டிஜிட்டல் திண்ணை: வெளிவருமா தோட்டக்குறிச்சி மர்மம்?

By Balaji

|

Published on 23 Apr 2016, 12:00 AM

ஃபேஸ்புக் முதலில் சைன் இன் ஆகி தயாராக இருந்தது. ‘‘தோட்டக்குறிச்சி அன்புநாதன் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி நேற்று டிஜிட்டல் திண்ணையில் விலாவாரியாகச் சொல்லியிருந்தோம். அன்புநாதன் வீட்டுக்கு அடிக்கடி ஆம்புலன்ஸ் வருவதும் போவதுமாக இருப்பதை அந்தப் பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதிமுக விநியோகம் செய்யத் திட்டமிட்டிருந்த பணத்தை அன்புநாதன் வீட்டில் வைத்து, அங்கிருந்து சுற்று வட்டார மாவட்டங்களுக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கலாம் என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர். ஆம்புலன்ஸில்தான் பணத்தை அன்புநாதன் வீட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ்வழியாகவே வெளியில் கொண்டுபோயிருக்கிறார்கள். அதுவும் சில நாட்களில், இரவு நேரங்களில், இந்தப் பகுதிகளில் மட்டும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் ஏதோ, பெரிய அளவிலான ஆபரேசனுக்கு அதிமுக-வினர் திட்டமிட்டிருப்பது தெரிகிறது என்பதையும் நேற்று சொல்லியிருந்தேன். இந்தச் சூழ்நிலையில் அன்புநாதன் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வர ஆரம்பித்துள்ளது. அந்த சிசிடிவி கேமரா பதிவில், அன்புநாதன் வீட்டுக்குள் பணம் கொண்டுவருவது, எடுத்துச்செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், ரெய்டுக்கு வந்த அதிகாரி ஒருவர் அந்தக் காட்சிகளை அழித்துவிட்டார் என்றும் ஒரு தகவல். எப்படியோ, அன்புநாதன் வீட்டில் பணம் பதுக்கிவைத்திருந்தது மட்டும் இப்போது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறது. அன்புநாதனின் நண்பர் மணிமாறன் என்பவர் வீட்டிலும் இன்று சோதனை நடக்கிறது. எல்லாம் முடிந்தால் இன்னும் என்னவெல்லாம் பூதம் வெளிவருமோ? என்ற ஸ்டேட்டஸ் போஸ்ட் ஆனது.

ADVERTISEMENT

அதை காப்பி செய்து பரவவிட்டது வாட்ஸ் அப். அப்படியே, திமுக வட்டாரத் தகவலை டைப் செய்ய ஆரம்பித்தது. “தலைவர்களின் பிரச்சாரம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. திமுக தலைவர் கருணாநிதி பெரும்பாலும் வேனில்தான் பயணம் செய்கிறார். அவருக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வேனில் பிரச்சாரம் செய்கிறார். கருணாநிதி காரில் உள்ளதுபோலவே மூவிங் டைப்பில் அவர் உட்காரும் ஷுட் வடிவமைக்க வேண்டும் என்று கேட்டார்களாம். ஆனால், கோவையில் வடிவமைத்த நிறுவனமோ அது சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டதாம். அதன்பிறகு, மும்பையில் இருந்து ஒரு நிறுவனத்தின் டெக்னீஷியன் கோவைக்கு வந்து கருணாநிதி காரில் உள்ள ஷீட்போலவே வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்தமுறை, கருணாநிதி அதிகப்படியான தூரம் பயணம் செய்கிறார். வேன் பிரச்சாரம் என்பது அவருக்குச் சிரமம் இல்லை. வேனில் அமர்ந்தபடியே பேசிவிட்டுக் கிளம்பிவிடுவார். ஆனால், பொதுக்கூட்டம்தான் அவருக்கு பெரிய சிக்கல் என்கிறார்கள். ஆனால், அதை யாரும் சொல்ல முன்வரவே இல்லை. கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் அவருக்கு முன்னால் பலரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். கருணாநிதி, எல்லாவற்றையும் பொறுமையாக உட்கார்ந்து கேட்பார். கடைசியாக, அவரைப் பேச வைப்பார்கள். கருணாநிதி கலந்துகொள்ளும் கூட்டங்களில் எல்லாம் இதுதான் நடக்கிறது. ஜெயலலிதா கூட்டம் என்றால் அவர் மட்டும்தான் பேசுவார். கருணாநிதி கூட்டத்திலும் அப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதுதான் அவரது உடல்நலத்துக்கு நல்லது. இதை யாரும் சொல்லாமல் அவரது நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள், கருணாநிதியின் நலம் விரும்பிகள்” என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்தது.

மறுபடியும் ஃபேஸ்புக் வைத்திருந்தது ஒரு ஸ்டேட்டஸ். “தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் 41 அதிகாரிகளின் பட்டியலை திமுக ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் கொடுத்திருந்தது. அதில், 18 பேரை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்துள்ளது. மீதியிருக்கும் நபர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது திமுக-வின் கோரிக்கையாக இருக்கிறது.” என்பது போஸ்ட் ஆனது.

ADVERTISEMENT

ஃபைனல் டச் கொடுக்க வந்தது ட்விட்டர். “ஜெயலலிதா வெயில் நேரத்தில் பிரச்சாரம் செய்வதால், சில உயிரிழப்பு ஏற்பட்டது மக்களிடம் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. இது, ஜெயலலிதா கவனத்துக்குப் போனது. திருச்சி கூட்டம் நேரமாற்றம் செய்யப்பட காரணம் அதுதான்.” இதுதான் அந்த ட்விட்.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel