திமுக-வின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று கட்சியினருடன் சேர்ந்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களிடம் வாக்குசேகரிக்கும் பொருட்டு புதுக்கோட்டை பள்ளிவாசலுக்கு வந்துள்ளார். அப்போது தேமுதிக வேட்பாளர் ஜாகிரும் வாக்குசேகரிக்க வந்துள்ளார். அரசும், ஜாகிரும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டுள்ளனர். அப்போது பெரியண்ணன் அரசு, ஜாகிரிடம் ‘உங்க கட்சித் தலைமைகிட்ட சொல்லக்கூடாதா… இந்த தடவ அண்ணனுக்கு விட்டுக் கொடுய்யா’ என்று நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார். அதைக் கேட்டதும் மக்கள் நலக் கூட்டணியினர், ஜாகிர் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்துவிட்டனர். பின்னர் பரஸ்பரம் வணக்கம் சொல்லிவிட்டு இருதரப்பும் கலைந்து சென்றிருக்கிறது.
பெரியண்ணன் அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டையில் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஏற்கனவே அதிமுக சார்பில் புதுக்கோட்டையில் போட்டியிட்டவர், அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர். இந்தமுறை ஜெயலலிதாவின் அதிருப்தி காரணமாக, பாஸ்கருக்கு அதிக செல்வாக்கு இல்லாத விராலிமலை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வலுவான போட்டியில்லாததால் இந்த முறை பெரியண்ணன் அரசு, இத்தொகுதியில் முனைப்புடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.









