சட்டமன்ற தேர்தல்களில் தேசிய கட்சிகள் பங்களிப்பு: காங்கிரஸ், பாஜக

By Balaji

|

Published on 17 Apr 2016, 12:00 AM

காங்கிரஸ்:

கடந்த ஆறு சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக வலம் வந்தது. ஆனால், அதன்பலம் கூட்டணியைப் பொறுத்துதான் அமைந்தது. வெற்றி பெற்ற கூட்டணியில் இருந்தபோதெல்லாம் அதிக இடங்களில் வென்றுள்ளது. அது, தவறான கூட்டணி அமைத்து தரை மட்டமானதும் உண்டு. ஆனால், கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு 26 தொகுதிகளில் வென்றும் சாதனை படைத்துள்ளது. அது 1989 தேர்தலில்.

ADVERTISEMENT

1989 தேர்தலில் காங்கிரஸ் 214 தொகுதிகளில் போட்டியிட்டு 26 தொகுதிகளில் வெற்றி பெற்று 19.83% வாக்குகள் பெற்றது. போட்டியிட்ட தொகுதிகளில் சராசரியாக 21.83% வாக்குகள் பெற்றது. ஆனால், அடுத்த தேர்தல், 1991–ல் 65 தொகுதிகளில் போட்டியிட்டு 60 தொகுதிகளைப் பிடித்தது. இதில் மாநிலம் முழுவதும் பெற்ற வாக்குகள் 15.19%. வெற்றி பெற்ற தொகுதிகளில் பெற்ற வாக்குகள் 56.23%. ஆனால், அடுத்தத் தேர்தலில் 64 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. வாக்குவீதமோ 5.61%தான். கடந்த ஆறு சட்டமன்றங்களில் இத்தேர்தலில் அமைந்த சட்டமன்றத்தில்தான் காங்கிரஸுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை. தமிழக காங்கிரஸ் தலைமை விருப்பத்தை மீறி அகில இந்திய தலைமை அதிமுக-வுடன் கூட்டணி அமைத்ததுதான் இப்பெரும் தோல்விக்குக் காரணம்.

2001 தேர்தலில் பிரிந்தவர்கள் சேர்ந்து அதிமுக-வுடன் கூட்டணி அமைத்தனர். ஆனால் 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 7 தொகுதிகளில் வென்றது. 2.48% வாக்குகளே பெற முடிந்தது.

ADVERTISEMENT

2006 தேர்தலில் கிட்டத்தட்ட இதே வாக்குவீதம் பெற்றாலும் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 34 தொகுதிகளில் வென்றது. 2011 தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 35.73% வாக்குகள் பெற்றாலும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

இன்னொரு முக்கிய அம்சம், கடந்த ஆறு தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட 1989 தேர்தலில்தான் அதிகபட்சமாக 47,80,714 வாக்குகள் காங்கிரஸ் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

பாஜக:

தேசியக் கட்சியான பாரதீய ஜனதா கட்சி தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் 2001 தேர்தலில் பெற்ற 8,95,352 வாக்குகள்தான் அதிகபட்ச வாக்குகள் ஆகும். இத்தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளை வென்றது. இதுதான், அக்கட்சி பெற்ற அதிகப்பட்ச சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகும். இத்தேர்தலில் இக்கட்சி கூட்டணி அமைத்ததே இதற்குக்காரணம். மற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் இக்கட்சி தனித்தே களம் காண வேண்டியிருந்தது.

2006 தேர்தலில் 225 தொகுதிகளிலும், 2011-ல் 204 தொகுதிகளிலும், 1996 தேர்தலில் 143 தொகுதிகளிலும் போட்டியிட்டு முறையே 2.02%, 2.55%, 2.93% வாக்குவீதம் பெற்றது. ஆனால், 1991 தேர்தலில் 99 தொகுதிகளில் மட்டும் நின்றாலும் 4.01% வாக்குவீதம் பெற்றது. தனித்து களம் கண்ட தேர்தல்களில் இதுவே பாஜக பெற்ற அதிகப்பட்ச வாக்குவீதம் ஆகும். பெற்ற வாக்குகள் 4,19,229.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel