நெருக்கடிகளுக்கு மத்தியில் டில்லியில் தன் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்தியா முழுக்க கெஜ்ரிவாலின் இமேஜை தகர்க்க ஏவிய அஸ்திரங்கள் எடுபடாத நிலையில், எக்கானமிக்ஸ் டைம்ஸ் நாளிதழில் வந்த
அவரது இந்த நேர்காணலை சில பாகங்களாக தமிழுக்குத் தருகிறோம்.
விரைவில் நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் கணிப்புகள் கூறுவதுபோல, ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உங்களுக்கும் இருக்கிறதா?
பாஜக, காங்கிரஸ், அகாலிகள் என இந்த அரசியல் அமைப்பால் மக்கள் நோய்மைக்கூறு அடைந்திருக்கிறார்கள். இதற்கு நல்ல மாற்று வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். டில்லி மாநில அரசைப் பார்க்கிறார்கள், மக்களின் அமோக தீர்ப்பைப்பெற்று ஆம் ஆத்மி நல்லாட்சி நடத்துவதைப் பார்க்கிறார்கள். டில்லி நிலைமை பஞ்சாப்புக்குப் பரவுகிறது. சமீபத்திய கருத்துக் கணிப்பு, பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 100 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறுகிறது. ஏற்கனவே, அங்கு ஆட்சிக்கு எதிரான அலை வீசுகிறது. மக்கள் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை. கட்சிக்கு எதிராக வாக்களிக்கிறார்கள். உ.பி-யில் 240க்கும் அதிகமான இடங்களில் சமாஜ்வாதி கட்சி வென்றது, ஆட்சிக்கு எதிரான வாக்குகள் ஒரு கட்சிக்குக் குவிந்ததால்தான்.
பஞ்சாபில் நீங்கள்தான் முதல்வர் வேட்பாளரா?
இது ஊகத்தின் அடிப்படையிலான கேள்வி. நாங்கள் யாரையும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப் போவதில்லை. இதுகுறித்து கட்சிக்குள் எந்த விவாதமும் வரவில்லை.
உங்களது டில்லி மாடல் அரசுக்கும், குஜராத் மாடல் அரசுக்கும் என்னதான் வேறுபாடுகள் இருக்கின்றன?
குஜராத் மாடல் ஆட்சி என்பது விளம்பர ஆட்சி. குஜராத் மாடலைப் புகழ்ந்து நீங்கள் எழுதுவதெல்லாம் வெறும் ஓட்டைகள். டில்லி மாடல் என்பது வெளிப்படையான ஆட்சி. நாங்கள் அரசை விற்கவில்லை.
வெளிப்படைத்தன்மை தவிர நீங்கள் டில்லியை ஆட்சி செய்வதற்கும் நரேந்திர மோடி குஜராத்தை ஆட்சி செய்ததற்கும் வேறு என்ன வித்தியாசங்கள்?
எங்கள் நிதிநிலை அறிக்கையைப் பார்த்திருந்தால் அனைவரும் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். நாங்கள் மின் கட்டணத்தைக் குறைத்துள்ளோம். குடிநீரை இலவசமாகத் தருகிறோம். விவசாயிகளுக்கு மிக அதிக இழப்பீடு தருகிறோம். இன்னும் அதிக மானியங்கள், முதலீடுகள். இதற்காக வரிகளை உயர்த்தவில்லை. குறைத்திருக்கிறோம். உபரியை அதிகரித்திருக்கிறோம். மக்கள் பணத்தைச் சேமித்து மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிடுகிறோம். இதுதான் மோடி பாணி குஜராத் அரசுக்கும், டில்லி அரசுக்கும் உள்ள வேறுபாடு.
மோடி பாணி என்பது குரோனி கேப்பிடலிசம். அம்பானி, அதானி போன்ற ஆறு, ஏழு நபர்களைப் பெரும் பணக்காரர்களாக்கினார்கள். ஆனால், கல்வியில் கவனம் செலுத்துகிறோம். ஒரு தலைமுறைக்கு கல்வி அளித்துவிட்டால் அடுத்த தலைமுறையில் வறுமையை ஒழித்துவிடலாம்.
அம்பானி, அதானிகளுக்கு எதிரானவரா கெஜ்ரிவால்?
நாங்கள் குரோனி கேப்பிடலிசத்துக்குத்தான் எதிரி. பாஜகவோ, காங்கிரசோ அவர்களால் அதானி, அம்பானி வியாபாரம் நடக்கிறது. அர்சியல்வாதிகள் துணையில்லாமல் அவர்கள் வியாபாரம் வளரமுடியாது. எனவே, கூட்டணி அமைத்து முறைகேடான வழிகளில் பணம் சம்பாதிக்கிறார்கள். இதற்கு எதிராகத்தான் நிற்கிறோம். தனியார்துறைக்கு எதிரானவர்கள் அல்ல.
தனியார்துறை வளர்ச்சிக்கு என்ன செய்கிறீர்கள்?
தனியார் துறையின் செயல்பாடுகளில் நாங்கள் அதிகமாகத் தலையிடுவதில்லை. எங்கள் பணி எவை, அவர்கள் பணிகள் எவை என்பதை தெளிவாகப் புரிந்துவைத்துள்ளோம். அரசுக்கு 2,000 – 4,000 புதிய பேருந்துகள் வாங்க வேண்டும் என்றார்கள். பேருந்து ஓட்டுவது அரசின் வேலை இல்லை. அதனால் அதனை தனியாரிடம் விட்டுவிட்டோம்.
சிஐஐ கூட்டத்தில் பேசும்போது, தனியார்துறை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதால் முதலாளியத்தை ஆதரிப்பதாகப் பேசினீர்கள். ஆனால், குரோனி கேப்பிடலிசம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லையா?
நிச்சயமாக இல்லை. யார் உருவாக்கினார்கள்?
காங்கிரஸ் கட்சிபற்றி என்ன நினைக்கிறீர்கள். பாஜக-வுக்கு ஈடுகொடுக்கும் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறதா?
காங்கிரஸ் கட்சி என்பது இன்றைய அரசியலில் தேவையற்ற அங்கமாகிவிட்டது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பழைய அரசியல் அமைப்புமீதான மக்கள் நம்பிக்கை முடிவுக்கு வந்துவிட்டது. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில்தான் வாக்களிக்கிறார்கள். யாரை ஆதரிப்பது என்ற அடிப்படை இல்லை.
இரண்டாவதாக, யாரும் மக்கள் நம்பிக்கையைப் பெறவும் இல்லை. காங்கிரசை மக்கள் நம்பவில்லை. அந்தக் கட்சி எங்கும் இருப்பதாகவே தெரியவில்லை. அவர்களுக்கு எங்காவது, ஏதாவது வாக்குகள் கிடைத்ததென்றால் அது பாஜக செய்த தவறுகளால் கிடைத்தவைதான். காங்கிரஸ் மோசம். ஆனால், பாஜக-வின் பிரிவினைக்கொள்கை மக்களுக்குப் பிடிக்கவில்லை. மாட்டிறைச்சித் தடை, பாரத் மாதா கி ஜே போன்றவற்றை பாஜக-வினர் வலியுறுத்துவதால் அக் கட்சி பிடிக்கவில்லை என அசாம் கல்லூரி மாணவர்கள் கூறுவதாக இணையத்தில் ஒரு கட்டுரை படித்தேன். அப்படியானால் நாடு, முன்னேற்றம் போன்றவை குறித்த பாஜக கொள்கைகளை முக்கியமாகக் கருதவில்லை. ஏனெனில், நாட்டின் முன்னேற்றத்துக்கான கொள்கை பாஜக-விடமும் இல்லை. காங்கிரஸ் 10 ஆண்டுகளில் நிகழ்த்திய அராஜகத்தை பாஜக இரண்டே ஆண்டுகளில் நிகழ்த்திக்காட்டிவிட்டது. இதேநிலை நீடித்தால் காங்கிரஸ் கையில் மீண்டும் ஆட்சி செல்லும். வேறு எந்த எதிர்காலமும் காங்கிரசுக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.
2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராகக் களம் இறங்கும் ஆர்வத்தில் உள்ளீர்களோ?
(சிரிக்கிறார்) அப்படி எந்த ஆசையும், எண்ணமும் எனக்கு இல்லை. முதல்வராகும் எண்ணமும்கூட எனக்கு இருந்ததில்லை.
அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும் அதில் தவறு ஒன்றும் இல்லையே?
ஆனால், எனக்கு இல்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்தால் வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமும் இல்லை. நீங்கள் சரியாகச் சொன்னதுபோல நான் வெளிப்படையானவன். (சிரிக்கிறார்)
ஆனால், உங்களுக்குள் அப்படி ஒரு ஆசை இருக்கிறது என்று உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் சொல்கிறார்களே?
(சிரிக்கிறார்) யோகேந்திர யாதவ் போன்றவர்களால் அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம். அப்படி ஆசை இருப்பதில் தவறில்லை. ஆனால், நான் இல்லை என்றால் இல்லைதான்.
பஞ்சாபில் உங்கள் பெயரைச் சொல்லித்தான் ஆம் ஆத்மி வாக்குச் சேகரிக்கிறது. ஆனால், சீக்கியர் அல்லாத ஒருவர் அங்கு முதல்வராக முடியுமா?
இது ஊகமான கேள்வி. எனது கடமை டில்லியில்தான்.
ஆனால், உங்கள் பெயரைச் சொல்லித்தானே பஞ்சாபில் வாக்கு கேட்கப்படுகிறது?
அது தலைமைப் பொறுப்பில் இருப்பதால்…
மிகப்பெரும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் மோடி அரசு செய்த தவறுகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?
இதுபற்றி விரிவாகச் சிந்திக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்களுக்கு வாக்களித்த விவசாயிகள், வர்த்தகர்கள், மாணவர்கள், ஆசிரிய சமுதாயங்கள், தலித்துகள் அனைவரையும் தனக்கு எதிராகக் கொண்டுவந்துவிட்டது. தொடக்கம் முதலே சிறுபான்மையினர் பாஜக-வுக்கு எதிராக உள்ளனர். இந்த சமுதாயங்களின் மனதில் ஆழமான கசப்புணர்வை மோடி விதைத்துவிட்டார். மோடி தொழிற்துறையை நாசப்படுத்திவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள். தங்கள் எதிரிகளை இந்த வேகத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவதாக, அவர்கள் அரசியல் முழுவதும் சந்தர்ப்பவாதமும், முரண்பாடுகளும் நிறைந்தது. ஜம்மு-காஷ்மீரில் அப்சல் குரு நாட்டுப்பற்றாளர் என்று பாஜக கூறுகிறது. ஆனால், ஜேஎன்யு-வில் அப்சல் குரு தேசத்துரோகி என்றுகூறி மாணவர்களை விரட்டி, விரட்டி அடிக்கிறது. ஆனால் உண்மையில், அங்கு இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவர்களை இன்னமும் பிடிக்க முடியவில்லை. மத்திய அரசிடம் ரா, ஐபி, டில்லி காவல் துறை, ராணுவம், சிபிஐ எல்லாம் இருக்கிறது. ஆனால், அந்த மாணவர்களை மட்டும் பிடிக்கமுடியவில்லை. நான் அந்த மாணவர்களை ஜேஎன்யு வளாகத்துக்குள் அனுப்பியதே பாஜக-தான் என நினைக்கிறேன். பாஜக மாணவர்கள்தான் இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியது. டில்லியில் பிரச்னை ஏற்படுத்துவதற்காக அவ்வாறு செய்தார்கள்.
ஏன் இதையெல்லாம் பாஜக செய்யவேண்டும்?
அணி சேர்க்க, நாட்டை பிளவுபடுத்த, இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை பாஜக-தான் கொடுத்தது. அதை முழக்கமிட்ட மாணவர்களின் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கின்றன.
(த எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழுக்காக ரோஹினி சிங், அக்ஷய் தேஷ்மனே ஆகியோருக்கு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த நேர்காணல் அந்த நாளிதழ் 2016 ஏப்ரல் 7 இதழில் வெளியானது. அதன் முக்கியப் பகுதிகள் தமிழில் தரப்பட்டுள்ளது.)
