக்கவனமாகத் தெரிவு செய்யப்பட்ட வழக்குகளைப் போடுதல் (strategic litigations) ஆகியவை ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளை தங்கள் பரிமாற்றங்களை மறுபரிசீலனை செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ கட்டாயப்படுத்தியுள்ளன,” என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

பாலஸ்தினத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைத் தளமாகக் கொண்ட அல்-ஹக் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், குளோபல் லீகல் ஆக்ஷன் நெட்வொர்க் (GLAN) என்ற இலாப நோக்கற்ற அமைப்பும், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் பிறரின் ஆதரவுடன் தொடுத்த வழக்கு, பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் பிரிட்டனின் ஆயுத ஏற்றுமதியைக் கேள்விக்குட்படுத்தியது. ஸ்பெயினில், இஸ்ரேலுக்கு இராணுவ உபகரணங்களை ஏற்றிச் செல்வதாகக் கூறப்படும் கப்பல்களைக் கையாள துறைமுகத் தொழிலாளர்கள் மறுத்ததால், அதிகாரிகள் சரக்கு அனுப்புதலைத் தடுக்கவோ அதைப் பற்றி விசாரிக்கவோ செய்தனர்.

கனடாவில் நடந்த ஆர்ப்பாட்டங்களும் சட்டமியற்றுபவர்களும் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து, ஆயுதப் பரிமாற்றங்களை நிறுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு, அரசாங்கம் புதிய அனுமதிகளை நிறுத்தி வைத்தது. பிரான்சில், பெரிய அளவிலான போராட்டங்கள் ஆயுத விற்பனை மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தின.

நாடுகளுக்குள் நடக்கும் இந்த விவாதங்கள், சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் இஸ்ரேலுடன் கொண்டுள்ள நீண்டகாலக் கடப்பாடுகளுக்கும், சர்வதேச சட்டக் கடமைகளுக்கு  அந்த அரசாங்கங்கள் இணங்கச் செல்வதை உறுதி செய்வதற்கான உள்நாட்டு கோரிக்கைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன என்று ஸ்டாவ்ரியானாகிஸ் மேலும் கூறினார்.

ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் குறித்த நிபுணரான மார்ட்டின் ட்ரூ, ஆயுத ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள், ஆயுத விற்பனையைத் தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளுக்கு மாற்றாக அமையாது என்று வாதிட்டார். “ஒரு அரசாங்கத்தால் ஏற்றுமதி உரிமங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்” என்று அவர் கூறினார். “ஆனால் அது அரசாங்கத்திடமுள்ள ஒரு கொள்கையே அன்றி சட்டமல்ல. எனவே அவர்கள் விரும்பினால் ஏற்றுமதிக்கு அங்கீகாரம் அளிக்கலாம் என்பதே இதன் பொருள்.

“நடைமுறையில், பெரும்பாலான பாதுகாப்பு ஒப்பந்தங்களில், விநியோகம் “ஏற்றுமதி உரிம ஒப்புதலுக்கு உட்பட்டது” என்று கூறும் ஒரு பிரிவு உள்ளது. ஒரு உரிமம் ரத்து செய்யப்பட்டால், சரக்கு அனுப்புதல் நிறுத்தப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று அவர் கூறினார். ஆனால், ஒரு அரசாங்கம் புதிய உரிமங்களை வழங்குவதை மட்டும் நிறுத்தினாலும்கூட, ஏற்கெனவே உள்ள உரிமங்கள் செல்லுபடியாகலாம், இதனால் முன்னர் அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதிகள் தொடர அனுமதிக்கப்படலாம். உரிமம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதும் முக்கியமானது என்று ட்ரூ கூறினார்.

உதாரணமாக, இங்கிலாந்தில், ஒரு தனி ஏற்றுமதி உரிமம் (Standanrd Individual export Licence -SIEL) ஒரு குறிப்பிட்ட பொருளின் ஒரு குறிப்பிட்ட ஏற்றுமதியை உள்ளடக்கியது. அந்த உரிமம் இடைநிறுத்தப்பட்டால், ஏற்றுமதி நின்றுவிடும். இருப்பினும், இதற்கும் மேல்முறையீடு செய்யலாம். ஆனால், இங்கிலாந்தின் எவரொருவருக்கோ அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கோ சட்டப்படி தரப்படும் ஏற்றுமதி உரிமங்கள் (OIELs) அல்லது சட்டப்படி தரப்படும் பொது ஏற்றுமதி உரிமங்கள் (OGELs) போன்ற பிற உரிமங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பல ஏற்றுமதிகளை செய்வதற்கு வழிவகுக்கின்றன. கொள்கை எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து, “இடைநிறுத்தங்கள்” பற்றிய அரசியல் அறிவிப்புகளுக்குப் பிறகும் கூட இந்த விரிவான உரிமங்கள் நடைமுறையில் இருக்க முடியும்.

மேலும் பரந்த அளவிலான தொழில்துறை விளைவுகளும் உள்ளன. இராணுவப் பொருளுற்பத்தி நிறுவனங்களும்  அவற்றுடன் கூட்டு வைத்துள்ள நிறுவனங்களும் பல ஆண்டுகளாகச் செயல்படும் விநியோகச் சங்கிலிகளைச் சார்ந்துள்ளன; அவை பெரும்பாலும் பல ஆண்டுகளுக்கான கொள்முதல் ஒப்பந்தங்களுடனும் நீண்ட உற்பத்தி காலக்கெடுவுடனும் இணைக்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே கணிக்க முடியாத வகையில் ஒரு நாடு ஏற்றுமதி உரிமங்களை இடைநிறுத்தினால், அது  தன் நற்பெயரைக் கெடுத்துக் கொள்ளக்கூடிய மற்றும் வணிகரீதியான அபாயங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

“முக்கிய இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் நம்பிக்கையைச் சார்ந்துள்ளன,” என்றும். “நீங்கள் உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டீர்கள் என்று வாங்குபவர்கள் கருதினால், அவர்கள் வேறு இடத்திற்குச் செல்லக்கூடும்” என்றும் அவர் கூறினார்.” ஜெட் விமான உற்பத்தித்  திட்டங்கள் உட்பட பெரிய ஆயுத வகைகளின் உற்பத்தி, செலவுகளைப் பகிர்ந்துகொள்ளவும் உற்பத்தியைத் தக்கவைக்கவும் ஏற்றுமதி ஆணைகளைச் சார்ந்திருப்பதால், அவற்றின் உற்பத்திக் காலம் பொதுவாக பல ஆண்டுகள், சில சமயங்களில் பல பத்தாண்டுகள் வரை நீடிக்கும் என்றும் அவர்  கூறினார். எனவே, தற்காலிகத் தடைகள் அல்லது முடக்கங்கள் மூலம் உரிமங்களுக்கு இடையூறு விளைவிப்பது, ஒரு தனிப்பட்ட சரக்கு அனுப்பீட்டை மட்டுமல்ல, முழு உற்பத்தித் தொடர்களின் நிலைத்தன்மையையும் பாதிக்கக்கூடும்.

இதன் விளைவாக, அரசாங்கங்கள் பெரும்பாலும் அரசியல் அழுத்தம், சட்டரீதியான இடர்ப்பாடு ஆகியவற்றை தொழில்துறை நலன்களுடன் சமநிலைப்படுத்த முயல்கின்றன. இது, பொது அறிக்கைகளில் கட்டுப்பாடானதாகத் தோன்றும், ஆனால் நடைமுறையில் குறுகியதாக இருக்கும் கொள்கைகளை உருவாக்கக்கூடும்…

பசி, உதவி மையங்கள், துப்பாக்கிக் குண்டுகள்

ஜூலை 2025-க்குள், காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் பசி மற்றொரு ஆயுதமாக மாறியிருந்தது.சில மாதங்களுக்கு முன்பு உதவி தடுக்கப்பட்டதால், அந்தப் பகுதி உடனடிப் பஞ்ச அபாயத்தில் இருப்பதாக  ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் (United Nations Food and Agriculture Organization) முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ‘ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு’ என்ற அளவுகோல் (The Integrated Food Security Phase Classification -IPC) எச்சரித்திருந்தது. சந்தைகளில் எஞ்சியிருந்த சொற்ப பொருட்களும் காணாமல் போயின.காஸா முழுவதும், பசி என்பது மனிதாபிமான அமைப்புகளால் வெளியிடப்பட்ட கற்பனையான எச்சரிக்கையாக மட்டும் இருக்கவில்லை. அது  (காஸா மக்களின்) மெலிந்த முகங்களிலும், நடுங்கும் கைகால்களிலும், சவக்கிடங்குகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறிய உடல்களின் அசைவற்ற நிலையிலும் காணப்பட்டது.

இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் ஒரு புதிய உதவித் திட்டம் உருவாக்கப்பட்ட்து. அது  காஸாவில் உள்ள நூற்றுக்கணக்கான உள்ளூர் ஐ.நா. விநியோக மையங்களுக்குப் பதிலாக, பலத்த பாதுகாப்புடன் கூடிய ஒரு சில “மெகா-தளங்களை” அமைத்தது. அப்போது, மக்கள் தாங்கள் கண்டுகொண்டிருந்ததை “பசி விளையாட்டு” என்று அழைக்கத் தொடங்கினர்…

ஒவ்வொரு நாளும், உயர்த்தப்பட்ட மணல் திட்டுகளில் படை வீரர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வார்கள் என்றும் அருகில் பீரங்கிகளும், மேலே ட்ரோன்களும் இருக்கும் என்றும், “லாரி வந்தவுடன், பசியுடன் இருந்த மக்கள் ஒரு பந்தயத்தில் ஓடுவது போல் முன்னோக்கி விரைவார்கள்,” என்று அவர் கூறினார். “ஒவ்வொரு முறையும், மக்கள் விரைந்தபோது, ஆக்கிரமிப்புப் படைகள் கடுமையாகத் துப்பாக்கிச் சூடு நடத்தின.”…

வெடிபொருட்கள்: காஸாவின் அழிவு

காஸா மீதான இனப்படுகொலைப் போரின் இறுதி மாதங்களில், இடைவிடாத குண்டுவீச்சுத் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருந்தபோது, ​​இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் மூன்று வார்த்தைகளைப் பதிவிட்டார்: “காஸா எரிந்துகொண்டிருக்கிறது.” அதற்குச் சில நாட்களுக்கு முன்பு, “காஸாவில் உள்ள நரகத்தின் வாயில்களில் இருந்த தாழ்ப்பாள் இப்போது அகற்றப்பட்டுவிட்டது” என்று அவர் அறிவித்திருந்தார்; இது, காஸாவில் எஞ்சியிருந்த கடைசி உயரமான கட்டடங்களில் ஒன்றான ‘முஷ்டாஹா கோபுரத்தை’ இஸ்ரேல் தகர்த்தழித்ததைக் குறிப்பதாகும்…

இனப்படுகொலை தொடர்பான ஆய்வறிஞர்களைப் பொறுத்தவரை, ஒரு இனத்தின் அழிவு என்பது உடல்களால் மட்டுமல்ல, வாழ்வை சாத்தியமாக்கும் நிலைமைகளின் அழிவாலும் அளவிடப்படுகிறது.

இந்த அளவிலான அழிவு, வெடிபொருட்களின் பரவலான பயன்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். காஸா அரசாங்க ஊடக அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, அக்டோபர் 5, 2025-க்குள் அந்தப் பகுதியில் 200,000 டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்கள் வீசப்பட்டுள்ளன.

2025 ஏப்ரல், ஜூலை மாதங்களில், உணவு உதவி கோரிய காஸா பொதுமக்களை இஸ்ரேல் கொன்றதாக மனிதாபிமான அமைப்புகள் குற்றம் சாட்டிய நேரத்தில், இந்தியாவிலிருந்து வந்த வெடிபொருட்கள் தொடர்பான வெடிமருந்துகளின் இரண்டு மிகப்பெரிய சரக்குகள் போரின் போது பதிவு செய்யப்பட்டன

உலகத் தலைவர்களிடமிருந்து கண்டனங்களும் கவலைத் தெரிவிப்புகளும் வந்தபோதிலும், போர்நிறுத்தக் காலத்திற்கும் 2025 டிசம்பர் 31-க்கும் இடைப்பட்ட காலத்தில், 28 வெவ்வேறு நாடுகளிலிருந்து புறப்பட்ட குறைந்தது 220 சரக்குக் கப்பல்கள் இஸ்ரேலின் துறைமுகங்களை வந்தடைந்துள்ளன.

லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் (Queen Mary University of London0 சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறைப் பேராசிரியரான இஸ்ரேலியரான நெவ் கார்டன், அல் ஜசீராவிடம் பேசுகையில், “நாட்டுக்கு நாடு, தான் எதையும் காணாததுபோல் பாவனை செய்துகொண்டும், தனது சட்டரீதியான கடமைகளுக்குக் கட்டுப்பட மறுத்துக்கொண்டும், சர்வதேச சட்ட ஒழுங்கின் சிதைவிற்குத் துணைபோயுள்ளன,” என்று கூறினார்.  அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளாத கண்ணோட்டத்தையே இந்த நாடுகள் கொண்டுள்ளன என்றும், இந்தச் சட்ட ஒழுங்கை உருவாக்க உதவியதும், அதைத் தொடர்ந்து மேற்கோள் காட்டி வருபவையுமான அதே நாடுகள்தான், இப்போது அதைச் சிதைப்பதில் ஒரு முக்கியப் பங்கை வகித்து வருகின்றன” என்றும் அவர் கூறினார்.

கட்டுரையாளர் : எஸ்.வி.ராஜதுரை

மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

Photo of author
எஸ்.வி.ராஜதுரை
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share