கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி திமுக, வேட்பாளர் தங்கஆனந்தனை நீக்கிவிட்டு பாவாடை கோவிந்தசாமியை அறிவித்தது பற்றி நமது மின்னம்பலம்.காமில் 19-ம் தேதி மாலை எழுதியிருந்தோம். விருத்தாசலம் தொகுதி வேட்பாளருக்கு எதிராக போராட்டம் நடப்பதை அறிந்த கருணாநிதி குழந்தை தமிழரசனை அழைத்து என்ன பிரச்சனை என்று கேட்க, மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திமுக போட்டியிடும் 7 தொகுதியில் 5 தொகுதியில் வன்னியர்கள் போட்டியிடுகின்றனர். அதிலும் 3 தொகுதிகளில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் போட்டியிடுகின்றனர். பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள பொன்குமாரும் வன்னியர் என்று சொல்ல கருணாநிதி ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். தவறு செய்துவிட்டோமோ? என்று வருத்தப்பட்டுள்ளார். அதன்பிறகுதான் வேட்பாளர் மாற்றம் குறித்த முடிவுக்கு வந்திருக்கிறார்.
குழந்தை தமிழரசனை பரிசீலனை செய்யும்பொழுது விஜயகாந்துக்கு மறைமுகமாக வேலைசெய்தவர், கட்சிக்கு தேர்தல் நிதிகூட வசூல் செய்துதரவில்லை என்று ஸ்டாலினிடம் புகார் சொல்லி, அவருக்கு பாவாடை கோவிந்தசாமியே பரவாயில்லை என முடிவுக்கு வந்துள்ளனர். ஏப்ரல் 18-ம் தேதி அறிவாலயத்திலிருந்து பன்னீருக்கு போன்செய்து கோவிந்தசாமி பற்றி விபரம் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அப்போதே பன்னீருக்கு தெரியும் கோவிந்தசாமியை அறிவிக்கப்போகிறார் கருணாநிதி என்று. ஏப்ரல் 19 -ம் தேதி, நேற்று திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு கடலூர் மாவட்டத்திற்குள் நுழையும்போது வேட்பாளர் மாற்றம் குறித்த அறிவிப்பு வருகிறது.
பிரச்சார வாகனத்தில் வந்த பன்னீரிடம் விருத்தாசலம் பிரச்சாரத்திற்கு போகலாமா எனக் கேட்டபோது வேண்டாம் பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்று தகவல் தெரிவித்துள்ளார்.அதன் பிறகுதான் பிரச்சார நிகழ்ச்சி நிரல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, நேராக நெய்வேலி தொகுதி இந்திரா நகருக்கு வந்தார் ஸ்டாலின். அங்கு திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்ததும் உற்சாகம் ஆனார்.
அதிகமாக கூட்டத்தைக் கூட்டி வைத்திருந்த சபா ராஜேந்திரன், தோள்மீது கைபோட்டு தட்டிக்கொடுத்து ஓட்டு கேட்டவர், “ இதுபோல் ஜெயலலிதா ஓட்டுக் கேட்பாரா?” என்று உற்சாகமாகப் பேசி விட்டு புறப்பட்டார், பிரச்சார வாகனத்தில் ஸ்டாலின் பின்னால் பன்னீர் அமர்ந்து கொண்டு காதோடு காதாக பேசினார், இந்த குழந்தை தமிழரசன் என்னுடைய சொந்தக்காரர் என்று சொல்லி தங்க ஆனந்தனை மாற்றிவிட்டார், அப்படியென்றால் சபா.ராஜேந்திரனும், துரை.சரவணனும் என்னோட சொந்தக்காரர்கள்தானே அவர்களையும் மாற்றுங்கள் என்று மறைமுகமாக சொல்லியுள்ளார், பிரச்சாரம் முடிந்து புதுச்சேரி திமுக பிரமுகர் ஹோட்டலுக்கு போனது பிரச்சார வாகனம், ஸ்டாலின் துணைவியார் துர்க்காவும் வந்திருந்தார், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர், பொன்குமார், ஸ்டாலினுடன் இருந்தார்கள், புதிய வேட்பாளர் கோவிந்தசாமி உள்ளே வந்து ஸ்டாலினுக்கு சால்வை போர்த்தி காலில் விழுந்து ஆசிவாங்கினார். அருகில் இருந்த பொன்முடி, பன்னீர் கால்களையும் தொட்டு நன்றி சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட்டார், பொன்குமார் ஸ்டாலினுடன் இருந்த வேல்முருகன் புத்திசாலித்தனமாக ஒரு சீட் வாங்கிக்கொண்டு நன்றாக இருந்திருக்கலாம் என்று சொல்ல அருகில் இருந்த பொன்முடி அவன் வந்தால் கிடைக்கக்கூடிய வன்னியர் வாக்குகளும் கிடைக்காது என்று சொல்லும்போது மௌனப் புன்னகையை வெளிப்படுத்தியுள்ளார். புதுச்சேரி நிர்வாகிகள் ஸ்டாலினை பார்க்க உள்ளேவர… புதுச்சேரி நிர்வாகிகள் அனைவரும் காலையில் வாருங்கள் என்று அனுப்பிவிட்டார், பொன்முடி விழுப்புரம் மார்க்கமாகவும், பன்னீர் கடலூர் மார்க்கமாகவும், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் பன்னீர் கண்ணில் படாமல் தப்பித்து விழுப்புரம் சாலையில் காரை நிறுத்திவிட்டு நீண்ட நேரம் ஒரு இடத்தில் நின்று விட்டு பின்னர் புறப்பட்டுச் சென்றார்.









