திமுக, தேமுதிக லேட்டஸ்ட் அப்டேட்
‘‘என்ன நடக்கிறது தேமுதிக-வில்?’’ -வாட்ஸ் அப் கேள்வி அனுப்பியிருந்தது.
பதிலை ஸ்டேட்டஸாகவே போட்டது ஃபேஸ்புக். ‘‘நேற்று இரவு விஜயகாந்த் வீட்டில் இருந்து அந்தக் கார் கிளம்பியது. காரை ஓட்டியவர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன். காருக்குள் இருந்தது பிரேமலதா. கார் நேராக போன இடம் சுதீஷ் வீடு. வீட்டு வாசலில் காத்திருந்த சுதீஷ் காருக்குள் ஏறிக்கொண்டார். அங்கிருந்து புறப்பட்ட கார், வேறு ஒரு இடத்துக்குப் போனது. அங்கே, ஒரு காரில் ஏற்கனவே ஒருவர் காத்திருந்தார். பிரேமலதா வந்த காரைப் பார்த்ததும், காத்திருந்த காரில் இருந்தவர் இறங்கினார். அவர் வைகோ. பிரேமலதா, சுதீஷ், சண்முகபாண்டியன், வைகோ ஆகிய நான்குபேருக்கு இடையில்தான் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ‘நீங்க மக்கள் நலக் கூட்டணிக்கு வரணும். முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதுபற்றி பேசி முடிவு பண்ணிக்கலாம்!’ என்று, வைகோ சொல்லியிருக்கிறார். ‘அதுக்கு வாய்ப்பு இல்லைங்க. தேமுதிக-வுடன் மக்கள் நலக் கூட்டணி வந்தால் அதை நாங்க ஏத்துக்குறோம். முதல்வர் வேட்பாளர் கேப்டன்தான். அதில், எந்த மாற்றமும் இல்ல!’ என்று சொல்லியிருக்கிறார் பிரேமலதா. அதற்கு வைகோ, ‘அவரே முதல்வர் வேட்பாளராக இருக்கட்டும். எனக்கு சம்மதம். ஆனால், எங்க கூட்டணிக்கு வரணும்’ என்று வைகோ சொன்னாராம். ‘நாங்க கலந்து பேசிக்கிட்டு தகவல் சொல்றோம். கேப்டனை எப்படி முதல்வர் வேட்பாளரா ஏத்துக்குறதா சொல்றீங்களோ அதைப்போலவே, எங்க கூட்டணிக்கு வருவதைப் பத்தியும் நீங்களும் பேசுங்க!’ என்று சுமூகமாகப் பேசிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்கள்.’’
‘‘ஓ… அதுதான் வைகோ, அவ்வளவு தைரியமாகப் பேசியிருக்கிறாரா?’’ என்று கமெண்ட் போட்டது வாட்ஸ் அப்.
திரும்பவும் பதிலைப் பதிவிட்டது ஃபேஸ்புக். ‘‘ம்! உடுமலைப்பேட்டை சங்கர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து, மக்கள் நலக் கூட்டணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, ‘‘மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் கைகோர்க்க இருக்கிறார். ஆனாலும், திமுக தலைவர் கருணாநிதி ‘தேமுதிக, கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கருணாநிதி செய்தித்தாள்களை படிப்பதே இல்லையா? கூட்டணிக்கு வர விருப்பமே இல்லாத ஒருவரை வாங்க… வாங்க.. என்று அழைப்பது, எப்படிச் சரியாக இருக்கும்? இது ஏன் கருணாநிதிக்குப் புரியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்தரசனும் விஜயகாந்த் வருவார்! என்றே சொல்லி வருகிறார். எல்லோருடைய நம்பிக்கைக்கும் இப்போது காரணம் புரிகிறதா?”
‘‘நல்லா புரியுது!’’- இது, வாட்ஸ் அப் போட்ட கமெண்ட்.
அப்படியே ஒரு செய்தியையும் டைப் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். ‘‘விஜயகாந்த்திடம் பேசுவதற்கு ஸ்டாலினின் நம்பிக்கை சொக்கு என்கிற சொக்கலிங்கம். இவர்தான், திமுக சார்பில் விஜயகாந்த்திடம் லேட்டஸ்டாக பேசிய நபர். வாஸ்து நிபுணரான சொக்குதான் ஸ்டாலின் குடும்பத்துக்கு வாஸ்து பார்ப்பவர். இதே சொக்குதான், விஜயகாந்த் வீட்டுக்கும் வாஸ்து நிபுணர்.கடந்த, பிப்ரவரி 16ம் தேதி குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குப் போயிருந்தார். அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் உடன் இருந்து கவனித்தவர்கள் இருவர். ஒருவர், இந்த சொக்கு. இன்னொருவர், பாலா. விஜயகாந்த்திடம் சொக்கு நேரடியாகவே பேசியிருக்கிறார். பிறகு, ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். ‘விஜயகாந்த்கிட்ட பேசிட்டேன். அவங்க கூட்டணிக்கு வரும் மனநிலையில் இல்லை. அதனால அடுத்த கட்டமாக என்ன செய்யலாம்னு யோசிங்க’ என்று சொல்லிவிட்டாராம் சொக்கு’’ என்ற செய்தி வந்து விழுந்தது.
‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கு விஜயகாந்த் போனபோது ஏற்பாடுகளை கவனித்த இன்னொருவர் பாலா என்று சொன்னீரே… அவர் யார்?” – ஃபேஸ்புக் கேள்வி கேட்டது.
‘‘இந்தக் கேள்வி வரும்னு எனக்குத் தெரியும். சொல்றேன். விஜயகாந்த்தின் நெருக்கமான நண்பராக இருந்தார் அல்லவா! தேமுதிக-வின் முன்னாள் எம்எல்ஏ மதுரை சுந்தர்ராஜன். அவரின் அக்கா வீட்டுக்காரர்தான் பாலா. இவர், இன்னும் தேமுதிக-வில்தான் இருக்கிறார். பாலாவுக்கு ஜோதிடம் நன்றாக பார்க்கத் தெரியும். பிரேமலதாவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, 2021ல் நீங்கதான் முதலமைச்சர் என்று சொன்னவரும் இந்த பாலாதான்! ‘திமுக-வுடன் கூட்டணி வேண்டாம். தனியாக நிற்கலாம். அப்போதுதான் நீங்க அடுத்த எலெக்ஷன்ல சி.எம். ஆக முடியும்’ என்றெல்லாம் வழிகாட்டி வருபவர் பாலா. பிரேமலதாவும் பாலா சொல்வதைக் கேட்க ஆரம்பித்துள்ளார். ‘பாலா சொல்றதையெல்லாம் அண்ணி கேட்கிறாங்க. அது, பாலா சொல்றதா! இல்லை… அதிமுக மேலிடம் சுந்தர்ராஜன் மூலமாக பாலாவைச் சொல்லவைக்கிறதா தெரியவில்லை!’ என்று புலம்புகிறார்கள் தேமுதிக எம்எல்ஏ-க்கள். எப்படி இருந்தாலும், பிரேமலதா எடுக்கும் முடிவே தேமுதிக-வில் இறுதியானது. ஆனாலும், அந்தக் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் எடுக்கும் முடிவுகளும் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தலாம் அல்லவா!’’ என்று சொல்லிவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது.,”









