அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் TAPS” அறிமுகம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Stalin

“பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 3) அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 8.22 லட்சம் அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். இதில் 1.98 லட்சம் பேர் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழும், 6.24 லட்சம் பேர் பங்களிப்பு திட்டத்தின் கீழும் உள்ளனர். ஓய்வூதிய செலவு ஆண்டுக்கு 41,290 கோடி ரூபாய் என்று 2025-26 நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, ஓய்வு பெறும் போது கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும், அகவிலை உயர்வு (DA) திருத்தங்களும் தானாகவே பொருந்தும். இத்திட்டம் ஊழியர்களுக்கு நிதி உறுதித்தன்மையை அளிப்பதால், பெரிதும் விரும்பப்படுகிறது.

ஆனால், 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS அல்லது NPS) அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழியர் மற்றும் அரசு தலா 10 சதவீதம் பங்களிப்பு செலுத்தி, சந்தை அடிப்படையில் முதலீடு செய்யப்படுகிறது. சந்தை ஏற்ற இறக்கத்தால் ஓய்வூதிய தொகை நிச்சயமற்றதாக இருப்பதால், இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் பழைய திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று அரசு தரப்பில் கருதப்படுகிறது.

ADVERTISEMENT
திமுக வாக்குறுதி

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம்” என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் உறுதியளித்த படி திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்கங்கள் (ஜாக்டோ-ஜியோ உள்ளிட்டவை) தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த ஆண்டுகளில் பலமுறை ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜனவரி 6ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்தது.

ADVERTISEMENT
ககன்தீப் சிங் பேடி குழு

இதற்கிடையே, 2025 பிப்ரவரியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டம் (OPS), பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS), மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) ஆகியவற்றை ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க இக்குழு பணிக்கப்பட்டது.கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி இக்குழு தனது இறுதி அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

இதனிடையே கடந்த 22ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது பழைய ஓய்வூதிய திட்ட விவகாரத்தில் முதல்வர் இன்று (ஜனவரி 3) முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)

இந்நிலையில் இன்று தமிழ்நாடு உறுதியளித்த ஓய்வூதிய திட்டத்தை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களில் 22 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், “பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme – TAPS)” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்” என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • இதன் அடிப்படையில் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும். 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.
  • பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படும்.
  • ஓய்வூதியதாரர் இறந்தால் அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். இதில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு தரப்படும். பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share