காங்கிரஸ் தாங்கள் பெற்ற 41 தொகுதிகளில் 33 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை இரவு வெளியிட்டது. காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஆதரவாளர்களுக்கான தொகுதிகளை பெற்றுள்ளனர்.
ராயபுரம், சோளிங்கர், திருத்தணி, தாராபுரம், கரூர், நாமக்கல், சங்ககிரி, கோபிச்செட்டிப்பாளையம், வேடசந்தூர், கலசப்பாக்கம், திருச்சி கிழக்கு, நன்னிலம், காட்டுமன்னார்க்கோயில், திருமங்கலம், ஜெயம்கொண்டம் ஆகிய தொகுதிகளை தனது ஆதரவாளர்களுக்கு பெற்று தந்துள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். வேட்பாளர்கள் பட்டியலையொட்டி முக்கிய தலைவர்கள் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். சில தொகுதிகளை அனைத்து தலைவர்களும் எதிர்பார்த்தார்கள். இந்த பேச்சுவார்த்தையில் ஆருனுக்காக அம்பத்தூர், ப.சிதம்பரத்திற்காக முசிறி, சூலூர், திருநாவுக்கரசுக்காக முதுகளத்தூர் தொகுதிகளை விட்டுக்கொடுத்தார் ஈ.வி.கே.எஸ்.
நாங்குநேரி தொகுதியில் எச்.வசந்தகுமார், விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோருக்கு சோனியா நேரடியாக தொகுதியை ஒதுக்கியுள்ளார். சிட்டிங் எம்எல்ஏ என்பதால் ஓசூரில் கோபிநாத் வேட்பாளர் ஆகியுள்ளார்.ஆத்தூர் (தனி) தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அர்த்தனாரிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரபு சிபாரிசு செய்தவருக்கு உதகமண்டலம், பீட்டர் அல்போன்ஸ் சிபாரிசுக்கு தென்காசி, பாபநாசம் ட்தொகுதி மணிசங்கர் அய்யர் சிபாரிசுக்கும் , பட்டுக்கோட்டை தொகுதி மாணிக் தாகூர் சிபாரிசில் இளைஞர் காங்கிரஸுக்கும்,அறந்தாங்கி தொகுதி திருநாவுக்கரசு பரிந்துரைத்தவருக்கும், கோவை யூத் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. குளச்சல் சிட்டிங் எம்எல்ஏவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.திருநாவுக்கரசு தனது கல்லூரி மேனஜருக்காக மதுரை வடக்கு தொகுதியை பெற்றுக் கொடுத்துள்ளார். எந்த அணியும் சாராத பொதுவான நபர்கள் என்ற அடிப்படையில் காரைக்குடி தொகுதி கே.ஆர் ராமசாமிக்கும் , வேதாரண்யம் தொகுதி ராஜேந்திரனுக்கும் ஒதுக்கியது தலைமை. அனைத்து தலைவர்களும் தங்கள் ஆதரவாளர்களுக்கு தொகுதியை ஒதுக்கிய அதே நேரம், தங்கபாலு ஆதரவாளர்களை ஓரம் கட்டியுள்ளனர். அவர் ஆதரவாளருக்கு இம்முறை சீட் கிடைக்கவில்லை.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆரம்பத்திலிருந்து பெருமளவில் பொருளாதார உதவிகளை செய்து வந்தவர் நா.சே ராமச்சந்திரன். அவருடைய மகன் ராஜேஷுக்கு மதுரவாயல் தொகுதியை கேட்டார். ஆனால் செல்லக்குமார் சிபாரிசில் அம்பிகா சோனி தலையிட்டு கக்கன் தம்பி பையன் மதுரவாயல் கவுன்சிலர் தமிழ்செல்வனுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
தொடக்கத்திலேயே திமுகவிடம் 7 தனித் தொகுதிகளை கேட்டுப் பெறும்படி ஈ.வி.கே.எஸ் க்கு டில்லி தலைமை உத்தரவிட்டுருந்தது. ஆனால் 4 தொகுதிகளை தான் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனால் பெற முடிந்தது. எனவே பொது தொகுதியான மதுரவாயலை தலித்துக்கு ஒதுக்க முடிவெடுத்துள்ளனர் . இதனால் ஈவிகே எஸ் அப்செட். மைலாப்பூர் தொகுதியை தனது ஆதரவாளர் கராத்தே தியாகராஜனுக்கு கொடுக்க சொல்லி சிபாரிசு செய்து வருகிறார் ப.சிதம்பரம். செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்பத்தூர் கேட்டுள்ளார். இவருக்கு ப.சிதம்பரம் சிபாரிசு. ஆனால் நாமக்கல் ஜெயக்குமார், செல்வப்பெருந்தகைக்கு எதிரான தகவல்களை பெரிய ஒரு நோட் போட்டு சோனியாவுக்கு அனுப்பியுள்ளார்.என்கின்றனர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு குழுவை சேர்ந்தவர்கள்.









