கரூரில் திமுகவை முதல்வர் விஜய் குற்றம்சாட்டி பேசியதற்கு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்வர் விஜய் நேற்று கரூருக்கு வருகை தந்தார். முதலில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், கரூர் பெருந்துயர சம்பவத்தை குறிப்பிட்டு, திமுகவை விமர்சித்து பேசியிருந்தார்.
முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு ஆகியோரையும் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “கரூருக்கு போக முடியாமல் இருந்ததற்கு திமுக தான் காரணம் என்பது போல் பேசி இருக்கிறார். திருச்சி கிழக்கு வரை பிரச்சாரத்துக்காக சென்ற விஜய், அதற்கு பக்கத்தில் இருக்கும் கரூருக்கும் போயிருக்கலாம். காரணம், அவருடைய சோபா மாடல் கட்சியில் கரூர் விஜய்பாஸ்கர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேரட்டும், இடைத்தேர்தல் வரட்டும் பிரச்சாரத்துக்காக போகலாம் என்று காத்திருந்தார்.
இவர் நன்றி சொல்வதற்கு செல்வதாக இருந்தால் முதலில் பெரம்பூருக்கு தான் சென்று இருக்க வேண்டும். ஆனால் திருச்சி கிழக்குக்கு இடைத்தேர்தல் காரணமாக தான் சென்றார். அதுபோல கரூருக்கும் இடைத்தேர்தல் காரணமாக தான் சென்று இருக்கிறார்.
விஜயபாஸ்கர்களை வைத்துக்கொண்டு விஜய் இப்படி பேசலாமா
அங்கு பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார். கரூர் விஜய்பாஸ்கரை மேடையிலேயே வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பேசுகிறார். 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப்பிரச்சினை வழக்கில் கரூரில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்டவர் தான் கரூர் விஜயபாஸ்கர். அவருக்காக சி விஜயபாஸ்கர் காத்திருக்கிறார். இவர் மீது குட்கா வழக்கில் விசாரணைக்கு வர சொல்லி நீதிமன்றம் கூறியிருக்கிறது. இவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என்று விஜய் பேசுகிறார்.

எல்லாவற்றுக்கும் திமுக தான் காரணம் என்பது போலவே பேசுகிறார். கரூரில் நடந்த சம்பவத்திற்கும் திமுக தான் காரணம் என்று சொல்லி இருக்கிறார்.
முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கிறோம் என்பது அவருக்கு இன்னும் நினைவுக்கு வரவில்லை. ஆனால் அவர் எங்கள் தலைவரை பார்த்து, நீங்கள் இன்னும் முதலமைச்சரின் எண்ணத்திலேயே இருக்கிறீர்களா என்று கேட்கிறார். நீங்கள் முதலமைச்சர் ஆகிவிட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?
உங்களுக்கு கீழ் இருக்கிற காவல்துறையை குற்றம்சாட்டி நீங்களே பேசி இருக்கிறீர்கள். ஒரு அரசியல் கட்சியை குற்றம் சாட்டுவது இன்னொரு அரசியல் கட்சி தலைவருக்கு வழக்கம். ஆனால் காவல்துறை என்பது ஒரு இன்ஸ்டிடியூஷன். அது யார் ஆட்சிக்கு வந்தாலும் இருக்கும். அப்படி இருக்கும் போது முதலமைச்சராக இருந்து கொண்டு நீங்களே குற்றம்சாட்டி பேசி இருக்கிறீர்கள். இது தவறான முன்னுதாரணம். இதற்கான ரியாக்ஷன் அந்த துறையில் எப்படி இருக்கிறது என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.
தன்னுடைய முதுகில் இருக்கிற கறையை மறைப்பதற்கு மற்றவர்களை குற்றம் சொல்வது தான் தன்னுடைய வழக்கம் என்பது, போல காவல்துறையையும் காவல்துறைக்கு அன்றைக்கு ஆளும் கட்சியாக இருந்தவர்களும் வழிகாட்டினார்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
ஓடு ஓடு ஓடு
அவர் இன்னும் திரைப்படத்தை விட்டு வெளியே வரவில்லை. ’ஓடு ஓடு ஓடு’ என்று சொல்லி சைகை காட்டுகிறார். அதற்கு முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி மிக அழகாக பதில் சொல்லி இருக்கிறார். கரூர் சம்பவம் நடந்த அன்றைக்கு சென்னைக்கு ஓடிவந்தது யார் என்பது நாட்டுக்கே தெரியும். அந்த ஓடு ஓடு ஓடு ஒடுக்கு அவர்தான் (முதல்வர் விஜய்) உதாரணம் என்று சொல்லி இருக்கிறார் செந்தில் பாலாஜி.
அதுபோல முதல்வர் விஜய் கரூரில் நினைவுச் ச.ன்னம் அமைப்போம் என்று சொல்லி இருக்கிறார். ஏற்கனவே மக்கள் மனதில் கரூர் சம்பவம் நினைவுச்சின்னமாகத்தான் இருக்கிறது.
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் ‘சார் சார்’ என்று கூப்பிடும் போது வேகமாக உங்கள் முதுகை காட்டி, ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு என வேகமாக சென்றீர்கள். அந்த வகையில் உங்கள் முதுகு கரூர் மக்கள் மனதிலும் தமிழக மக்கள் மனதிலும் நினைவுச் சின்னமாக இருக்கிறது.
நீங்கள் அமைக்கப் போகும் நினைவுச்சின்னம் காலத்திற்கும் நாட்டு மக்களுக்கு, ‘ஒரு நடிகர் பிரச்சாரத்துக்கு வரேன் என்று சொல்லிவிட்டு நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்த காரணத்தினால் 41 பேரு உயிரிழந்தார்கள்’ என்பதை நினைவுபடுத்தும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை போட்டு விட்டார்கள் என்று சொல்கிறார். அதுவும் சும்மா சொல்லவில்லை. ஸ்டாலின் சார் போட்ட எஸ்ஓபி என்கிறார். இதைத்தான் இன்றைக்கு நீங்கள் பின்பற்றுகிறீர்கள். இதைப் பின்பற்றினால் எந்த பிரச்சனையும் இல்லாமல் உயிரிழப்பும் இல்லாமல் கூட்டங்களை நடத்த முடியும் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
அன்றைக்கு நீங்கள் கரூருக்கு வரும்போது இதே போல பந்தல் அமைத்து, நாற்காலி போட்டு, ஸ்னாக்ஸ் குடிநீர், அடையாள அட்டை ஆகியவற்றை கொடுத்திருந்தால் அன்றைக்கு இந்த விபத்து நடந்து இருக்காது. அனைவரையும் பாதுகாத்து இருக்கலாமே…
அதேபோல பெரம்பலூருக்கு சென்றபோது எச்சரித்த காவல்துறை கரூருக்கு வரும்போது எச்சரிக்கவில்லை என்கிறார். அரியலூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்வதற்கு ஏன் காலதாமதம் ஆனது என்று எனக்கு தெரியும். அரியலூருக்கு வருவதற்கு முன்னால் பைபாஸ் சாலயில் காரை நிறுத்திவிட்டு கூட்டம் சேர்வதற்காக தாமதப்படுத்தி நீங்கள் வந்தீர்கள்.
கரூருக்கு போகும்போது உங்களை முன்னாடியே நிறுத்த சொல்லி காவல்துறையில் சொல்லி இருக்கிறார்கள். அதை காவல்துறை விசாரணையிலேயும் சிபிஐ விசாரணையிலேயும் சொல்லி இருக்கிறார்கள்.
நீங்களும் உங்கள் திரைப்பட யூனிட்டும்

நாங்கள் முன்னாடியே அவருடைய வாகனத்தை நிறுத்தி பிரச்சாரம் செய்ய சொன்னோம். ஆனால் எங்களுடைய திரைப்பட யூனிட் அங்கே உள்ளே கேமராவோடு காத்திருக்கிறார்கள் என்று சொல்லி உள்ளே போனீர்கள். அதற்கு காரணம் நீங்களும் உங்கள் திரைப்பட யூனிட்டும் தான். அதனால் தான் விபத்து ஏற்பட்டது என்பது பட்டவர்த்தனமாக எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இதை மறைப்பதற்கு காவல்துறை எச்சரிக்கை கொடுக்கவில்லை என்கிறீர்கள்.
சொன்ன நேரத்துக்கு சென்று இருந்தாலும் இந்த பிரச்சனை வந்திருக்காது.
எனவே பேசுவதற்கு முன் ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வதற்கு முன் நீங்கள் மனதிலே உள்வாங்கி படித்திருந்தீர்கள் என்றால், இதில் சொல்கிற குற்றச்சாட்டு அனைத்தும் நம் மீது இருக்கிறது என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
ஆனால் அதை நீங்கள் மனதில் உள்வாங்கி படிக்கவில்லை.
செப்டம்பர் 27ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வந்துவிடுவார் என்று உங்கள் பொதுச் செயலாளர் என் ஆனந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி கொடுத்தது வீடியோவாக இன்றைக்கும் யூடியூபில் இருக்கிறது.
எனவே உங்கள் பக்கம் தவறுகளை வைத்துக்கொண்டு அதை மறைத்து விட்டு மீண்டும் மீண்டும் கரூர் சம்பவம் தொடர்பாக திமுக உங்கள் மீது குற்றம் சுமத்தியது என்று சொல்கிறீர்கள். சட்டமன்றத்திலே எங்கள் தலைவர் பேசினார் என்று சொல்கிறீர்கள்.
ஆனால் எந்த கட்சித் தலைவரும் தன்னுடைய கட்சியை சேர்ந்த தொண்டர்கள் உயிர் இழப்பதை விரும்ப மாட்டார்கள் என்று பெருந்தன்மையாக சொன்னவர்தான் எங்கள் தலைவர்.
இப்போதுதான் வர முடிந்ததா
அதேபோன்று எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் மனதிற்கு ஏற்பட்ட காயங்களை மறக்க முடியாது, நிறைய வலிகள் காயங்களை தாண்டித்தான் வந்திருக்கிறேன். என் வாழ்வில் அதிக காயம் கொடுத்தது கரூர் சம்பவம் தான். எனவே கரூர் மக்களை சந்திக்கவும் பேசவும் தான் வந்தேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் எத்தனை நாட்களில் கழித்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். 285 நாட்கள் கழித்து இப்போதுதான் வர முடிந்ததா. அப்போது திமுக ஆட்சி தான் உங்களைப் போக விடாமல் தடுத்தது என்றால் உங்கள் ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் ஆகிறது முன்னாடியே போயிருக்கலாமே. ஏன் போகவில்லை.
இடையில் உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் வீட்டு கல்யாணத்தில் எல்லாம் கலந்து கொண்டீர்கள். ஜனநாயகன் ஆடியோ லான்ச்சில் கலந்துகொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு நடனம் ஆடினீர்கள்.. உங்களுக்கு மனதில் வலியும் காயமும் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடினீர்கள்.
எனவே கரூர் வந்து தான் இந்த வலிகளை எல்லாம் ஆற்றிக் கொள்கிறேன் என்று சொல்வது டீ ஆற்றுவதற்கு சமம் என்பது மக்களுக்கு தெரியும்.
பெண்கள் பாதுகாப்பு, ஊழல்
பெண்கள் பாதுகாப்பை தான் திமுக ஆட்சியில் மிகப்பெரிய குற்றமாக சுமத்தினீர்கள். ஆனால் இந்த ஆட்சியில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா… ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ விஜி சரவணன் வழக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தும். உங்கள் கட்சியை சேர்ந்த பெண் ஒருவரே மிகத் தெளிவாக அவர் மீது வழக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் அதைப் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை.
அதோடு அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் கொடுத்திருக்கிறீர்கள். துப்பாக்கி தூக்கிக்கிட்டு போய் அவர் லாரி டயரை செக் செய்து கொண்டிருக்கிறார்.
ஊழல் வழக்குகளை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை திமுக சொல்லவில்லை. உங்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர் ஞானசௌந்தரி வழக்கு தொடுத்திருக்கிறார். திமுக சார்பிலும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இப்போது உங்கள் கட்சியில் இணைந்துள்ள சி விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் இவர்கள் ஒவ்வொருத்தர் மீதும் என்னென்ன வழக்கு இருக்கிறது, இதெல்லாம் தெரிந்துதான் உங்கள் வாஷிங் மிஷின் இன்றைக்கு பேமஸ் ஆக இருக்கிறது.
எனவே இந்த ஊழல் , பெண்கள் பாதுகாப்பு இதெல்லாம் நீங்கள் பேசுவதற்கும் உங்கள் ஆட்சிக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லாமல் இருக்கிறது.
சினிமா வசனத்தை பேசுவதை நிறுத்திவிட்டு அரசை நடத்த வேண்டிய நிதானத்திற்கு வர வேண்டும். இந்த சோபா மாடல் வேலைகளை எல்லாம் நிறுத்திக் கொண்டு மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
முன்னாள் அமைச்சர் வேலுவை பற்றி விஜய் பேசியதற்கு பதிலடி கொடுத்த சிவசங்கர், “எல்லோருக்கும் இருப்பது மனித உடல். அதில் பிரச்சனைகள் வரலாம். நாளைக்கு அவருக்கு சார்ந்தவர்களுக்கு கூட பிரச்சனை வந்து அடுத்தவன் கிண்டல் செய்தால்தான் அவருக்கு அந்த வலி தெரியும். அவர், உடல் நலத்துக்காக தான் போயிருக்கிறார். நீதிமன்றத்திலும் சொல்லி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார் என்றால் எந்த பிரச்சார மனநிலையில் இருக்கிறார் என்பதாகத்தான் பார்க்க முடிகிறது” என்று குறிப்பிட்டார்
