“நாளைக்குப் புதினா – கொத்தமல்லி நிறைய வாங்கி வாருங்கள், சமையல் இன்னும் சுவையானதாகச் செய்யலாம்” என்று கூறியதன் விளைவாக வீட்டிலிருக்கும் அனைவரும் ஆளுக்கொரு கிலோ புதினாவை வாங்கி வந்துவிட்டார்கள். விடுவோமா… அதைவைத்து புதினா குழம்பே செய்துவிட்டேன். நாமும் இன்று செய்வோமா…
**தேவையான பொருள்கள்:**
புதினா – 2 கட்டு, வெந்தயம் – 1 டீஸ்பூன், புளி – தேவையான அளவு, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, மிளகாய் – 6, துவரம்பருப்பு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – அரை கப், உப்பு – தேவையான அளவு.
**செய்முறை:**
புதினா, கறிவேப்பிலை இரண்டையும் சுத்தம் செய்து கழுவி வைக்கவும். மேலே குறிப்பிட்ட மற்ற சாமான்களை நல்லெண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். புளியையும் சிறு சிறு துண்டுகளாக்கி அதே வாணலியில் வறுத்துக் கொள்ளவும். பிறகு எல்லாவற்றையும் நன்றாக அரைத்து புளி, பச்சையாக புதினா, கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்து மைபோல் அரைத்து 2 தம்ளர் தண்ணீர் சேர்த்து உப்புப் போட்டு ஒரு கொதிவந்ததும் மேலும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். பின்பு கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
**கீர்த்தனா சிந்தனைகள்:**
கடன் எப்போ வரும், எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், சம்பளம் தர பத்து நாளுக்கு முன்னாடி கரெக்ட்டா வரும்.









