தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு கடந்த மாதம் (ஜனவரி) முதல் 4,000 நகரங்களில் நடந்துவருகிறது. இக்குழுவினர் மதுரையில் நாளை (பிப்ரவரி 12) முதல் 14ஆம் தேதி வரை ஆய்வு செய்து மதிப்பீடு வழங்குகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின், ‘சுவச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் நாட்டின் பல பகுதிகள் தூய்மை அடைந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ‘தூய்மையான நகரங்கள்’ குறித்து நகரங்களில் ஆய்வு செய்து பட்டியலை மத்திய அரசு வெளியிடுகிறது.
இதற்கான கணக்கெடுப்பு கடந்த ஜனவரி மாதம் முதல் 4,000 நகரங்களில் நடந்துவருகிறது. ஒவ்வொரு நகரின் பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, திறந்தவெளி கழிப்பிடமின்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்து அதற்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மதுரையை ‘டாப் 10’ நகருக்குள் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் தலைமையில் சுகாதாரப் பிரிவினர் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நகரின் அனைத்துப் பகுதிகளிலும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை நகரின் தூய்மை பற்றி மதிப்பீடு செய்யும் குழுவினர் நாளை முதல் 14ஆம் தேதி வரை ஆய்வு செய்து மதிப்பீடு வழங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









