டெல்லியில் உள்ள யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத் துறை சீல் வைத்துள்ள நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பயப்படாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
யங் இந்தியா அலுவலகத்திற்கு சீல்!
அப்போது, எதிர்கட்சியை ஒடுக்கும் வகையில் இருக்கும் அமலாக்கத்துறையின் விசாரணையை கண்டிப்பதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் டெல்லியில் உள்ள ‘நேஷனல் ஹெரால்டு’ தலைமை அலுவலகத்தில் கடந்த 2ம் தேதி சோதனை நடத்தியது அமலாக்கத் துறை.
அதன் தொடர்ச்சியாக அந்த கட்டிடத்தில் அமைந்துள்ள ’யங் இந்தியா லிமிடெட்’ அலுவலகத்திற்கு அமலாக்க இயக்குனரகம் நேற்று சீல் வைத்தது. மேலும் அனுமதியின்றி அலுவலகத்தை திறக்கக்கூடாது என நோட்டீசும் ஒட்டியது. இதனையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காங்கிரஸ் தலைமை அலுவலகம், சோனியா மற்றும் ராகுல் காந்தி இல்லம் அமைந்துள்ள ஜன்பத் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!
இதற்கு பாஜக மீது காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டினை பதிவு செய்து வருகிறது. கட்சி தலைமையகத்திற்குச் செல்லும் சாலைகளைத் தடுப்பதை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்று கூறியுள்ளது. இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், “பெட்ரோல், டீசல், விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்புவதால், தங்களை முடக்கும் நோக்கில் மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டம்!
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் இன்று அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ”நான் மோடியை கண்டு பயப்படவில்லை. அவர் தடுப்புகளுக்கு மேல் தடுப்புகளை வைக்கலாம். ஆனால் உண்மைக்கு ஒருபோதும் தடுப்பு போட முடியாது” என்றார்.

“ஓடுவதற்கு இடமில்லாமல் போய்விடும்” என்று பாஜக விடுத்த மிரட்டல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஓடுவதைப் பற்றி யார் பேசுகிறார்கள்? அவர்கள் ஓடுவதைப் பற்றி பேசுகிறார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், பரவாயில்லை, ஜனநாயகத்தை பாதுகாப்பது, நாட்டில் நல்லிணக்கத்தை பேணுவது என எனது பணியை நான் செய்வேன்” என்று பதிலளித்தார் ராகுல் காந்தி.
அதுபோன்று மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே எம்.பி., “எனக்கு அமலாக்கத்துறையிடம் இருந்து சம்மன் வந்தது. என்னை மதியம் 12.30 மணிக்கு விசாரணைக்கு அழைத்தனர். நான் சட்டத்தை கடைபிடிக்க விரும்புகிறேன், ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது அவர்கள் அழைப்பது சரியா? சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வீடுகளுக்கு காவல்துறை செல்வது சரியா?. நாங்கள் எதற்கும் பயப்படமாட்டோம்” என்று பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா!

Comments are closed.