திரிபுரா டிஜிபி அனுராக் தன்கூர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
1994 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தன்கூர் 2025 மே மாதம் திரிபுரா டிஜிபியாக பொறுப்பேற்றார்.
இந்தநிலையில் இன்று (ஜூலை 20) அகர்தலாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அதாவது, காலை 11 மணியளவில் டிஜிபி அனுராக் தன்கூர் கழிவறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.
இதனால் உடனடியாக அவர் அகர்தலா மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிபிபி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டிஜிபி அனுராக் தன்கூர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
மருத்துவர் பிரதீப் பௌமிக் கூறுகையில், ”12 மணிக்கு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போதே ரத்த அழுத்தம், நாடி துடிப்பு என உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவருக்கு 40 நிமிடங்களுக்கும் மேலாக சிபிஆர் கொடுத்தோம். எனினும் எந்த பலனும் இல்லை. அதனால் 12.48 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தோம்” என்று கூறினார்.
அவருடைய மரணத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை . பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என போலீசார் கூறுகின்றனர்.
எனினும் அவர் தனது துப்பாகியிலேயே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. இதுதொடர்பான உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை. இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காவல்துறை தலைமை அதிகாரியின் திடீர் மரணம் ஐபிஎஸ் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் தனது ஓய்வு காலத்தை நெருங்கிக்கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
திரிபுரா காவல்துறை மற்றும் சிபிஐயில் பணியாற்றிய போது அனுராக் தன்கூர் பல்வேறு முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
