தமிழ்நாட்டுக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காவிரி நதி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. 

ADVERTISEMENT

இந்த சூழலில்  காவிரியின் கீழ்படுகை மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இடையே சமூகத் தீர்வு காண உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன. 

அந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் மாதம்தோறும் கூடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான உத்தரவை பிறப்பித்து வருகிறது. 

ADVERTISEMENT

இதுவரை 51 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 

52 ஆவது கூட்டம் இன்று (ஜூன் 23) டெல்லியில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சத்ய பிரதா சாகு, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

அப்போது கர்நாடகா சார்பில், நீர்த்தேக்கங்களில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டது. 

இதற்கு தமிழ்நாடு சார்பில், கோடை காலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் நீரை கர்நாடகா பயன்படுத்திவிட்டு நீர்த்தேக்கங்களில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியது. 

தொடர்ந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். 

இந்த சூழலில் ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி தண்ணீர், ஜூலை மாதத்துக்கு 31.24 டிஎம்சி தண்ணீர் என மொத்தம் 40 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share