நேற்று மாலை சுமார் ஐந்தரை மணியளவில் வண்டியை நானே ஓட்டிக்கொண்டு திட்டமிட்ட இடத்தை நோக்கி சென்றேன். வழியில் திடீரென மழைத்தூரல் வந்தாலும் பின்னால் யாரோ என்னை தொடர்ந்து வருவதைப்போல் பிரமை. இருப்பினும் மிகச்சரியான நேரத்துக்கு அவ்விடம் வந்து சேர்ந்தேன். எனக்கு முன்னால் அவ்வளவு கூட்டம் இருந்தும் மனம் தளராத நான், முப்பது ரூபாயைக் கொடுத்து மூன்று பஜ்ஜியை வாங்கினேன். கூடவே உருளைக்கிழங்கு பஜ்ஜியும்.
ஆஹா.. என்ன ருசி என்ன ருசி! அட்டகாசமான சட்னி ஒன்றையும் சேர்த்து சுவைத்து மூன்றாவது வாய் வைக்கையில் முத்தான ஒரு மெனு நினைவுக்கு வந்தது. ‘உருளைக்கிழங்கு – குடமிளகாய் பொரியல்’ செய்யலாமே என்று.
சில வருடங்களுக்கு முன் செய்தது. இப்போது இந்த இரண்டு காமினேஷன்களைக் காண்கையில் நினைவுக்கு வந்தது. நாமும் செய்வோமா…
**தேவையானவை:**
உருளைக் கிழங்கு – 1
குடமிளகாய் – 1
பூண்டு – 2 பற்கள்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிது
உப்பு – தேவைக்கு
**தாளிக்க:**
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம், பெருஞ்சீரகம், உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு.
குடமிளகாயையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக வதக்கி வேக வைத்தால் மிளகாயின் நிறம் மாறியிருக்கும். எனவே முதலில் மிளகாயை வதக்கி எடுத்துக்கொண்டு, பிறகு உருளைக்கிழங்கு வெந்தபிறகு சேர்த்தால் அதன் பச்சை நிறம் அப்படியே இருக்கும். இதை எந்த மிளகாயில் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
**செய்முறை:**
குடமிளகாயைக் கழுவிச் சுத்தம் செய்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.
உருளைக்கிழங்கை விருப்பமான வடிவத்தில் நறுக்கி நீரில் போட்டு வைக்கவும். பூண்டு உரித்து நறுக்கி/தட்டி வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய்விட்டு குடமிளகாயைப் போட்டு, சிறிது உப்பு போட்டு வதக்கவும். வதங்கியதும் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும். பாதி வெந்த நிலையில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து புரட்டிவிட்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.
உருளைக்கிழங்கு நீர் வற்றி, நன்றாக வெந்ததும் வதக்கி வைத்துள்ள குடமிளகாயைச் சேர்த்துக் கிளறிவிடவும்.
உருளைக்கிழங்கும், குடமிளகாயும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.
உதிரியாக இல்லாமல் சற்று கிரேவியான பதத்தில் எடுத்துக்கொண்டு, இந்தப் பொரியலைச் சப்பாத்தியில் வைத்து மசாலா சப்பாத்தியோ அல்லது தோசையில் வைத்து பொன்னிறமாக வார்த்தெடுத்து குடமிளகாய் உருளை மசால் தோசையாகவோ செய்து அசத்தலாம்.
கீர்த்தனா சிந்தனைகள்:
சிரிக்கும்போது உன்னுடன்
சேர்ந்து நான்கு பேர்
சிரிப்பார்கள். ஏனெனில்
உலகம் ஜாலியானது…
நீ அழும்போது தனியாகத்
தான் அழுவாய். ஏனெனில்
உலகம் போலியானது.









