கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் சுப்பிரமணியனும், அதிமுக சார்பில் ராமானுஜம் கணேசனும் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுக வேட்பாளர் சுப்பிரமணியன், கழுகுமலை நகர பஞ்சாயத்து தலைவர் ஆவார். 35 வருடங்களாக திமுக-வில் இருக்கிறார். ‘நான் இந்த மண்ணின்மைந்தன். ஆனால், வைகோ வெளியூர்க்காரர். அவருக்கு ஏன் எங்கள் தொகுதி மக்கள் ஓட்டு போட வேண்டும்? வைகோ, கலைஞருக்குத் துரோகம் செய்தவர். எனவே, அவரை தோற்கடிக்க திமுக தொண்டர்கள் கடுமையாக உழைப்பார்கள். ஆகவே கோவில்பட்டி தொகுதியில் நான் வெற்றி பெறுவது உறுதி’ என்கிறார் சுப்பிரமணியன்.
‘1991 முதல் கோவில்பட்டி தொகுதி அதிமுக-வின் கோட்டை. அதிமுக அல்லது அதிமுக ஆதரவு பெறும் கூட்டணி கட்சிதான் இங்கு வெற்றிபெறும். ஜெயலலிதாவின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளது. எனவே, இந்த தொகுதியில் 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெல்வேன்’ என்கிறார் அதிமுக வேட்பாளர் ராமானுஜம் கணேஷ்.









