தமிழக முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு கருணாநிதி உடந்தை என அண்மையில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் குற்றம் சாட்டினார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அருப்புக்கோட்டையில் பேசிய அம்மையார், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு கருணாநிதி உடந்தை என்று குறிப்பிட்டிருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1991-ம் ஆண்டு விடுதலை நாளையொட்டி கொடியேற்றி விட்டுப்பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘கச்சத் தீவை மீட்டே தீருவேன்’ என்று சூளுரைத்தாரே… அதற்குப்பிறகு இவ்வளவு காலமும் என்ன செய்து கொண்டிருந்தார்? கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை? தேர்தல் என்றதும் கச்சத்தீவு நினைவுக்கு வருகிறதோ? கச்சத்தீவை மீட்டே தீருவேன் என்ற ஜெயலலிதா – அடுத்த எட்டே மாதத்தில் அதாவது 20-4-1992 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா – என்ன சொன்னார் தெரியுமா? ‘கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக்கூடிய, நடைபெறக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை’ என்று மீட்பதற்கு முற்றுப்புள்ளி வைத்ததைப் போலப் பேசியது அவைக்குறிப்பில் இன்னமும் இருக்கிறது. கச்சத்தீவை மீட்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது என்றும்; இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத் தான் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது என்றும்; கச்சத்தீவில் இலங்கைக்கு உள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே பேசிய, அறிக்கை விடுத்த ஜெயலலிதா, அவ்வளவையும் திரைபோட்டு மறைத்து மூடிவிட்டு, கச்சத்தீவை நான் தாரை வார்த்து விட்டேன் என்றும், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதை மீட்பேன் என்றும் தற்போது தேர்தல் நேரத்தில் பேசுவதுதான் உண்மையான கபட நாடகம்; மக்களை ஒருமுறை, இரண்டுமுறை ஏமாற்றலாம், ஆனால் எப்போதும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிவிட்டு அதன்மூலம் வெற்றி காண்போம் என்று ஜெயலலிதா எண்ணுவதை நாட்டு மக்கள் இனியும் நம்பத்தயாராக இல்லை. அந்த உண்மை, வானத்திலேயே பறந்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு தெரியாது; மண்ணில் இறங்கி வந்தால்தான் தெரியும்’ என கண்டனம் தெரிவித்துள்ளார்.
வானத்தில் பறக்கும் ஜெயலலிதாவுக்கு உண்மை தெரியாது: கருணாநிதி
By Balaji
|
Published on 18 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








