இஸ்லாமியர்கள் இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? – வக்ஃப் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி!

Published On:

| By christopher

Will Muslims be included in Hindu boards?: SC questioned union govt

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை இன்று (ஏப்ரல் 16) விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ”வக்ஃப் வாரியங்களில் இந்துக்கள் இடம்பெறுவது போல், இந்து அறக்கட்டளைகளில் இஸ்லாமியர்கள் இடம்பெற முடியுமா?” என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. Will Muslims be included in Hindu boards?: SC questioned union govt

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் எம்பி அசாதுதீன் ஒவைசி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆகியோர் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் என சுமார் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”இந்த வழக்குகளை தாங்களே விசாரிக்க வேண்டுமா அல்லது சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்ப வேண்டுமா என்பதையும் என்னென்ன விஷயங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்” என நீதிபதிகள் அறிவித்தனர்.

பின்னர், “அனைத்து வழக்குகளையும் தனித்தனியாக விசாரிப்பது என்பது இயலாத காரியம். எனவே வாதங்களை முன்வைக்கக்கூடிய வழக்கறிஞர்கள் சொன்னதையே திரும்பி திரும்பி சொல்வதை தவிர்க்க வேண்டும்” என தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து மனுதாரர்களில் ஒருவரின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”வக்ஃப் திருத்தச் சட்டத்தில் உள்ள பல விதிகள் அரசியலமைப்பின் 26வது பிரிவை மீறுகின்றன. அப்பிரிவு, பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு உட்பட்டு மத விவகாரங்களை நிர்வகிக்க சுதந்திரம், ஒவ்வொரு மதப் பிரிவினருக்கும் உரிமை உண்டு என குறிப்பிடுகிறது. ஆனால் புதிய சட்டத்தின் மூலம், வக்ஃப் சொத்துகளை நிர்வகிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது.

முறையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும், மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நீண்டகாலமாகப் பயன்படுத்துவதன் அடிப்படையில் அது வக்ஃப் சொத்தாக கருதப்படும். ஆனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில், சர்ச்சைக்குரிய அல்லது அரசு நிலமாக இருக்கும் பட்சத்தில் அது வக்ஃப் சொத்தாக இருக்காது என தெரிவிக்கிறது. அதே போன்று வக்ஃப் பத்திரம் கட்டாயம் என புதிய சட்டம் கூறுகிறது. அது எப்படி சாத்தியமாகும்?” என கபில் சிபில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, “அதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது. பத்திரம் இருந்தால் அது போலிகளை தவிர்க்க உதவும் தானே?” என நீதிபதிகள் பதில் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “அது அவ்வளவு சுலபமானது கிடையாது. 300 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு வக்ஃப் சொத்திற்கு அரசு தற்போது பத்திரம் கேட்கிறது என்றால் அதை எங்கே இருந்து எடுத்து தர முடியும்?” என கபில் சிபல் வாதிட்டார்.

தொடர்ந்து மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ”நாட்டில் மொத்தமுள்ள 8 லட்சம் வக்ஃப் சொத்துக்களில் 4 லட்சம் சொத்துக்கள் பயன்பாடு அடிப்படையில் வந்தது தான்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “டெல்லி உயர் நீதிமன்றம் வக்ஃப் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்பாடு அடிப்படையில் வந்த அனைத்து சொத்துகளும் வக்ஃபுக்கு சொந்தமானது என்பதை தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அதில் சில கவலையளிக்கக்கூடிய விசயமும் உள்ளது” என்று தெரிவித்தார்.

அதற்கு சிங்வி, “நாங்கள் முழுச் சொத்துக்கும் தடை கோரவில்லை, சில விதிகளுக்கு மட்டுமே தடை விதிக்கக் கோருகிறோம்” என்று கூறினார்.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு தான் வக்ஃப் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கூட்டு நாடாளுமன்றக் குழு அதை ஆராய்ந்து, அதன் பின்னர் தான் இரு அவைகளிலும் மீண்டும் நிறைவேற்றப்பட்டது” என்று கூறினார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நோக்கி மத்திய அரசிடம் கடுமையான கேள்விகளை எழுப்பியது. புதிய சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்க்கும் விதியை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, ”மிஸ்டர் மேத்தா, முஸ்லிம்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் சேர்க்க மத்திய அரசு அனுமதிக்குமா? அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், ”நீதிமன்ற தீர்ப்பாலோ அல்லது வேறுவிதமாகவோ பயன்பாடு அடிப்படையில் வக்ஃப் சொத்துகள் ஏற்கப்பட்டிருந்தால், இன்று அது செல்லாது என்று கூறுகிறீர்களா? வக்ஃபின் ஒரு பகுதியாக உள்ள பல மசூதிகள் 13, 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. அவற்றுக்கான ஆவணங்களை வழங்குவது சாத்தியமற்றது.

பயன்பாடு அடிப்படையில் வக்ஃப் சொத்துகளாக நீண்ட காலமாக இருக்கும் அத்தகைய சொத்துகளை நீங்கள் எவ்வாறு பதிவு செய்வீர்கள்? அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்?

ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளில் பயன்பாடு அடிப்படையிலான வக்ஃப் சொத்துகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை ரத்து செய்தால், அது ஒரு பிரச்சனையாக மாறும்.

ஒரு நிலம் வக்புக்கு சொந்தமானது என ஒருவர் கூறுகிறார். அரசாங்கத்திற்கு சொந்தமானது என அரசாங்கம் சொல்கிறது. ஆனால், அதை உறுதிப்படுத்தும் அதிகாரத்தை அரசு அதிகாரியான மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்படுகிறது, அடுத்தது என்ன நடக்கும் என்பதை தெளிவாக யோசிக்க முடிகிறது அல்லவா? அவ்வாறு இருப்பது நியாயமானதுதானா?” என்று தலைமை நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.

உச்சநீதிமன்ற அமர்வு எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்ட தலைமை நீதிபதி வழக்கு விசாரணையை நாளை (ஏப்ரல் 17) மதியம் 2 மணிக்கு ஒத்தி வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share