டெல்லியில் நேற்று காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தியதால் தலைநகரே போர்க்களமானது.. இதனைத் தொடர்ந்து இன்று விவசாயிகளும் டெல்லி நோக்கி பேரணி செல்ல திரள்வதால் டெல்லி எல்லைகளில் பதற்றம் நிலவுகிறது.
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு (India-US Trade Agreement) எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி கிசான் கட்டில் இன்று ஜூலை 21-ந் தேதி நடைபெறும் ”மகா பஞ்சாயத்தில்” “ Desh Bachao Morcha” என்ற பெயரில் ஒன்று கூட அழைப்பு விடுத்துள்ளது.

இதனையடுத்து பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.
டெல்லிக்கு விவசாயிகள் செல்வதைத் தடுக்கும் வகையில் பஞ்சாப்- ஹரியானா எல்லையான ஷ்ம்பு பகுதியில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
ஷம்பு எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினால் கடந்த காலங்களைப் போல எல்லையிலேயே அமர்ந்து போராட்டம் நடத்தவும் விவசாயிகள் தயார் நிலையில் புறப்பட்டுள்ளனர்.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி நேற்று காக்ரோச் ஜனதா கட்சியினர் பேரணி நடத்த முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது; போலீசார் தடியடி நடத்தினர்; கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். டெல்லியில் இன்றும் போராட்டம் நடத்தப் போவதாக காக்ரோச் ஜனதா கட்சியினர் அறிவித்துள்ள நிலையில் விவசாயிகளும் ஒன்று கூட இருப்பதால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.
விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?
- இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும்
- வேளாண் மற்றும் பால்வளத் துறைகளைப் பேரழிவிற்குள்ளாக்கும் இந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
- இந்த ஒப்பந்தத்தால், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான பொருட்களால் உள்நாட்டுச் சந்தை முடங்கும் அபாயம் உள்ளது; இதனால் கோடிக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்
- ஒப்பந்தத்தின் விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாகச் செயல்படுவதை விடுத்து, இந்த ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு என்ன லாபம் என்பதைப் பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்
