மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஏப்ரல் 18) காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படியை 2 சதவிகிதம் வரை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவின் மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அரசுக்கு ஆண்டுக்கு 6,791 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவிகிதத்தில் இருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது மேலும் 2 சதவீதம் உயர்த்தப்பட்டு அது 60 ஆக உயர்ந்திருக்கிறது.
உலகலாவிய சூழல் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு அவற்றை ஈடுகட்டுவதற்காக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
