100 நாள் வேலை திட்டம் ‘அம்போ’? தமிழகத்துக்கான நிதியை பெருமளவு குறைக்கும் மத்திய அரசு? அதிர்ச்சி தகவல்!

Published On:

| By Mathi

VB-G RAM G

100 நாள் வேலை திட்டத்துக்காக (Viksit Bharat-G RAM G) தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு பெருமளவு குறைக்க இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

100 நாள் வேலை திட்டம்

100 நாள் வேலைத் திட்டம் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் – MGNREGS) என்ற பெயரில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட திட்டம்.

ADVERTISEMENT

ஒரு நிதியாண்டில் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள தகுதியுடைய நபர்களுக்குக் குறைந்தபட்சம் 100 நாட்களுக்குக் கட்டாய உடலுழைப்புடன் கூடிய வேலை வாய்ப்பு இந்தத் திட்டத்தின் மூலம் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இந்த 100 நாள் வேலைத் திட்டம் (MGNREGS) மாற்றியமைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக VB-G RAM G Act (VB-G RAM G சட்டம்- Viksit Bharat-G RAM G (விக்சித் பாரத் – ஜி ராம் ஜி) என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.

ADVERTISEMENT

மத்திய அரசு வெளியிட்ட வரைவு விதிகள்

மத்திய அரசு, இந்த புதிய Viksit Bharat-G RAM G (விக்சித் பாரத் – ஜி ராம் ஜி) சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னதாக வரைவு விதிகளை அண்மையில் வெளியிட்டது.

அதில், இந்த புதிய ‘விக்சித் பாரத் – ஜி ராம் ஜி’ (Viksit Bharat-G RAM G – VB-G RAM G) சட்டமானது, கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம், 2005’ (MGNREGA)-க்கு மாற்றாகக் கொண்டு வரப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த புதிய சட்டத்தின் மிக முக்கியமான நோக்கம்,

  • ஒரு நிதியாண்டில் வழங்கப்படும் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உத்திரவாத நாட்களை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்துவதாகும்.
  • இந்த புதிய சட்டம் சரியான நேரத்தில், வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க முறையில் ஊதியம் வழங்குவதை கடுமையாக வலியுறுத்துகிறது.
  • இத்திட்டம் தொடர்பாக எந்தவொரு தனிநபரோ, பங்குதாரர்களோ, அமைப்புகளோ அல்லது நிறுவனங்களோ தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை ஜூன் 21-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

நிதி ஒதுக்கீட்டில் மாற்றம்

மத்திய அரசு முன்வைத்துள்ள வரைவு விதிகளில் கடந்த காலங்களைப் போல இல்லாமல் நிதி ஒதுக்கீட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில்,

  • ஒரு மாநிலத்தில் அல்லது கிராமத்தில் எத்தனை பேர் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார்களோ அத்தனை பேருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும். அதிக மக்கள் வேலை கோரி வந்தால், அந்த மாநிலத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கிக் கொண்டே இருக்கும். இதற்கு எல்லையோ அல்லது முன் தீர்மானிக்கப்பட்ட உச்சவரம்போ கிடையாது.
  • தமிழ்நாட்டில் இத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, கிராமப்புற மக்கள் இந்த வேலைவாய்ப்பை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டனர். இதன் காரணமாக, இத்திட்டத்துக்கான மத்திய அரசின் ஒட்டுமொத்த தொகையில் கிட்டத்தட்ட 9.97% நிதியைத் தமிழ்நாடு பெற்று வந்தது.

புதிய VB-G RAM G சட்டத்தின் கீழ் என்ன நிதி ஒதுக்கீட்டு நடைமுறை?

இனிமேல் ஒரு மாநிலத்தில் எத்தனை பேர் வேலை கேட்கிறார்கள் என்பதை மத்திய அரசு முதன்மையாகக் கணக்கில் கொள்ளாது. மாறாக, 16-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள சில குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இவ்வளவுதான் நிதி என்று முன்கூட்டியே ‘பட்ஜெட்’ போலப் பிரித்து வழங்கிவிடும்.

அதாவது

  • அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக நிதி
  • ஒரு மாநிலத்தின் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி
  • மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் மாநிலங்கள் காட்டிய செயல்திறன் இவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி தீர்மானிக்கப்படும்.

தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

மத்திய அரசின் இப்புதிய விதிகளால்

  • பொருளாதாரத்தை உயர்த்தி, மக்கள்தொகையையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்களுக்கான மத்திய அரசின் 100 நாள் வேலை திட்ட நிதி குறையும்.
  • அதிக மக்கள்தொகையும், குறைந்த வருமானமும் கொண்ட வட இந்திய மாநிலங்களுக்குத்தான் அதிக நிதி கொடுக்கப்படும்.
  • உதாரணமாக உத்திரப் பிரதேச மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீடு 17.62% ஆகவும் பீகாருக்கான நிதி பங்கீடு 9.95% ஆகவும் உயரும்; குஜராத்தின் நிதிப் பங்கீடு 2.5 மடங்கு உயரும்.
  • தமிழ்நாட்டுக்கான நிதி பங்கீடு 9.97%-ல் இருந்து வெறும் 4.10% ஆகக் குறைகிறது.
  • ஆந்திராவுக்கான நிதி ஒதுக்கீடு 8.80%-ல் இருந்து 4.20% ஆகவும் கேரளாவுக்கான பங்கீடு 3.94%-ல் இருந்து 2.38% ஆகவும் தெலுங்கானாவுக்கான பங்கீடு 3.94%-ல் இருந்து 2.17% ஆகவும் குறையும்

2023-24-ல் தமிழ்நாட்டுக்குக் ரூ. 12,698 கோடி கிடைத்த நிலையில் 2024-25-ல் இது ரூ.10,156 கோடி ஆக குறைக்கப்பட்டது. 2025-26-ல் தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு வெறும் ரூ.5,878 கோடி மட்டும்.

புதிய VB-G RAM G சட்டத்தின் கீழ் வரவிருக்கும் நிதியாண்டிற்கு முன்மொழியப்பட்டுள்ள கணக்கீடு:

  • மத்திய அரசு ஒதுக்கும் மொத்தத் தொகை: ரூ. 95,692 கோடி
  • தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக் கூடிய தொகை ரூ. 3,923 கோடி மட்டுமே அதாவது 4.10% ஆக மட்டுமே இருக்கும்.

மத்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில், “2023-24 ஆண்டில் 100 நாள் வேலை திட்டத்திற்காக தமிழகத்திற்கு ₹12,700 கோடி கிடைத்தது

இந்த ஆண்டு இதே திட்டத்திற்காக மோடி அரசிடமிருந்து ₹4000 கோடி மட்டுமே கிடைக்கும்

இத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தின் பங்கு 10%-லிருந்து 4%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது

ஆனால் குஜராத்தின் நிதிப் பங்கு மட்டும் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது! ஏன்?
தமிழர்களுக்கு எதிராக மோடி அரசுக்கு என்ன வன்மம்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்டசபை தேர்தலின் போதும் 100 நாள் வேலை திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிடப் போவதாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் விமர்சித்திருந்தன; ஆனால் அதிமுக- பாஜக கூட்டணி கட்சிகள் 100 நாள் வேலை திட்டத்தில் நாட்கள் எண்ணிக்கை உயரும்; ஊதியம் உயரும் என பிரசாரம் செய்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share