TAPS திட்டம் இந்த ஆண்டே செயல்படுத்தப்படுமா? முதல்வரைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள்!

Published On:

| By Kavi

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று கூறி புதிதாக TAPS என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி ஆய்வறிக்கை மற்றும் அமைச்சர்களின் ஆலோசனை ஆகியவற்றை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் இன்று (ஜனவரி 3) முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து கூறினர். அப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். அரசு ஊழியர்களும் முதல்வருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதன் பிறகு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ADVERTISEMENT

இது 23 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், ஆறே முக்கால் லட்சம் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை நிறைவேறியுள்ளதாகவும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஓய்வூதியத்துடன் சேர்த்து, அகவிலைப்படி (DA) மற்றும் இறப்புப் பணிக்கொடையாக (Death Gratuity) 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார். எங்களது நான்கரை ஆண்டுகால போராட்டத்துக்கு முடிவு வந்துள்ளது.

ADVERTISEMENT

2003-க்குப் பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் (சுமார் 48,000 பேர்) பயனடையும் வகையில் கருணை ஊதியம் அறிவிக்கப்பட்டதற்கும் முதல்வருக்கு நன்றி.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜனவரி 6-ஆம் தேதி முதல் நடத்தவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ ரத்து செய்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட மீதமுள்ள கோரிக்கைகளையும் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே அரசு நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வின்செண்ட் பால்ராஜ் கூறினார்.

இதற்கான விதிமுறைகள் எப்போது வகுக்கப்படும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”இந்த அறிவிப்புக்கு எதிராக விதிமுறைகள் வகுக்கப்போவதில்லை. எப்படி வந்தாலும் அதுகுறித்து முதல்வரிடம் முறையிடுவோம். இந்த நிதியாண்டிலேயே இதை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறோம். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறோம். ” என்றனர்.

இந்தசூழலில் இடைநிலை ஆசிரியர்களும் தங்களது கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share