பாரம்பரிய தமிழிசையின் என்னென்ன பண்புகள் இன்றைய கர்நாடக சங்கீதத்தில் என்னென்ன மாற்றங்களை அடைந்திருக்கின்றன என்பதை அறிய ‘நிழல்’ திருநாவுக்கரசு ப.சோழநாடன் என்ற பெயரில் எழுதியிருக்கும் “தமிழிசைத் தவமணி மதுரை மாரியப்பசாமிகள் வரலாறு” என்ற சிறு நூல் நுழைவாயிலாக அமையக்கூடும். முதலில் நூலில் சோழநாடன் எழுதியிருக்கிற சில பத்திகளை நான் கவனப்படுத்த விரும்புகிறேன்:

1. “தமிழ்நாட்டில் தமிழிசை இயக்கம் என ஒன்று தனியாகத் தேவையா என்கிற கேள்வி எழும். மக்கள் தொகையில் 99% பேர் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். கிறிஸ்து பிறப்பதற்குமுன் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை கூட தமிழிசையே பாடப்பட்டு வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில்கூட தமிழிசைதான் பாடப்பட்டது என்கிறார் உ.வே.சாமிநாதய்யர். தெலுங்கர்கள் ஆண்ட நாயக்கர் காலத்தில் கூட கர்நாடக இசை இருந்ததில்லை தமிழிசையே இருந்தது. நாயக்கர் ஆட்சி முடிந்த காலத்தில் வாழ்ந்த திருவாரூர் தியாகராசர் (1767-1847) முத்துசாமி தீட்சிதர் (1776-1835) சியாமா சாஸ்திரிகள் (1762-1827) என்ற மூவரும்தாம் கர்நாடக இசையைத் தோற்றுவித்தனர் என்கிற வரலாற்றுப் பொய்யை நமது ஊடகங்களும் மேல் சாதிக்காரர்களும் தொடர்ந்து பரப்பி வந்தவண்ணம் உள்ளனர். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுக்கு முன்னரே, தமிழிசை மும்மூர்த்திகள் இருந்தனர் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? ராமநாடகம் பாடிய அருணாசலக்கவிராயர் (1711-1779), நடனக்கலைக்கு அருமையான பதங்களை எழுதிக்குவித்த முத்துதாண்டவர் (1560-1640) மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) என்ற மூவரும் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளுக்கு முன்னரே வாழ்ந்தவர்கள்; அவர்கள் எழுதிக் குவித்தவை அனைத்தும் தமிழிசைப் பாடல்களே. பரிபாடல் காலம் முதல் பாரதிதாசன் காலம் வரை தமிழில் லட்சத்துக்கு மேற்பட்ட கீர்த்தனைகள் எழுதப்பட்டு பாடப்பட்டு வருகின்றன” (பக்கம் 36)
2. “தமிழிசை இலக்கணப் புத்தகங்களான பெருநாரை, பெருகுருகு, அகத்தியம், காக்கைப்பாடினியம், பஞ்சமரபு, இந்திரகாளியம், பரதசேனாபதியம், நாடகநன்னூல், கூத்தநூல், இசைநுணுக்கம், முறுவல், குணநூல், சயந்தம், செயற்றியம், தாளவகையோத்து, பரதம் முதலிய நூல்கள் இருந்தன” (பக்கம் 37).
3. “இந்திய மொழிகளில் யாரிடமும் இல்லாத இசைக் கல்வெட்டுகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. சங்ககால இசையின் சிறப்பை அறிய சங்க இலக்கியங்கள் இருப்பதுபோலவே தமிழிசைக் கல்வெட்டுகளும் உள்ளன. ஈரோடுக்கு அருகில் உள்ள அரச்சலூரில் உள்ள நாகமலையில் தமிழில் கல்வெட்டு உள்ளது. இசை மாத்திரைகளைக் குறிப்பிடும் தாளக்கணக்காக அக்கல்வெட்டு காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான் மலையில் மகேந்திர பல்லவன் காலக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அக்கல்வெட்டு 14 அடி நீளம் 13 அடி அகலம் கொண்ட பாறைச்சரிவில் உள்ளது; ஏழு பிரிவுகளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு பிரிவும் சில உட்பிரிவுகளை உடையது. அந்தக் கல்வெட்டில் காந்தாரம், கைஷிக, மத்திமம், பஞ்சமம், சாதாரி முதலிய பண்களைக் குறிப்பிட்டு அவை ஒவ்வொன்றும் நான்கு வகையாகப் பாடப்பட்டன என்ற குறிப்பும் உள்ளது. இதன் பிற்பகுதியில் தாளக்கணக்கும் பரிவாதினி யாழ் பற்றிய செய்தியும் உள்ளன.” (பக்கம் 37)
4. “தமிழர்களுடைய தாளக் கணக்கு முறை மிகமிக நுட்பமானது….தமிழர்களுடைய சுருதிக் கணக்குமுறை 24 என்பது ஆபிரகாம் பண்டிதர் கண்ட முடிவு. கர்நாடக இசையாளர்கள் பாடும்போது 24 சுருதிமுறையிலும், எழுத்தமைப்பில் 22 ஆகவும் பின்பற்றுவது அவர்களது இசை ஊழலைக் காண்பிக்கும். இதுபோலவே தமிழருடைய தாய் ராகங்கள் 36, இவற்றை 72 ஆக்கி மேளகர்த்தா முறை என்ற போலியான கர்நாடக இசை மரபைப் பாடி வருகின்றனர். ஆனால் இவற்றுக்கு அறிவியல் முறையான ஆதாரம் இல்லை. இந்த இசை ஊழலை பெரும் நாகசுர இசை மேதையான மதுரை பொன்னுசாமிப் பிள்ளை எழுதிய ‘பூர்வீக சங்கீத உண்மை’ தோலுரித்துக் காட்டுகிறது. தமிழ்நாட்டிலேயே தமிழர் மூன்றாந்தரக்குடி மக்களாக நடத்தப்படுவதை எதிர்த்து இயக்கம் கண்ட ஈவேரா-வின் வருகைக்கு முன்னரே மேலே கண்ட அறிஞர்கள் தமிழர்கள் கலைகள் மறைக்கப்படுவதை வெளிக்கொண்டுவந்தனர். இவர்களை அடுத்து விபுலானந்தர், வரகுணபாண்டியன், மரகதவள்ளியம்மாள், அப்பாசாமி ஓதுவார், குடந்தை ப.சுந்தரேசனார், மு.அருணாசலம், கு.கோதண்டபாணிப் பிள்ளை, க.பொன்னையா பிள்ளை, சேலம் ஜெயலட்சுமி, மயிலம் வஜ்ஜிரவேலு முதலியார், வீ.பா.கா.சுந்தரம், திருமதி துர்கா, புதுவை திருமுருகன் முதலிய அறிஞர்கள் தொடர்ந்து தமிழிசை ஆய்வு செய்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழிசைக் கலைஞர்களான சுந்தரமூர்த்தி ஓதுவார், மதுரை மாரியப்பசாமிகள், தியாகராஜ பாகவதர், வேலூர் அப்பாதுரை ஆச்சாரியார், சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார், கே.பி.சுந்தராம்பாள், எம்.எம் தண்டபாணி தேசிகர், சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், மதுரை சோமசுந்தரம் போன்றவர்கள் தனித் தமிழிசை நிகழ்வுகளை மக்களுக்கு நடத்திவந்தனர். 1923ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அண்ணாமலைச் செட்டியாரால் இசைக் கல்லூரி நிறுவப்பட்டது. 1943ஆம் ஆண்டு தமிழிசை இயக்கம் தோன்றியது”
மேற்கண்ட வரலாற்றுச் செய்திகளின் பின்னணியிலேயே, தமிழிசை இயக்கத்தின் பகுதியாக மாரியப்பசாமிகளின் வரலாற்றை சோழநாடன் எழுதியிருக்கிறார். தமிழின் செவ்வியல் இசை வரலாற்றை எழுதுபவர்கள் பொதுவாக இசையும் நடனமும் தேவரடியார்கள், இசை வேளாளர், பார்ப்பனர் என்ற மூன்று சாதியினரின் ஊடாட்டத்தின் மூலமாகவே உருவாயின என்று எழுதுகிறார்கள். உண்மையில், இசைக்கும் நடனத்துக்கும் எல்லா சாதியினரிடமிருந்தும் பங்களிப்பு இருந்திருக்கிறது. மாரியப்பசாமிகள் மண்பாண்டங்கள் செய்தொழிலாகக்கொண்ட தெலுங்கு குலால மரபைச் சார்ந்தவர். அவருடைய கல்வியில் முகமதியப் பெரியார் ஒருவரின் தாக்கமும் இருந்தது என்பதை சோழநாடன் பதிவு செய்கிறார் (பக்கம் 16).
சந்தமும் சொல் சிதையாமல் பாடும் முறைகளுமே தமிழிசையில் முதன்மை பெறுகின்றன என்பதையும் சோழநாடன் விவரிக்கும் மாரியப்பசாமிகளின் பாடும் முறை எடுத்துச் சொல்கிறது. சோழநாடன் எழுதுகிறார், “பொதுவாக பாடல்கள் இயற்றுபவர்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையிலேயே இயற்றுவார்கள். ஆனால் சாமிகள் பாடல்களில் சரணத்திற்குப் பிறகு சந்தம் என்கிற பிரிவு காணப்படும். இந்த சந்தப் பகுதி அமைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் கற்பனைச்சுரம் அல்லது சிட்டசுரம் கர்நாடக இசை நிகழ்வுகளில் பாடப்பெறும்; அவற்றை சுரமாகவே பாடுவார்கள். சாமிகளோ சுரத்தை சுராட்சரமாக சந்தம் மிகுந்த நடையில் நாலடுக்கு, ஐந்தடுக்கு அமைப்பார்கள். இதுவே, மதுரை மாரியப்பசாமிகளின் தனிச் சிறப்பான முறையாகும்” (பக்கம் 48)
சுரங்களை சுராட்சரமாக்குவது தேவார காலம் முதல் இருந்து வந்திருக்கிறது என்று குறிக்கும் சோழநாடன், ஊத்துக்காடு வெங்கடகவியின் ‘அலைபாயுதே’ பாடலிலும் சுராட்சரங்களை அனுபவிக்கலாம் என்று சுட்டுகிறார். மாரியப்பசாமிகள் சங்கரதாஸ் சாமிகளிடம் பெற்ற நாடகப்பயிற்சி சுராட்சரங்களை பாடல்களின் ‘மகுடங்களாக’ அமைப்பதற்கு உதவியிருக்கிறது. மேலும் தமிழிசைக் கலைஞர்கள் சுரம் பாடுவதை மறுத்து ‘மகுடங்கள்’ அமைத்துப் பாடுவது தமிழிசை மரபாக இருந்திருக்கிறது என்றும் மாரியப்பசாமிகளின் சமகாலத்திய சாகித்ய கர்த்தாவான மதுரகவி பாஸ்கரதாஸ் பாடல்களிலும் காணலாம் எனவும் சோழநாடன் குறிப்பிடுகிறார்.
இசை ஒலிகளைவிட சொல்லுக்கே அதன் பொருளுக்கே முக்கியத்துவம் கொடுத்து மாரியப்பசாமிகள் பாடியதை விளக்கும் சோழநாடன், ‘சங்கதி’ என்பதற்கு சரியான சொல் ‘விருத்தி’ என்பதாகும் எனக் குறிப்பிடுகிறார். விருத்தி என்பது ஒரு இசைத்தொடரை மீண்டும் மீண்டும் பாடி படிப்படியாக வளர்ச்சியாக்கிக் காட்டுவதாகும். பாடலின் சொற்பொருளை புலப்படுத்துவதற்கும் பொருள் ஆழம் பொருட்படுத்தப்படுமாறும் பாடுவதற்கே விருத்தி அன்றி இசைக்காக அல்ல.
மாரியப்பசாமிகளின் முன்னூறு பாடல்கள் வரை இயற்றியிருப்பதாக செய்திகள் இருக்கின்றன, அவற்றில் நூறு மட்டுமே கிடைக்கின்றன. இந்த நூறு பாடல்களையும் தொகுத்து சோழநாடன் பின்னிணைப்பாகத் தந்திருக்கிறார்.
மாரியப்பசாமிகளுக்கு தெலுங்கும் வடமொழியும் தெரியும்; தெலுங்கு வீட்டு மொழி; இருந்தும்கூட சாமிகள் ஒரு கச்சேரியில்கூட தெலுங்குப் பாடல்களையோ வடமொழிப் பாடல்களையோ பாடியது கிடையாது. இப்படிப்பட்ட தமிழிசை அறிஞருக்கு தமிழிசை அமைப்புகள் ஏன் பட்டங்களோ, பதவிகளோ தரவில்லை என்ற கேள்வியையும் சோழநாடன் எழுப்புகிறார்.

மாரியப்பசாமிகள் பாடும் பாணியில் இன்னொரு முக்கிய அம்சமாக தேவார காலம் முதற்கொண்டு வழங்கிவரும் கொண்டுகூட்டி பாடும் முறையை சோழநாடன் கவனப்படுத்துகிறார். பல்வேறு வரிகளின் சொற்களை பொருள் மாறாமல் கொண்டுகூட்டிக் கொண்டும் குறித்துக்கொண்டும் பாடும் இம்முறையை வடமொழியில் ‘யதி’ என்பர். யதியை ‘கோபுச்சயதி’ என்றும் குறிப்பிடுவர். தியாகராஜ கீர்த்தனைகளை தமிழ்ப்படுத்தியும் மாரியப்பசாமிகள் பாடியிருக்கிறார். கு.அழகிரிசாமியும், கி.ராஜநாராயணனும் மாரியப்பசாமிகளைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். தமிழிசை இறுக்கமானதல்ல. அது பிற இசைகளோடு உறவாடுவதற்கான நெகிழ்வுகளையும் கொண்டது என்பதை மாரியப்பசாமிகள் ஹிந்துஸ்தானி மற்றும் ஆங்கில மெட்டுக்களில் அமைந்த பாடல்களில் காணலாம் என்பதை சோழநாடன் குறிப்பிடுகிறார்.

சோழநாடன் ( நிழல் திருநாவுக்கரசு)
சொல்லும் பொருளும் சிதையாமல் சந்தம் அமைக்கின்ற முறை அருணகிரிநாதரின் திருப்புகழிலிருந்து மாரியப்பசாமிகளுக்கு வந்திருப்பதையும் சோழநாடன் பதிவுசெய்திருக்கிறார். கச்சேரிகளில் பாடும் சொல்லும் பொருளும் சிதையாமல் பாடுவதற்கு உறுதுணையாக தாள வாத்தியக்கருவிகளோடு சொல்கட்டு பாடுவதற்கு என்று தனியாக ஒருவரும் இருந்திருக்கிறார். மதுரை சோமுதான் கடைசியாக சொல்கட்டினை பாடுவதற்கு தனியாக ஒருவரைக்கொண்டு கச்சேரிகள் நடத்தியவர் என்பது செவிவழிச் செய்தி. சொல்லும் சுருதியும் இணையும் இடங்கள் இன்றும் பொருளோடு இருக்கின்றனவா என்ற கேள்வி தமிழிசைத் தவமணி மதுரை மாரியப்பசாமிகளின் வரலாற்றை வாசிக்கும்போது கூர்மையடைகிறது.
“தமிழிசை தவமணி மாரியப்ப சாமிகள் வரலாறு” ப.சோழநாடன் வெளியீடு: நிழல் 31/48, இராணி அண்ணா நகர், கே.கே.நகர்.சென்னை- 600078. www.nizhal.com விலை ரூ. 150/-
[இசையும் நிலமும்: பகுதி 1 – அருணா சாய்ராம்](https://minnambalam.com/k/1482258706)
[இசையும் நிலமும்: பகுதி 2 – ரவிகிரண்](https://minnambalam.com/k/1482949827)
[இசையும் நிலமும்: பகுதி 3 – காயத்ரி வெங்கட்ராகவன்](https://minnambalam.com/k/1483468219)
[இசையும் நிலமும் : பகுதி 4 – சஞ்சய் சுப்பிரமணியன்](https://minnambalam.com/k/1484159424)
[இசையும் நிலமும்: பகுதி 5 – சபா பண்பாடும் கர்நாடக இசையும் – சில குறிப்புகள்](https://minnambalam.com/k/1484850614)
[இசையும் நிலமும் :பகுதி 6 – லய ஞான குபேரபூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி](https://minnambalam.com/k/1486925983)
[இசையும் நிலமும்: பகுதி 7- பத்மபூஷன் டி.என்.சேஷகோபாலன்](https://minnambalam.com/k/1488220211)
கட்டுரையாளர் குறிப்பு:

எம்.டி.முத்துக்குமாரசாமி எழுத்தாளர், இயக்குநர், தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம், சென்னை. பாரம்பரிய இசை, நடனம், ஓவியம், நாடகம் மற்றும் நிகழ்த்துகலைகள் ஆராய்ச்சியில், கடந்த முப்பது வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
