Bharat Bandh: 13 தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்- தமிழகத்தில் மறியல்- பேருந்து சேவை பாதிப்பு!

Published On:

| By Mathi

Bharat Bandh July 9

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக 13 தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் (Bharat Bandh) இன்று ஜூலை 9-ந் தேதி காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. Bandh Strike

17 அம்ச கோரிக்கைகள்

ADVERTISEMENT

மத்திய அரசின் 4 தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது; பொதுத் துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; மத்திய – மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் கூட்டாக இன்று ஜூலை 9-ந் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் ஆதரவு

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தமிழகத்தில் ஆளும் திமுகவின் தொழிற்சங்கமான தொமுச மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்களான இடதுசாரிகளின் சிஐடியு, ஏஐடியுசி, காங்கிரஸின் ஐஎன்டியுசி மற்றும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள், போக்குவரத்து, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

தமிழ்நாட்டில் மறியல் போராட்டம்

ADVERTISEMENT

அத்துடன் நாடு தழுவிய இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களையும், ரயில்களையும் மறித்து போராட்டங்களும் நடைபெற உள்ளன.

நாடு தழுவிய இந்தப் போராட்டத்தால் மத்திய அரசின் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் குறைவான ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுவர்.

தமிழக அரசு எச்சரிக்கை

முன்னதாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் ஜூலை 8-ந் தேதி அரசு ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்பது அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும்; தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் நடத்தை விதிகளை மீறும் செயல்களில் ஈடுபடக் கூடாது; அப்படி மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை எனில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். தினசரி மற்றும் பகுதி நேர பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என எச்சரித்துள்ளார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிமுக தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை.

பேருந்து சேவைகள் பாதிப்பு

இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பல பகுதிகளில் குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதேபோல கோவையில் இருந்தும் கேரளாவுக்கு குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டன.

பேருந்துகளுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தினரால் இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் தனியார் பேருந்துகள் முழு அளவில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share