டிஜிட்டல் திண்ணை-அதிமுகவில் வேட்பாளர் மாற்றம் தொடரும்!

By Balaji

|

Published on 18 Apr 2016, 12:00 AM

அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் யாரும் இப்போதைக்கும் சந்தோஷப்பட வேண்டிய அவசியம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் மாற்றப்படலாம்!’’ – கடந்த ஏப்ரல் 8-ம் தேதி டிஜிட்டல் திண்ணையில் நாம் சொல்லியிருந்தது இது. சொன்னபடியே மீண்டும் வேட்பாளர்களைப் பந்தாட ஆரம்பித்து விட்டார் ஜெயலலிதா. இதுவரை 8 முறை நடந்த மாற்றத்தில் 26 பேர் மாற்றப்பட்டுள்ளனர். கொடுத்து விட்டுப் பிடுங்கும் வலி ஏன் ஜெயலலிதாவுக்கு புரியவில்லை என்று அதிமுகவில் புலம்பல் அதிக அளவில் கேட்க ஆரம்பித்திருக்கிறது. தென்மாவட்ட வேட்பாளர் ஒருவர் கார்டனுக்கு வந்திருக்கிறார். பூங்குன்றனை சந்தித்து தேம்பித்தேம்பி அழுதிருக்கிறார்.

‘வேட்பாளராக என்னை அம்மா அறிவிச்சதும் சொந்தக்காரங்க, கட்சிக்காரங்க எல்லோரும் வந்து வாழ்த்து சொல்லிட்டுப் போனாங்க. இப்போ திடீர்னு என்னை தூக்கிட்டு வேற ஒருத்தரை வேட்பாளரா போட்டுட்டாங்க. என்னால வெளியில தலைகாட்ட முடியலை. அசிங்கமா இருக்கு. எப்படியாவது என்னை அம்மாவை பார்க்க விடுங்க. நான் எந்த தப்பும் செய்யலை..’என்று அழுதது பற்றி நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இதுபோல மாற்றப்பட்ட வேட்பாளர்கள் பலரும் கார்டனை நோக்கி கதறலுடன் புறப்பட்டிருக்கிறார்கள்.” என்று ஸ்டேட்டஸ் போஸ்ட் செய்தது.

ADVERTISEMENT

“மாற்றங்களுக்கு என்ன காரணம்?” கமெண்டில் கேட்டது வாட்ஸ் அப்.

பதிலை வழக்கம்போல் அடுத்த ஸ்டேட்டஸாக போட்டது ஃபேஸ்புக்.

ADVERTISEMENT

“சங்கராபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ராஜசேகர். இவருக்கு தற்போது தான் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்திருந்தது. தற்போது அந்த தொகுதிக்கு அமைச்சர் மோகன் பெயரே அறிவிக்கப்பட்டுள்ளது. மோகனுக்கு மறுபடியும் கொடுக்க வேண்டும் என்பதால் ராஜசேகரை மாற்றியிருக்கிறார்கள்.

இதனால் ராஜசேகர் குடும்பத்தினர் படு அப்செட். ராஜசேகரின் சித்தி அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ராஜசேகரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் குப்புசாமி கடந்த ஒரு வாரமாக பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

ADVERTISEMENT

இதுவரை கிட்டதட்ட 80 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துவிட்டாராம் குப்புசாமி. செலவு செய்ததை யாரிடம் கேட்பது என்று கூட தெரியாமல் புலம்ப ஆரம்பித்து விட்டார் அவர். திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் தமிழரசி பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைகள் அவரை சுற்ற ஆரம்பித்தது. அவர் பெயருக்கு முன்னாள் போட்டிருந்த டாக்டர் பட்டம்தான் இன்று அவர் வாய்ப்பை தட்டிப் பறித்திருக்கிறது. தமிழரசி சித்தா டாக்டர் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவர் அப்படி எதுவும் படிக்கவே இல்லையாம். சசிகலா குடும்பத்து பரிந்துரையில் வந்தவர் இவர். கோவில்பட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ராமனுஜன். இவர் வைகோவுக்கு ஒருவகையில் தூரத்து சொந்தம். அதனால் வைகோவை எதிர்த்து போட்டியிட்டால் தேவை இல்லாமல் சர்ச்சை வரும் என ராமனுஜன் நினைத்தார். அதனால் வைகோ போட்டியிடுவதாக அறிவித்ததும் சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார். கார்டனில் பூங்குன்றனை சந்தித்துப் பேசினாராம். அப்போது, ‘எனக்கு அங்கே போட்டியிட விருப்பம் இல்லை.

அம்மாகிட்ட சொல்லுங்க. கட்சி வேறு யாரை அறிவித்தாலும் நான் வேலை பார்க்கிறேன்’ என்று சொல்லி ஒரு கடிதம் கொடுத்திருக்கிறார். அதன் பிறகே நடந்திருக்கிறது மாற்றம். சிட்டிங் எம்.எல்.ஏ- வான கடம்பூர் ராஜூவுக்கே மறுபடியும் வாய்ப்பு கொடுத்துவிட்டார்கள்.” என்ற ஸ்டேட்டஸ் போஸ்ட் செய்தது.

ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப். அப்படியே தகவல்களையும் தட்டியது. “ஊழல் புகார்களில் சிக்கிய அமைச்சர் பழனியப்பன். அவருக்கு மறுபடியும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கிடைத்திருக்கிறது. ஐவர் அணியில் இருந்து ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரை நீக்கினார் ஜெயலலிதா. ஓ.பி.எஸ்., விஸ்வநாதன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடந்தது. அதன் பிறகு அவர்களை கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். வேட்பாளர் பட்டியலில் அவர்கள் பெயரும் இருந்தது. ஆனால், பழனியப்பனை மட்டும் ஒதுக்கியே வைத்திருந்தனர். தற்போது திடீரென பழனியப்பனுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார் ஜெயலலிதா. அதற்கு என்ன காரணம் தெரியுமா? பழனியப்பன் கடந்த வாரத்தில் சசிகலா உறவினர் ஒருவரை சந்தித்து சரண்டர் ஆகிவிட்டாராம். அவர் மூலமாகத்தான் சசிகலாவை சந்தித்திருக்கிறார் பழனியப்பன். தன் மீது சொல்லப்படும் புகார்களுக்கு சசிகலாவிடம் விளக்கம் கொடுத்ததுடன், மன்னிப்பும் கேட்டாராம். அதன் பிறகே சசிகலா ஜெயலலிதாவிடம் பேசியதாக சொல்கிறார்கள்.” என்று தட்டிய செய்திக்கு செண்ட் கொடுத்தது.

ட்விட்டரின் ட்விட் இது.”மேட்டூர் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் மக்கள் தேமுதிகவை சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன். பாமகவில் இந்த தொகுதி வேட்பாளர் ஜிகே.மணி. ஏற்கெனவே இந்த தொகுதியில் கடந்த முறை ஜிகே.மணியை தோற்கடித்தவர்தான் பார்த்திபன். அதனால் இந்த முறையும் போட்டி கடுமையாகவே இருக்கும் என்கிறார்கள். தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் வாக்குகளாக பாமகவின் வாக்குகள் இருக்கும்” ட்விட்டை தட்டியதும் ஆஃப் லைனில் போனது.,”

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel