அதிமுகவின் (AIADMK) எஸ்பி வேலுமணி அணியில் உள்ள இசக்கி சுப்பையா உட்பட 5 எம்.எல்.ஏ.க்கள் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் (TVK) இணைய உள்ளனர்.
சட்டசபையில் முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவு.
ஆனால் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது அணியைச் சேர்ந்த விஜயபாஸ்கரை கொறடாவாக அங்கீகரிக்க கோரி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் மே 13-ந் தேதி சட்டசபையில் முதல்வர் விஜய் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது விஜய் அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியின் 22 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். ஆனால் எஸ்பி வேலுமணி அணியின் 25 எம்.எல்.ஏ.க்கள், கட்சி கொறடா உத்தரவை மீறி முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதனையடுத்து அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் எஸ்பி வேலுமணி அணியின் அதிமுக எம்.எல்.ஏ.க்களில் சிலர் முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.க்களை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது என முதல்வரின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி திட்டவட்டமாக வலியுறுத்தி இருந்ததை நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.
மேலும் அதிமுக எம்.எல்.ஏ.க்களை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் விஜய் அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம், விசிக ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் முதல்வர் விஜய் அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இன்னொரு பக்கம், தகுதி நீக்க சிக்கலில் மாட்டிய எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பு நடந்த 15 நாட்களில் கட்சித் தலைமையால் மன்னிக்கப்பட்டால் அவர்களது பதவி தப்பும். இதற்கான கெடு நாளை மே 28-ந் தேதியாகும்.
இந்த பின்னணியில் எஸ்பி வேலுமணி அணியில் இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களான திலீபன் ஜெய் சங்கர், நடராஜன், பண்ருட்டி மோகன், ஆற்காடு சுகுமார், அந்தியூர் ஹரிபாஸ்கர் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். பின்னர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தாங்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் செயல்படுவதாக கடிதம் கொடுத்தனர்.
அதே நேரத்தில் எஸ்பி வேலுமணி அணியின் மரகதம் குமாரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அத்துடன் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைந்தனர்.
இந்த விவகாரம் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. முதல்வர் விஜய் அரசு, பகிரங்கமாக குதிரை பேரத்தில் குதிரை வேகத்தில் ஈடுபடுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். முதல்வர் விஜய் அரசை ஆதரிக்கும் விசிகவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இதனை நியாயப்படுத்தி விளக்கம் கொடுத்தார்.
இசக்கி சுப்பையா உட்பட 5 எம்.எல்.ஏ.க்கள் இன்று ராஜினாமா (Isakki Subbiah)
இந்நிலையில் இன்றும் எஸ்பி வேலுமணி அணியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இசக்கி சுப்பையா உட்பட 5 பேர், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர்.
அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா நேற்று இரவே தமது ஆதரவாளர்களை அழைத்து இந்த தகவலை தெரிவித்துவிட்டார்.
எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்த உடன் இசக்கி சுப்பையா உட்பட 5 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் தவெகவில் இணைய இருக்கின்றனர்.
