வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்க வேண்டும் – ராமதாஸ்

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

வீட்டுக் கடன் வட்டி குறைக்காமல் இருக்கும் பொதுத்துறை வங்கிகளைக் கண்டித்து ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மும்பையில் கடந்த 5 ஆம் தேதி நடந்த இந்திய ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கைக் கூட்டத்தில் குறுகியக் கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25% குறைக்க தீர்மானிக்கப்பட்டது. 2015ம் ஆண்டில் மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி 1.25% வட்டி விகிதத்தை குறைத்தது. அதனடிப்படையில் பொதுமக்கள் செய்யும் வைப்பீடுகள் மீதான வட்டியை 1.30% அளவுக்கு குறைத்த வணிக வங்கிகள், பொதுமக்களுக்கு வழங்கிய வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியை 0.45% மட்டுமே குறைத்தன. மீதமுள்ள 0.80% வட்டிக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் வங்கிகளே அனுபவித்து வருகின்றன. இந்த ஆண்டில் குறைக்க வேண்டிய 0.5% வட்டி விகிதத்தையும் குறைக்க பொதுத்துறை வங்கிகள் மறுக்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவை மட்டும் தான் இப்போது 0.10% வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன. மொத்தமாக கடந்த 15 மாதங்களில் பாரத ஸ்டேட் வங்கி 1.20 விழுக்காடும், மற்ற வங்கிகள் 1.30 விழுக்காடும் வட்டிக் குறைப்பை வீட்டுக்கடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க மறுப்பது மிகப்பெரிய அநீதி ஆகும். வீட்டுக்கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்காததற்காக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்படும் காரணம், ‘‘வங்கிகளின் வாராக்கடன் விகிதம் அதிகரித்து விட்டதால், அதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிப்பதற்காக வட்டிக் குறைப்பை சிறிது காலத்திற்கு ஒத்தி வைத்திருக்கிறோம்’’ என்பது தான். இது ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் ஆகும். பொதுத்துறை வங்கிகள் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.14 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்துள்ளன. அதற்குப் பிறகும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் ரூ.3,41,641 கோடியாக உள்ளது. இடைப்பட்ட காலத்தில் வாராக்கடன் அளவு இன்னும் அதிகரித்திருக்கலாம். இக்கடன்களும் அடுத்த சில மாதங்களில் சத்தமில்லாமல் தள்ளுபடி செய்யப்படலாம். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் திட்டமிட்டே வங்கிகளை ஏமாற்றும் நோக்கத்துடன் உருவாக்கும் வாராக்கடன்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் வீட்டுக்கடன் மீதான வட்டியை குறைக்காமல் வசூலிப்பது எந்த வகையான பொருளாதார உத்தி? என்பதை வங்கிகளும், மத்திய அரசும் தான் விளக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel